Tuesday, August 27

ராஜாத்தி ராஜா

நானும் அவளும் இசைஞானியின் தீவிரமான ரசிகர்கள். 

இருவருமே இணைந்து, ஒன்றாக அமர்ந்து பாடல் ரசிப்பதும், இளையராஜாவின் இசையை நினைத்து உருகுவதும், அந்த பாடல்களின் சிறப்பை பற்றியெல்லாம் பேசித்தீர்ப்பதிலும் பல நாளிகைகள் கழிந்ததுண்டு. 

எல்லாவற்றிலும் அதிகமாக நான் அவளை நேசித்திருக்கிறேன். அவளது 36 வயதில் அவள் இறந்துவிட்டால்.இன்று சட்டென யூ-டியூப்'பில் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்த போது, நான் என்னை கட்டுப்படுத்தமுடியாமல் அழுதுவிட்டேன். ராஜா சாருடைய இசை என் ஞாபகங்களை எப்போதுமே உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இன்றும் என் மனைவி என் அருகிலேயே இருப்பதை உணர்கிறேன். நான் கேட்ட இந்த பாடல் இளையராஜாவின் பாடல்களிலேயே மிகவும் சிறந்தது. இந்த பாடலுக்கு வேறெந்த பாடலும் இணை இல்லை!

-----------------------------------------------------------------------------------------------------------------------


மேலே நீங்கள் வாசித்தது, இணையத்தில் இளையராஜாவின் பாடல் காணொளியொன்றின் கீழே, ரசிகர் ஒருவரால் எழுதப்படிருந்த பின்னூட்டமொன்றின் தமிழாக்கம். 

அந்த வரிகளில் இருக்கும் யதார்த்தம் பலரின் வாழ்க்கையோடு நிச்சயம் ஒத்துப்போகும். பழைய  நினைவுகளில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்துவிட்டு வரும் சுகானுபவும் பலருக்கு பல சந்தர்பங்களில் வாய்த்திருக்கும். ஒருவரின் இசையை கேட்கும் போது ஞாபகத்தில் வந்துபோகும் அத்தகைய நினைவுகள் அலாதியானவை. அப்படியாக இளையராஜாவின் இசையில் வாய்க்கும் அனுபவம் ஈடு இல்லாதவொன்று.

கடந்த சில நாட்களாக இளையராஜாவின் இசையை தீவிரமாக ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், இசைஞானி பற்றிய செய்திகளையும், அவரது நேரடி இசை நிகழ்வுகளில் இடம்பெற்ற பாடல்களையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். அவற்றில் இருந்து ஒரு சில தகவல்கள் இங்கே...

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

ந்த வருடத்தின் இளையராஜா-இசைக்கச்சேரிகளில் மற்றுமொரு நிகழ்வு லண்டனில் The o2 Arena'வில் நடந்து முடிந்திருக்கிறது. லண்டனில் வாழும் தமிழர்களுக்கு இவ்வருடத்தின் பிரம்மாண்ட திருவிழா இதுவாகத்தான் இருந்திருக்கும்.
லண்டன், The o2 Arena.
இம்முறை இசைஞானியோடு கலைஞானியும் இணைந்து ஒரே மேடையில் காட்சியளித்திருப்பது மேலும் ஒரு சிறப்பு. நிகழ்வுக்கு 2 மணித்தியாலங்கள் பிறகு வந்த கமல் தொடர்ந்து 3 மணிநேரம் அங்கேயே இருந்து  கிட்டத்தட்ட 8 பாடல்கள் வரையிலும் பாடியதாக நண்பர் ஹில்டன் பிரட்மன் (தமிழர் தான்!) தெரிவித்தார். உலக நாயகனும், SPB'யும் இளையராஜாவோடு மேடையில் ஒரு சில நிமிடங்கள் நிற்பதை பார்க்க கிடைத்ததை, திரையில் கேட்ட பாடல்களின் அதே இசையை இசைக்க கேட்டதை,  அரங்கத்தில் இருந்தபடி இந்த நிகழ்வை நேரடியாக ரசித்ததை எல்லாம் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த நிகழ்வின் முழுமையான தொகுப்பு, இணையத்திலும் காணக்கிடைக்கும்.
8000 பேர் வரையில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் இசைநிகழ்வு நடைபெற்ற அரங்கம் இதுதான்.
கமல், சின்மயியோடு இணைந்து பாடியதை தனது கைப்பேசியில் படம்பிடித்து பதிவேற்றிய முகம் அறியாத  ரசிகருக்கு நன்றிகளும் வணக்கங்களும்..


 ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

ராஜாவின் லண்டன் இசைநிகழ்வை பற்றிய ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியை தேடியபோது, கிடைத்ததுதான் அவரது அடுத்த திரைப்படம் பற்றிய செய்தி. 

"மேகா" என்கிற தமிழ் திரைப்படம் ஒன்றிற்காக ஹங்கேரி நாட்டில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் காணொளியை பார்த்தேன். வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் இசைக்க, அவர்களுக்கு தனது இசை ஞானப்பால் ஊட்டிகொண்டிருந்தார் ராஜா. அந்த காணொளியில் ஒரு பாடல் எங்கேயோ கேட்ட இசையின் தாக்கத்தை தந்த போது, கவனித்ததில் அது அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் S.ஜானகி அவர்கள் பாடிய ஒரு பாடல். அந்த பாடலை இந்த புதிய படத்திற்காக மீள்பதிவு செய்துகொண்டிருந்தார்கள்.

தெய்வீகமான இசையை , ஆன்மாவோடு பேசும் தாக்கத்தை இசைஞானியின் பல பாடல்கள் தந்திருக்கின்றன. இந்தப்பாடலும் அப்படி ஒரு பாடல் தான். 

திரைப்பட இயக்குனர் மகேந்திரன் அவர்களுடைய படம் ஒன்றிற்காக ராஜா அவர்கள் இசையமைத்த மெட்டொன்றை மகேந்திரன் கைவிட, அதை பாரதிராஜா தனது படத்திற்காக கேட்டு வாங்கினார். ஆனாலும் அந்த பாடல் ஒலிநாடாவில் வந்ததே ஒழிய திரைப்படத்தில் வரவில்லை. 

அப்படி திரையில் வராமல் விட்டாலும் இந்த பாடல் அழியா வரம் பெற்றுக்கொண்ட பாடல் தான். மீண்டும் புதிய ஒலியமைப்பில், கேட்க கிடைப்பது சம்திங் இன்டரஸ்டிங். 

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

நின்னுக்கோரி வர்ணம்..
ஒரு பூங்காவனம்...
ராஜா.. ராஜாத்தி ராஜன் இந்த...
ரோஜா பூ ஆடி வந்தது..
தூங்காத விழிகள்..
வா.. வா.. அன்பே அன்பே..

இந்த பாடல்களுக்கிடையிலான ஒற்றுமை பற்றி என் முகப்புத்தகத்தில் வினவியபோது, முதல் நபராய் வந்து சரியான பதிலை சொன்னார் இசைஞானியின் ஒரு அடிமை. பெயர் பிரசன்னா. எங்கள் நட்பு பாடசாலைக்கால நட்பு. விவாத போட்டிகளில் எதிர் எதிர் அணிகளில் தத்தமது பாடசாலைக்காக விவாதித்துக்கொண்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனாலும் இசை பற்றிய உரையாடல்களில் நாங்கள் ஒரே அணி. அந்த ஆரோக்யமான நட்பில் இசைஞானியின் பங்கு அதிகம்.

இந்த பாடல்கள் எல்லாமே ஒரே திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்டவை என்பது தான் என் கேள்விக்கான அந்த பதில். கடந்த வெள்ளியன்று முதல் தடவையாக "அக்னி நட்சத்திரம்"  படம் பார்க்க கிடைத்தது. படத்தின் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வாலி, கேமரா பி.சி.ஸ்ரீராம் என படத்தின் பலம் மிகப்பெரியது. 80களில் கோலோச்சிய இரண்டு கதாநாயகர்களின் கால்ஷீட்களை ஒரே நேரத்தில் வாங்கிக்கொண்டு இப்படத்தை எடுத்துக்காட்டியிருந்தார் மணி. 

மேலே சொன்ன பாடல்களை எல்லாம் நான் வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் (இரண்டு பாடலை தவிர) இந்த பாடல்கள் அனைத்துமே ஒரே திரைப்படத்தில் தான் உள்ளது என்று அறிந்ததும், சற்று அதிசயித்து போனேன்.

பெரிய பெரிய நடிகர்களின் பெயரை கொண்டு படங்களை வெற்றிபெறச்செய்த காலத்தில், ஒரு இசையமைப்பாளரின் பெயர் இருந்தாலே திரைப்படங்கள் வியாபாரம் செய்யப்பட்டதுதான் ராஜாவின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 15 வருடகாலம் இது நிகழ்ந்திருக்கிறது. (தகவல் - விஜய் டிவி)

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

காத்திருந்து காத்திருந்து ஒரு வழியாக மேகா படப்பாடல்களை பாடல் வெளியான அன்றே கேட்க தொடங்கிவிட்டேன். இந்த 7 பாடல்களும் இசைக்கருவிகளின் மாயம் நிறைந்திருக்கிறது. வயலின், பியானோ, குழலிசை, கிட்டார் என அனைத்தையும் குலைத்து, கலவையாக மீண்டும் இசை விருந்து படைத்திருக்கிறார் இசைஞானி. அவரது குரலில் இம்முறை இரண்டு பாடல்கள். மீள்பதிவு செய்யப்பட்ட "புத்தம் புது காலை" பாடல் "டிவைன்" ட்ரீட்!

பாடல்கள் ஒவ்வொன்றையும் குறித்து எழுதினால் இன்னொரு தனிப்பதிவு எழுதிவிடலாம். எல்லா பாடல்களுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். செம ஹிட் ஆல்பம்!

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

ராஜ் டிவி நிறுவனத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு செய்து வழங்கிய "என்றென்றும் வாலி"  நிகழ்வில் வாழ்த்திப்பேச வந்திருந்தார் இளையராஜா. ஓரிரு வார்த்தைகள் சகஜமாக உரையாற்றியவர் அவருக்கு முன் வாலியை வாழ்த்திவிட்டு அமர்ந்தவர்களையும் பாராட்டி விட்டு, 

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.. 

மெய்பொருள் என்றால் என்ன?"

என்று அரங்கத்தை பார்த்து கேட்டுவிட்டு எவ்வித குறிப்புகளும் இல்லாமல் பேசத்தொடங்கினார், 

(ஜதிகளை போல குரல் ஒலிக்க ஆரம்பித்து)

"ஆடையின்னு பார்த்தால், அது நூலு..
நூலுன்னு பார்த்தால் அது பஞ்சு..
பஞ்சுன்னு பார்த்தால் பருத்தி..
பருத்தின்னு பார்த்தால் செடி..
செடின்னு பார்த்தால் விதை..
விதைன்னு பார்த்தால் மண்ணு..
மண்ணுன்னு பார்த்தால் நெருப்பு.. 

ஏன்னா சூரியன்ல இருந்து வந்துருக்கு மண்ணு.."

(என்று ஒரு சிறு விளக்கத்தை கொடுத்து, ஆரோகணத்தில் குரல் உயர்த்தினார்)

மண்ணுன்னு பார்த்தால் நெருப்பு..
நெருப்பு அலைவதனால் அது நீர்..
நீர் அலைவதானால் அது காற்று..
காற்று என்பது வானம்..
வானம் என்பது வெளி..
வெளி என்பது அடங்காதது..
அடங்காதது என்பது மனம்..
மனம் என்பது வார்த்தை..
வார்த்தை என்பது ஒலி..

(அரங்கம் அதிர ஆரம்பித்தது.. அவரோகணத்தில் குரல் இறங்கி வந்தது..)

வார்த்தை என்பது ஒலி..
ஒலி என்பது விளக்குவது..
விளக்குவது என்பது ஒளி..
ஒளி என்பது அறிவு..
அறிவு என்பதே அன்பு..
அன்பு என்பதே அருள்..
அருள் என்பதே ஆத்மா..
ஆத்மா என்பதே............ அனைத்தும்!!"

இதை சொல்லி முடித்தவர், வாலியை நான் வாழ்த்துவது அந்த தமிழ் தாயையே வாழ்த்துவது போலாகும் என் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கரவொலி அடங்க நேரமானது! (காணொளி இங்கே)

♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

வ்வருடம் கனடா டொராண்டோவில் நடந்த "எங்கேயும் எப்போதும் ராஜா" இசைநிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு பாடலை பற்றிய அறிமுகத்தின் போது சொன்னது இது..

"ராஜா சார்'க்கு மத்தவங்க விசில் அடிக்குறது பிடிக்காது. ஏன்னா அவரு மட்டும் தான் அடிப்பாரு. அவரே ஒருமுறை உடல் சுகயீனதால் படுத்திருந்த போது, திரைப்படம் ஒன்றில் இசையமைக்க வேண்டிய பாடல் மெட்டொன்றை, விசில் சத்தம் மூலமாக காசெட்டில் பதிவு செய்து தந்திருக்கிறார். அந்த பாடலை பாடியவர் அண்ணன் SPB அவர்கள். 

அண்ணனுக்கு டெங்கு நோய் வந்து எழுந்து நடக்கவே முடியாம ஊருல கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாரு. ஆனால், இசைஞானிக்காக 23 மணிநேரம் பயணம் செய்து எங்களுக்காக பாடுவதற்காக இங்கே வந்திருக்கிறார்."

என்று மாற்றி மாற்றி பெருமைகளை அடுக்கியவர்..

"கெட்டதுலையும் ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்க.. spb அண்ணனை கடித்த கொசு இப்போ நல்லா பாடுறதா கேள்வி!"

என்று அரங்கத்தை கலகலப்பூட்டினார். 

விசிலில் மெட்டமைத்த பாடல் இதுதான்.

Post Comment

No comments: