Sunday, October 20

எனை என்ன செய்தாய்..

தொடர்ந்து என்னை வாசித்து வருபவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! புதியவருக்கு இந்த பதிவு உங்களுக்கு சலிப்பை தரக்கூடும். இடது பக்கம்  "மேகம் தொட்டவை" பகுதியில் உள்ளதை வாசித்து விட்டு வாருங்கள்.

மிழ் பதிவுலகம் ரொம்ப பெரியது. நான் எங்கேயோ ஒரு மூலையில இருக்கேன். பிரபலங்களின் பதிவுகளை வாசிக்கும் பலருக்கு என் எழுத்தெல்லாம் ஒன்னுமே கிடையாது. ஆனாலும் என்னையும் வளர்த்து விடும் உங்களின் நல்லெண்ணம் தான் இந்த மாதிரி எல்லாம் பேசவைக்குது.

கொஞ்சம் எமோசனல் ஆசாமி தான் நான். எனக்கும் உங்களுக்குமான இந்த இணையத்தொடர்பு வளரணும்னு நிறைய கனவுகளோடு.., தொடர்ந்து வாசிங்க.. பின்னூட்டத்தில கருத்துக்களை சொல்லுங்க.. பிடிச்சுருந்தா ஷேர் பண்ணுங்க...'ன்னு வழக்கமான டெம்ப்ளேட் வார்த்தைகளை சொல்லி இரண்டாவது வருடத்திக்குள் அடி எடுத்து வைக்கும் ஆறாவது சக்கரத்தின், எழுத்துக்களை நேசிக்கும் உங்களை நன்றி சொல்லி என் கடன் தீர்க்க முடியாமல், வார்த்தைகளை தேடி விரைகிறேன்....



"பேசத்தெரியாத வயலின் கலைஞனுக்கு இசை தான் அவனது மொழி" 

- சீனப் பழமொழி ஒன்றின் தமிழ் ஆக்கம் இது. எனக்கு எப்படி சீன மொழி தெரியும்னு கேட்காதிங்க. எங்கேயோ படிச்சதை சொன்னேன். அந்த பழமொழியின் அடிநாதம் எனக்கும் பொருந்தும்.

எனக்கு எல்லா விடயத்திலும் ஒரு கருத்து இருக்கும். என் உடன்பாடு மற்றவருக்கு வேறு விதமாக இருக்கும் என தெரிந்த காரணத்தால், நான் யாரோடும் என் கருத்தினை வலிந்து திணிக்க விரும்புவது இல்லை. வீணான விவாதமோ இல்லை அதை கட்டாயப்படுத்தி  வலியுறுத்தவோ எண்ணியல்லை. என் கருத்து தவறென தெரியும் பட்சத்தில் அதை நான் மாற்றிக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டியதும் இல்லை.

அப்படியான எனக்கு, என் கருத்துக்களை பதிய, நான் விரும்புவதை சொல்ல, மற்றவர், என்  எண்ணங்களை பற்றி தெரிந்துகொள்ள நானே உருவாக்கிய இடம் தான் இந்த "ஆறாவது சக்கரம்". என் வார்த்தைகளால், என் எண்ணங்களால், எனக்கான அடையாளத்தை இந்த ஆறாவது சக்கரத்தில் நானே விரும்பி ஏற்றிக்கொண்டிருக்கின்றேன். என் எழுத்து தான், மௌனித்துப்போன என் எண்ணங்களின் மொழி!

ரொம்ப பழம் மாதிரி பேசிட்டு இருக்கேன் இல்லையா? நமக்கு இது சரிபட்டு வராது. சொல்ல வேண்டியதை கொஞ்சம் தெளிவா விளங்குற மாதிரி சொன்னால் தான் நானும் முழுசா படிப்பேன். ரொம்ப ஆழமான வார்த்தைகள் இருந்தால் மேலோட்டமா படிச்சுட்டு மிச்சத்தை விட்டிடுவேன். அதுனால இப்படி பஞ்சாமிர்தம் எல்லாம் வேணாம். என் வசதியான எழுத்து நடையில சாதாரணமாவே சொல்லுறேன் கேளுங்க!

அது என்னவோ தெரியல.. இந்த பதிவு தளம் எழுத ஆரம்பிச்ச பிறகு முன்னரை விடவும் என்னை சுத்தி நடக்குறதை எல்லாம் ரொம்ப தீவிரமா கவனிக்க தொடங்கிட்டேன். எனக்கு தோனுறதெல்லாம்  இங்க முழுசா எழுதுறேன்னு சொல்லமுடியாது. சிலநேரம், இதை எல்லாம் எழுதி என்ன நடக்க போகுதுன்னு, சில விசயங்களை எழுத ஆரம்பிச்சு பாதியிலேயே, தேவை இல்லைன்னு நிறுத்திடுவேன். இன்னும் சிலதை யோசிச்சு வைச்சுட்டு பின்னால எழுதுவோம்னு சோம்பேறித்தனத்தில எழுதாமலே விட்டுருவேன். அப்படியும் சொல்லனுன்னு ஆசை வந்தால், பதிவுகளில் எழுத தோன்றும் சிலதை என் முகப்புத்தகம் status மூலம் சொல்லிட்டு இருந்துடுவேன். 

ஆனால், எவ்வளோதான் சொல்லுங்க! தொடர்ந்து எழுதனும்னு ஆசை வருதுன்னா அதுக்கு  உங்க எல்லோரோட லைக்ஸ் தான் முதல் காரணம். சிலநேரம், எனக்கே முழு திருப்தி இல்லாமல் எழுதினதை கூட உங்களில் பலருக்கு ரொம்ப பிடிச்சுப்போய்  அதை நீங்க பாராட்டும் போது "அட! உண்மையாவே நல்லாத்தான் எழுதிருக்கோமா?" ன்னு ஒரு சந்தேகம் கலந்த சந்தோசம் வந்துரும்.

என்ன செய்யுறது, பாராட்டுக்காக ஏங்குற மனுஷ ஜென்மம் தானே நானும்! இதை எல்லாத்தையும் தாண்டி சில சந்தோசங்களை இந்த பதிவுலகம் தருகிறது. அதை பார்க்கும் போது தான் "எனை என்ன செய்தாய் பதிவுலகே?"ன்னு கேட்கத்தோணுது.

ஆரம்பிக்கும் போது, எனக்கு கவிதை எழுதனும்னு ஆசை இருக்கவே இல்லை! கதை சுத்தமாவே எழுதவே வராது! நான் பார்க்கும் சினிமா பத்தின அனுபவங்களை பகிர்ந்துக்கனும்னு ஆசை இருந்தது. வாசிக்குறவங்களை எப்பிடி தொடர்ந்து என் வலைமனைக்குள்ள வரவலைக்கனும்னு நிறைய யோசிச்சேன். கிடைக்குற நேரத்துல ஏதாச்சும் கொஞ்சமாவது எழுதனும்னு நினைச்சேன். அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துக்கொள்ளுற இடமாகத்தான் எனக்கு இந்த வலைமனை இருந்தது.

நேற்றோடு இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த தளம். ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பார்வையுற்ற உங்கள் அனைவருக்கும் இன்டர்நெட் உள்ளவரை என் மனம் நன்றி பாடும்!! என் பதிவுகளில் பின்னூட்டத்தில் வந்து வாழ்த்திய மனங்களை நன்றி சொல்லி பாராட்ட உண்மையிலேயே வார்த்தை இல்லை. 

எழுதவேண்டும் என்கிற ஆர்வம் தான் இதை ஆரம்பிப்பதற்கு அடிகோலாக இருந்தது. பின்பு இதை தொடந்து எழுதத்தூண்டிய ஒரே காரணி நண்பர்களாகிய உங்கள் வாழ்த்துக்களும் பாரட்டுகளும் மட்டுமே. 

அடுத்த பதிவு, ஆறாவது சக்கரம் பற்றிய சில சுவாரஷ்யங்கள்.. 

Post Comment

No comments: