Monday, August 12

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! ☺

நானெல்லாம் பேசாம இருக்குறது ரொம்ப கஷ்டம். வளவளன்னு ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பிடியும் இல்லேன்னா இதை மாதிரி ஏதாச்சும் எழுதி கிறுக்கிட்டாவது இருக்கணும். அதுவும் எழுதுறதுக்கு ஒரு தனி மூட் வேணும். சும்மா நினைச்ச நேரம் எல்லாம் எழுதவும் வராது. இந்த சில நாட்களா ஒரு பக்கம் வேலை முடிஞ்சு வந்தால் சாப்பிட்டு தூங்கிடுறது ஒரு வழக்கமாகிப்போச்சு. தனிமை என்பதையும் அதன் தாக்கம் பற்றியும் என் வலைப்பூவிலேயே நிறைய பதிவுகள் எழுதிட்டேன். சம்பாதிக்குறதும், அதை செலவு பண்ணுறதும் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு! மனுசனா பொறந்துட்டமே..'ன்னு அலுத்துக்கிட்டு வாழவேண்டி இருக்கு!

மனுஷனுக்கு ரொம்ப முக்கியமான தேவை என்ன?...

எல்லாரும் ஏன் இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்காங்க.. என்ன தேவை இவங்களுக்கு? நானும் எதுக்காக இப்பிடி ஒரு வாழ்கையை வாழ்ந்துகிட்டு இருக்கேன்? எதை தேடி இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்கேன்? அப்பிடி சாதரணமா யோசிச்சு பார்த்தேன்.. பதில் கிடைக்கலை.

சரி கொஞ்சம் சீரியஸ்ஸா யோசிச்சு பார்ப்போம்னு கையில ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துகிட்டு உக்கார்ந்துட்டேன்!..

எழுத ஆரம்பிக்கும் முன்னமே சொல்லிடுறேன்.. இது ஒரு தொடர் பதிவு..
 ❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥
றாவது படிக்கும் போது என் லைப்'ல ஒரு பொண்ணு முதல் முறையா என்ட்ரி ஆச்சு. நாங்க தங்கியிருந்த வீட்டு உரிமையாளரோட பொண்ணு. அவங்க வீட்டுக்கு பின்னாலதான் எங்க வீடு! அப்போ அந்த பொண்ணு கூட பேசுறதெல்லாம் எனக்கு ஏதோ ரஜினி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்குற உணர்ச்சி.. அப்போ வந்த சினிமா பாட்டெல்லாம் ஒன்னு ரெண்டு தடவை கேட்டதுமே பாடமாகிடும். என் வீட்டு வாசல்கதவு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்.. அங்க நின்னு தான் அந்த பொண்ணு எங்க அம்மா கூட கதைக்கும். பொங்கல் தீபாவளி எல்லாம் ரொம்ப பிடிச்ச பண்டிகைகள்.. பலகார விருந்தோம்பல் நடக்கும். அப்படி ஒரு பண்டிகை கால பலகார பரிமாற்றத்தில் தான்  முதல் முறை அந்த பொண்ணு கூட பாஷை பரிமாறினேன் (அட கவிதை!)..

பிறகு நடந்த இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட பேச்சு வார்த்தைகளில் நமக்குள்ள நல்ல மெதமடிக்ஸ் (கணக்கு பண்ணுனா அது தானே வரும்!) உருவாகி நல்ல நண்பர்கள் ஆகிட்டோம். எனக்குள்ள இருந்த தயக்கங்கள் எல்லாம் அந்த பொண்ணுக்கு இருந்த தைரியத்தை பார்த்து இருக்குற இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சுபோச்சு. ரெண்டு பேருக்குமே ஒரே வயசு. படிக்குற வகுப்பும் பாடங்களும் ஒன்னுன்னுறதால பேசுறதுக்கு சந்தர்ப்பங்கள் தானாவே அமைஞ்சது. அந்த நட்பின் மூலமாக இன்னும் பல பள்ளி பருவ தோழிகள் அறிமுகம் ஆனார்கள். பலவருடம் அந்த நட்பு வளர்ந்தது. இந்த இடத்துல நான் ஒன்னு சொல்லியே ஆகனும். ஆனால் கொஞ்சம் டியூன் மாறுது. அதனால இந்த இடம் வேணாம்.. கொஞ்சம் தள்ளி வாங்க.. அடுத்த பந்தியில சொல்லுறேன்..

...அந்த பொண்ணு மேல எனக்கு காதலோ, இல்லேன்னா ஒரு தடமாற்றமான உணர்வோ ஏற்பட முடியாத அளவுக்கு, நட்பு மேல மரியாதையும் அதுக்கு ஒரு அழகான அர்த்தத்தையும் சொல்லி கொடுத்த பெண் அவள். ரொம்ப துரு துருன்னு இருக்குற ஒரு வாயாடி பொண்ணு. ஆனால், கண்களில் தெளிவும், பழகுற விதத்துல யதார்த்தமும் இருக்கும். அவளுக்கு அவங்க அம்மா மேல ரொம்ப பயம். எங்க அம்மா மேல ரொம்ப அன்பும் இருந்தது. இந்த விதம்தான் அவள்மேல நல்ல மரியாதையும் அன்பும் ஏற்படுறதுக்கு காரணமா இருந்தது. இன்னைக்கும் என் facebook நண்பர்களில் அவளும் ஒருத்தி. "முதல் தோழி" என்கிற அடையாளத்தோடு சிறந்த நட்பையும் அழகான நினைவுகளையும் கொடுத்த பெண்ணாக வலம்வரும் தோழி!

ஒரு வேளை ஏதோ ஒரு சம்பவத்தால் அவள் சின்ன வயசுலேயே என்னை காயப்படுத்தி இருந்தாலோ. இல்லேன்னா எனக்கு மனசு கஷ்டப்படும்படி பேசியோ, நடந்தோ இருந்துருந்தால், அதற்கு பிறகு நான் பழகும் எல்லாப் பெண்களிலும் அந்த கசப்பான சம்பவம் நெகடிவ், பிரிண்ட் போட்டு பழக சொல்லி இருக்கும். எங்க வீட்டுக்குள்ள ஏதாச்சும் சண்டைகள் நடந்தாலோ, இல்லேனா நான் அப்பாக்கிட்ட அடிவாங்கி வீச்சு வீச்சுன்னு அழுதாலோ, அடுத்த சந்திப்பில் அவை பற்றிய விசாரணை எதுவுமே இருக்காது. நான் தயங்க கூடாது என்பதில் என்னை விடவும் அவள் கவனமாய் இருந்திருக்கக் கூடும். இன்னைக்கும் நான் பழகும் எல்லா பெண்களிலும் ஏற்படும் மதிப்புக்கு அவளும் ஒரு காங்க்ரிட் தூண்! அவளும் நானும் போடா போடி'ன்னு பேசுனதே இல்லை. அதனாலயோ என்னவோ எந்த பெண் தோழி இடத்திலும் எவ்வளவு யதார்த்தமாக பழகினாலும் "டா" "டி" இலகுவில் வந்து தொலைவதில்லை. நாப் பயிற்சி அவசியப்படுகிறது.. செந்தமிழை போல!
  
இந்த சிறுவயது கதையின் சாரத்திற்காய் அறிவுமதியின் "நட்புக்காலம்" கவிதை தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை துணைக்கு அழைத்து கொள்கிறேன்..


வாழ்க்கையோட அனுபவங்களால் தான் நிகழ்காலத்தை வாழ்ந்துகிட்டு இருக்கோம். எல்லோருக்குமான நாளைய தேவைகள் அவர்களுடைய கடந்தகாலத்தில் இருந்து பிறக்கிறது! எனக்கான தேவைகளும் அப்படித்தான்..

..அந்தகாலத்துல facebook கிடையாது. அப்பப்போ வருகிற  நல்ல சில உணர்வுகள் எப்போவுமே இதயத்துக்கு சமீபமாக "லப்" "டப்" சத்தத்துக்கு சமமா ஹார்மோனியம் வாசிச்சுகிட்டே இருக்கும்.. அதை கொண்டு போய் இன்னொருத்தர் பார்வைக்கு வார்த்தைகளில் தோரணம் கட்டி status-bar'ல தொங்கவிடுற தேவை எல்லாம் இருக்கல. அந்த உணர்வுகளை தொட்டு தடவி அங்கலாய்த்து அனுபவித்து அப்பப்பப்பப்பா...!!!! வாழ்க்கை இன்று போல கடினமாக இல்லாமல் அப்படி ஒரு வசந்தகாலம் இருந்தது நிஜம்தான்..! 

ஆனா இன்னைக்கு எதுக்காக இப்பிடி ஒரு வாழ்கையை வாழ்ந்துகிட்டு இருக்கேன்? எதை தேடி இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்கேன்? என் கடந்தகாலம் எதை எனக்கு உணர்த்தியது? மனசெல்லாம் லயித்திருக்கும் நினைவுகள் அவை.. 
....நினைவுகள் ஊறும்!

Post Comment

No comments: