Thursday, August 15

ஹாட் சாக்லேட்

"சுவீ.. ஐ அம் இன்! நீ எங்க..?"

-சொன்ன இடத்துக்கு சரியா இருபது நிமிசம் தாமதமா வந்து சேர்ந்தாரு நம்ம ஹீரோ ஜீவா. 

போனில் இடம் கேட்டுக்கொண்டான்.  

"கேஷியர் பக்கத்துல லெப்ட்டு திரும்பி நேரா உள்ள வா.. நாலாவது டேபிள்."

-இது  நம்ம ஹீரோயின். ஸ்வேதா. செல்லமா சுவீ.

இவங்களோட கடைசி சந்திப்பு இது. ரொம்பகாலமா லவ்வா தான் இருந்தாங்க. கடைசியில எல்லாருக்கும் மாதிரி இவங்களுக்கும் ஒரு அர்த்தமில்லாத இடைவெளி. எவ்வளவோ தடவை ஓட்ட வைக்கலாம்னு பார்த்தாங்க. ஆனால் முடியல. ஒரு நாள் போன்ல ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. நிரந்தரமா பிரியுறதுன்னு. சிட்டில எல்லாத்துக்குமே பார்ட்டி தான். இன்னைக்கு நம்ம ஹீரோ ஹீரோயினோட பிரேக் அப் பார்ட்டி. ஒரு காபி டே ரெஸ்டாரன்ட். சாயங்கால நேரம்.

சொன்னதுபோலவே நாலாவது டேபிள்'ல ஸ்வேதா. கண்ணுல ஒரு சின்ன கலவரம். அதை காட்டிக்ககூடாதுன்னு கையில ஸ்மார்ட்போன் சீண்டல்கள். 

ஹீரோ என்ட்ரி ஆனாரு. ஸ்வேதா எதிர்ல சிம்மாசனமிட்டாரு. ஏரியால அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்தாரு. சொல்லிக்கும்படியா பெரியகூட்டம் இல்லை. கொஞ்சம் நிதானித்து...

சாரி சுவீ.. ப்ரெண்டோட பைக் வாங்கிட்டு வர்ற வழியில ஒரே டிராபிக். அதுவும் இல்லாம இந்த இடத்தை கண்டு பிடிக்குறதுக்குள்ள...

ஓகே. நீ ஒன்னும் சொல்ல வேணாம். 

-பேச ஆரம்பித்தவனை பேச விடாமல் தொடர்ந்தாள்..

இனிமே நமக்குள்ள ஒன்னுமே  இல்லைன்னு நேருல பார்த்து சொல்லனும்'ன்னு தான் வெயிட் பண்ணினேன். ஓ.கே?.... நீ இனிமே எதுக்காகவும் கால் பண்ணாத. நானும் பண்ண மாட்டேன். 

முகம் சுழித்தாள். மீண்டும் முகம் பார்த்தாள்.

உனக்கு ஹாட் சாக்லேட் வித் காரமெல் சொல்லிருக்கேன். குடிச்சுட்டு நீ உன் வீட்டுக்கு போ. தேங்க்ஸ் போர் எவரிதிங்! இனிமேல் உனக்கும் எனக்கும் எதுவுமே கிடையாது. நத்திங் பிட்வீன் அஸ். நாட் ஈவன் பிரெண்ட்ஸ். குட் பை!

சொல்லிவிட்டு எழுந்து சென்றாள். ஹாட் சாக்லேட் வந்து சேர்ந்தது. நேரத்தை பார்த்துவிட்டு எடுத்து குடிக்க ஆரம்பித்தான். 

இந்த இடத்துல ஒன்னு சொல்லியே ஆகனும். ஸ்வேதா ஒரு மாடர்ன் கேர்ள். அவளுக்கு அவங்க அப்பா கொடுக்குற பாக்கெட் மணி நம்ம ஹீரோவோட மாச வருமானம். அவ்வளோ பெரிய இடத்து பொண்ணு எப்பிடி இவனுக்கு விழுந்துச்சுன்னு கேட்குறிங்களா? அதெல்லாம் சொல்லப் போனால் என் கதையோட ட்விஸ்ட் போயிடும். பிரேக்-அப் ஆகனும்னு வந்தவங்களோட முப்பது நிமிஷம் தான் கதையே.. நம்ம ஹீரோ ஹாட் சாக்லேட் குடிச்சு முடிசுட்டாரு.. இனி....

எழுந்து தன் வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தவன் சாவியை மேஜையில் தவறவிட்டு வந்திருந்தான். நினைவு வந்து மீண்டும் உள்நுழைந்து கேஷியர் அருகில் திரும்பி நான்காவது மேசையில்..

...ஸ்வேதா அமர்ந்திருந்தாள். 

...எக்ஸ் கியுஸ் மீ மிஸ்
மன்னிக்கனும்
முக்கியமான ஒன்னு
மிஸ் பண்ணிட்டு போயிட்டேன்
என் பைக் கீ
எடுக்கலாம்னு வந்தேன்
நீங்க உட்கார்ந்துருகிங்க
சாரி டு டிஸ்டர்ப் யூ..
கேன் ஐ..??

கண்ணீர் கசிந்து, மூக்கு சிவந்து, முகம் வாடியிருந்தது ஸ்வேதாவிற்கு. வெறிக்க வெறிக்க ஜீவாவை பார்த்துகொண்டிருந்தவள் சட்டென எழுந்தாள்.

இரண்டு இளம் ஜோடிகள். ஒரு டை கட்டிய பெரியவர். ஒரு இளம் பெண். மற்றும் சில வெயிடேர்ஸ். எல்லாரும் ஒரே நேரத்துல சொல்லிவைச்ச மாதிரி திரும்பி நாலாவது டேபிள் பக்கம் பார்த்தாங்க.

கரெக்ட்.. அதே பளார் சத்தம்!

நீ எதுக்குடா என்னை லவ் பண்ணின?.. நீ என்ன ஹீரோவா? உனக்காக தானே என் லைப்ல எவ்வளோவோ விஷயத்தை விட்டுகுடுத்துட்டு இருக்கேன்.. நான் போன்னு சொன்னா போயிடுவியா?

....................

அப்போ உனக்கு என்னை வேணாமா??..

....................

இதுக்காகவா.. இதுக்காகவா.. இத்தனை மாசம் என்னை லவ் பண்ணின? வாட் எ ஷேம்?  வாட் ஆர்  யூ?...

....................

டேய்.. உனக்கு என்னை புரிஞ்சுக்க தெரியலையாடா..உனக்கு ஆர்டர் பண்ணின ஹாட் சாக்லேட்  குடிக்கவே டைம் ஆகும். அவ்வளோ சீக்கிரம் நீ போய் இருக்க மாட்டன்னு தான் திரும்பி வந்தேன். 

....................

ஏன்டா.. 
என்னை விட்டுட்டு போக எப்பிடிடா முடிஞ்சுது..
அவ்வளோ சீக்கிரம்...
அவ்வளோ சீக்கிரம் கிளம்பி போய்ட்ட...
 நீ இல்லைன்னதும் எனக்கு அழுகை அழுகையா வந்துடுச்சுடா!... 

....................அழ ஆரம்பித்தாள்!  ஜீவா அருகே நெருங்கி பேச ஆரம்பித்தான்,

சுவீம்மா... 

....................டோன்ட் கால் மீ  "மா".. 
என்னை அப்பிடி கூப்பிடாத. 
நான் யாரு உனக்கு. 
என்னை விட்டுட்டு போன இல்லை.
என் மேல கொஞ்சம் கூட லவ் இல்லை.
அதுனால தானே அந்த ஹாட் சாக்லேட் கூட உனக்கு கணக்கில்லை..

இல்லை!!

ஹ்ம்ம்!!!........ வாட்???!!!........

அது ஹாட்டாவே இல்லை! உன் கோவத்தை மாதிரியே அதுவும்....

....................♥

Post Comment

No comments: