Friday, July 12

This is அமாரா ஹாலிவுட் அனுபவம் ஹே!

னக்கு நினைவு தெரிஞ்சு நான் தியேட்டர்'ல பார்த்த முதல் ஆங்கில படம் ஜுராசிக் பார்க் தான். அப்போ எனக்கு எட்டு வயசு. கொழும்பு, கொள்ளுபிட்டி  "லிபர்ட்டி" திரை அரங்கத்துல என் அண்ணா'வின் நண்பர் ஒருவர் பணியாளராக இருந்தார். அவருடைய பேருதவியால் டிக்கெட் கிடைத்து அண்ணாவோடு படம் பார்க்க போயிருந்ததாய் ஞாபகம். அதுக்கு பிறகு சில படங்கள், குடும்பத்தோடு பார்க்க போயிருக்கலாம்., ஆனால் ஞாபகத்தில் இல்லை. 



ஊருக்கு போகிற சமயம்., அங்கே என் மாமாவின் மினிதியேட்டர் ஒன்றில் சில ஆங்கில படங்கள் பார்த்திருக்கிறேன். 20 அல்லது 30 பேர் அமரக்கூடிய நீளமான அறையில், சற்றே பெரிய டிவி இருக்கும். VHS Tape மூலமாக அதில் படங்கள் காண்பிக்கப்படும். 90'களில் வெளியான நிறைய தமிழ் படங்களையும் நான் இங்கே தான் பார்த்திருக்கிறேன். அடுத்தபடியாக முதன் முதலில் நண்பர்களோடு திரையரங்கில் பார்த்த ஆங்கில திரைப்படம், "டைட்டானிக்". மீண்டும் கொழும்பில் (மஜெஸ்டிக் சினிமா).

இதெல்லாம் ஏன் இப்போ சொல்லுறேன்னா எனக்கு ஹாலிவுட் படங்களை பற்றிய ஆரம்பகால ஞாபகங்களாக இருப்பவை இவை தான். இதுநாள் வரையில் எத்தினையோ ஆங்கில படங்கள் பார்த்து ரசித்திருக்கிறேன். வலைத்தளங்கள் வாசிக்க தொடங்கிய பிறகு, அண்ணன் ஜாக்கி சேகர், ஹாலிவுட் பாலா, கருந்தேள்.. இன்னபிற ஹாலிவுட் திரைப்பட விமர்சகர்களின் வலைத்தளங்கள் மூலமாக படங்களை தேடிப்பிடித்து பார்த்துவருகிறேன். மட்டுமல்லாமல் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டதும் உண்டு. அப்படியாக நான் சமீபத்தில் பார்த்த சில ஹாலிவுட் படங்களின் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பகுதி.. 


The Call (2013)


நீங்க உங்க ஆபீஸ்'ல ரொம்ப பிஸியா வேலை செய்துகிட்டு இருக்கிங்கன்னு வைச்சுப்போம். உங்க ஆபீஸ் இருக்குற அதே ஏரியால இருந்து உங்களோட தோழியோ உறவுக்காரப்பெண்ணோ உங்களுக்கு அவசரமா கால் பண்ணி, அவங்க வீட்டுக்குள்ள ஒரு திருடன் வந்துட்டதா சொல்லி, தனக்கு உதவியா யாருமே இல்லை'ன்னு பயந்துபோய் பதற்றத்தோட கதறினால் என்ன பண்ணுவீங்க. 

உடனே ஆபீஸ்ல இருந்து வெளிய வந்து டாக்ஸி பிடிச்சு அவங்க வீட்டுக்கு போயிட்டு திருடனை அடிச்சுபோட்டு அவங்களை காப்பாத்துவிங்களா? ...................நாங்க என்ன அவ்வளோ பெரிய அப்பாடக்கரா? போன்ல அவங்க அலறுற சத்தத்தை கேட்டதுமே சும்மா கலங்கி போயிடுவோமா இல்லையா..? என்ன பண்ணுறது ஏது பண்ணுறதுன்னு தெரியாம வடிவேலு மாதிரி "அப்டியே ஷாக் ஆயிடுவோம்". ஆனால் உதவி செய்வதையே தொழிலா வைச்சுருக்குற ஒருத்தருக்கு கால் வந்தால்.., அதுவும் முன்பின் தெரியாத, இருக்கிற இடம் தெரியாத ஒரு பெண்ணுக்கு உதவி தேவைபட்டால்...

இப்படி பிரச்சினையில மாட்டிக்குறவங்களுக்கு, உதவி செய்றதுக்காகவே அமெரிக்காவில ஒரு helpline இருக்குதுன்னு ஹாலிவுட் படம் பார்த்து தான் நாங்களே தெரிஞ்சு வைச்சுருக்கோம். நிறைய ஹாலிவுட் படங்களில் 911 என்கிற அவசர உதவி எண் பற்றிய காட்சிகள் இருக்கும். அங்க வேலை செய்றவங்களோட பின்னணியில் ஒரு கதை தான் "The Call". 

"அங்காடி தெரு" படம் வந்த பிறகு தான் ஷாப்பிங் சென்டர்ல வேலை செய்றவங்களுக்கு இப்பிடியெல்லாம் கஷ்டம் இருக்குமான்னு ஒரு கணம் நினைக்க வைச்சுது. 911 அவசர உதவி நிலையத்துல வேலை செய்றவங்களோட மனநிலை எப்பிடி எல்லாம் இருக்கும்னு காட்டுறதுக்கு இந்த படம் நல்ல எடுத்துகாட்டு. உதவிகேட்டு கால் பண்ணும் போது அங்க வேலை செய்றவங்களோட இயலாமை, முடியாமை, ஆற்றாமை..மற்ற எல்லா ஆமைகளையும் நடிப்புல காட்டுறதுன்னுறது சாதாரண விஷயம் இல்லை. அந்த நடிப்பு தான் படத்துக்கு பிளஸ் பாயிண்ட். த்ரில்லர் சப்ஜெக்ட் படம். நல்ல இண்டரஸ்டிங்கான படம் தான். 

ஜேம்ஸ் பாண்ட் படமான Die Another Day, மற்றும் X-Men படங்களில் பார்த்த நடிகை Halle Berry தான் இந்த படத்தோட ஹீரோ(யின்). ஒருத்தருக்கு உதவி பண்ணனும்னு எப்படி வெறியோட இருப்பாங்கன்னு வாழ்ந்து காட்டிருக்காங்க. "No Reservations" ஒரு படம் இருக்கு. அந்த படத்துல ரொம்ப அழகான சின்ன பொண்ணு நடிச்சுருக்கும்.. குட்டி குட்டி expression எல்லாம் செம்மையா இருக்கும். இந்த படத்துல அப்பிடி ஒரு குட்டி பொண்ணு இல்லை. ஏன்னா அது வளர்ந்து இப்போ பெரிய பொண்ணு ஆயிடுச்சு. அந்த பொண்ணுக்கு தான் நம்ம ஹீரோயின் அக்கா உதவி பண்ணுறாங்க.

இதை தவிர படத்துல என்ன எல்லாம் இருக்கு, கதை என்ன, திரைக்கதை என்ன, டுவிஸ்ட்டு எங்க வரும், கேமரா எப்பிடி, வசனம் எப்பிடி, யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்லுற அளவுக்கு நமக்கு அந்நிய அறிவு இல்லாதபடியினால அடுத்த படத்துக்கு போகலாம். ஜாக்கி சேகர் ஸ்டைல்ல சொல்லனும்னா, "The Call" பார்த்தே தீர வேண்டிய படம்!

Olympus Has Fallen (2013)

உலக  நாடுகளே பார்த்து மிரண்டு போற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனம் "வைட் ஹவுஸ்". அந்த வைட் ஹவுஸ் உள்ளுக்கு கொரில்லா தாக்குதல் நடத்தும் ஒரு கும்பல் நுழைஞ்சு அமெரிக்க ஜனாதிபதியை பணயக்கைதியா பிடிச்சு வைச்சு பேரம் பேசுனா எப்பிடி இருக்கும். அதை தான் Olympus Has Fallen படம் 2 மணித்தியாலத்துல விறுவிறுப்பு குறையாம சொல்லி முடிக்குது.



இந்த மாதிரி எல்லாம் படம் எடுக்குற தைரியமும் சுதந்திரமும் வெளிநாட்டுக்காரனுக்கு தான் இருக்கு. அதை விடவும் தண்ணியா பணத்தை வாரி இறைச்சு அதை திரும்ப வசூலிக்குற வித்தையும் அவனுங்ககிட்ட தான் இருக்கு. லாஜிக் பத்தியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல், இருக்குற டெக்னாலஜி மேல பாரத்தை போட்டு படத்தை எடுத்துருக்காங்க மனுசபயளுங்க. படமும் 2 மணிநேரம் போறதே தெரியாம நம்ம டைரக்டர் ஹரி சார் படம் மாதிரி டாப் கியர் போட்டு சுத்திகிட்டே இருக்கு.

படத்தை நீங்க DVD வாங்கி பார்ப்பிங்களோ இல்லேன்னா டவுன்லோட் செய்து பார்ப்பிங்களோ.. கண்டிப்பா பாருங்க. Action, த்ரில்லர் படங்களை ரசிப்பிங்களா இருந்தால் கண்டிப்பா படம் Worth watching. படம் வெளியானது இந்த வருடம் மார்ச் 23ம் திகதி. படத்தோட வசூல் $160 மில்லியன் தாண்டிருச்சாம். படம் எடுக்க செலவானது $70 மில்லியன். இன்னொரு விஷயம் இந்த படத்தை போலவே ஒரு படம் போன மாசம் (ஜூன் 28) ம் திகதி வெளியாகி இருக்கு. கதை இதே கதை தான். ஆனால் இந்த படத்தை விடவும் நல்ல விமர்சனங்கள் வாங்கி இருக்கு படம். நான் இன்னமும் பார்க்கல. படத்தோட பெயரு "White House Down".


இன்னும் நெறைய படங்கள் இருக்கு. நேரம் கிடைக்கும்போது சொல்லுறேன். (கிடைக்குற நேரம் சோம்பலும் இல்லாமல் இருக்கணும்)

Post Comment

No comments: