Wednesday, October 16

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! தொடர் - 3

ழையை பற்றி பேசுவதை விடவும் மழையில் நனைவதை விரும்புபவன் நான். இது என்னை நானே நனைத்துக் கொள்ள தொடர்ந்து எழுதிவரும் ஒரு பதிவு. எனக்கான மழையில் நீங்களும் நனைந்து கொள்ள விரும்பினால் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

குறிப்பு: நனைவதால் வரப்போகும் காய்ச்சல், தலைவலிக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.



தமிழ் வாசிப்பு, எனக்கு சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும். அம்மா எனக்கு வாங்கி கொடுக்குற கதை புத்தகங்கள் மூலமாத்தான் எனக்குள்ள அந்த தமிழ் ரசிகன் வந்து உட்காந்துகிட்டான். 

கோகுலம் என்கிற சிறுவர் மாதாந்த சஞ்சிகை. மாசத்துக்கு ரெண்டு வரும். இப்போ அது தொடர்ந்து வருதானு தெரியலை. கொழும்பில் 90'களில், கொட்டாஞ்சேனையில் ஒரு வாடகை வீட்டுல இருந்தப்போ, வீட்டு பக்கம் புத்தக கடையில எனக்குன்னு ஒரு கோகுலம் பிரதி காத்துக்கிட்டு இருக்கும். அம்மா கொடுக்குற காசை வாங்கிட்டு போய்ட்டு அந்த கடைக்காரர்கிட்ட நீட்டினதும் அவருக்கே தெரியும் நான் ஏன் அங்க நிக்கிறேன்னு. வாங்கினதும், வழியெல்லாம் அதை வாசிச்சுகிட்டே தான் வீடு வந்து சேருவேன். ஒரு தடவை அப்படி வாசிச்சுகிட்டே போயி ஒரு பச்சை கலர் ஆட்டோ என் மேல மோதினது கூட ஞாபகம் இருக்கு. அப்படி ஒரு மோகம் அந்த கோகுலம் மேல.

இதை தவிர மு.மேத்தா, வைரமுத்து கவிதைகள், கண்ணதாசன் நூல்கள், பாரதியார் கவிதை, ராணி காமிக்ஸ்'ன்னு எல்லாமே என் வாசிப்பு ஆர்வத்தின் ஆரம்ப காலங்களில் இடம் பிடிக்க ஆரம்பிச்சது. இந்த வாசிப்பு ஆர்வம் அதிகரிக்க வைச்ச சம்பவம்னா நான் இதை தான் சொல்லுவேன். 

நான் சிறுவனா இருக்கும் போது நடந்த சம்பவம்.

ஒரு சமயம், எங்க வீட்டு பக்கம் உள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில கிருஷ்ண பரமாத்மா பற்றிய ஒரு கதாகாலம் தொடர்ந்து நாலு நாள் நடந்துச்சு. அதை நடத்துறதுக்காக இந்தியாவில இருந்து ஒரு குரு வந்திருந்தார். அவரோட பேச்சில இருந்த சுவாரஷ்யம், அவர் கதை சொன்ன விதம், அதை யதார்த்த வாழ்க்கையோட இணைச்ச விதம் எல்லாமே என்னை ஆர்ச்சர்யபடவைச்சது. உச்சுக்குடுமி, பஞ்ச கச்சம், கழுத்துல பூமாலை சகிதமா மேடையில் அவருக்கு பக்கத்துல ஒரு சில்வர் கப், பிளாஸ்க்'ல பால், அப்பறம் அவரோட கால் தொடையில ஒரு வெள்ளை துணி. இதை தவிர வேற என்ன இருந்ததுன்னு நினைவில்லை. ஆங்.! வலது கையில ஒரு சப்லாகட்டை வைச்சுருப்பார். எந்த விதமான குறிப்பும் இல்லாமல் அவரு கதை சொல்லுறதை பார்த்து ஆர்ச்சர்யமா இருந்துது. 
அந்த அபாரமான ஞாபசக்திக்கு காரணம் வாசிப்பு தான் அப்படின்னு புரிஞ்சுது. நாமளும் நெறைய வாசிக்கணும்னு நினைச்சேன். எதை கிடைச்சாலும் வாசிக்க ஆரம்பிச்சேன். கண்டக்டர் பஸ் டிக்கெட் கொடுத்தாலும் எடுத்து ஒரு தடவை வாசிச்சுட்டு தான் பாக்கெட்'ல வைப்பேன்னா பார்த்துக்கங்களேன்.
இன்னொரு காரணம் ஆனந்தன் சார். அவரோட தனியார் வகுப்பில் கற்றுக்கொண்டவை ஏராளம். என் தமிழ் வளம் வளர மிகப்பிரதான காரணம் இவர் தான். தமிழ் பாடல்களை இலகுவாக ஞாபகப்படுத்தவும், தமிழ் மொழி பற்றிய பெருமைக்கும், தமிழ் மீதான ஆர்வத்திற்கு மிகப்பிரதான காரணகர்த்தா. தமிழ் மொழிக்கென்று இலங்கையில் இவருக்கான மாணவ ரசிகர்கள் ஏராளம். அதில் நானும் ஒருவன்.
இந்த மாதிரியான சம்பவங்களின் பிறகு என்னோட வாசிப்பின் தரம் வளரத்தொடங்கியதுக்கு முக்கியமான காரணம், ஸ்கூல் காலத்துல என்னோட விவாத மேடைகளின் அனுபவம் தான். எந்த தலைப்பை கொடுத்தாலும் பேசணும்னு ஆனபிறகு நிறைய படிக்க வேண்டிய தேவைகள் இருந்ததை தவிர்க்கமுடியவில்லை. ஒன்பதாம் ஆண்டு படிக்கும் போது தொடங்கி 2004'ல் உயர் தரம் படிக்கும் வரைக்கும் விவாதப்போட்டிகள் மீது ஒரு தனி காதல். அந்த காதலின் வீச்சு 2011ஆம் ஆண்டு வரை இருந்தது. உயர்தரம் படிச்ச காலத்துல வார இறுதி டியூஷன் கிளாஸ் எல்லாம் கட் பண்ணிட்டு விவாத போட்டிகளில் கலந்துகுறதுக்காக, ஸ்கூல் யூனிபோர்ம்ல தான் இருப்பேன். 
ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்ச பிறகும் கொழும்பில் தமிழ் பாடசாலைகளின் விவாத போட்டிகளில் நடுவராக இருந்ததுண்டு. 2011இல், இறுதியாக கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த போதும் கூட கொழும்பு றோயல் கல்லூரியின் விவாதப்போடிகளில் நடுவர் குழுவில் ஒருவனாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதே காலத்தில் தான் வலைப்பூ தளம் வாசிக்கும் பழக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அதை பற்றிய விரிவான ஒரு பதிவு இங்கே. blog என்று ஒரு காதல்..!
அந்த பதிவில் நான் எழுதியது.
என் தேடல்களுக்காக வலைப்பூ தளத்தில் மணித்தியாலங்கள் பலவற்றை நான் கரைத்திருக்கிறேன். சிலரின் அன்றாட அனுபவங்களில், மனிதாபிமான செயல்களில், குடும்ப நிகழ்வுகளில், நாட்டு நடப்புகளில் என  அவர்களின் எழுத்துக்களோடு சேர்ந்து  நானும் பயணித்திருக்கின்றேன்., மனம் கரைந்திருக்கின்றேன். அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தும் இருக்கின்றேன். இதைக்கூட எப்படி இவர்களினால் சுவாரஸ்யமாக எழுதிவிட முடிகிறது என ஆர்ச்சர்யப்பட்ட பல சந்தர்பங்கள் உண்டு. தமிழ் நாட்டு பதிவர்கள்., வெளிநாட்டில் இருந்தாலும் பதிவுகள் மூலமாக தமிழ் உலகோடு தொடர்புடன் இருக்கும் பதிவர்கள்., என் தாய்நாட்டின் பதிவர்கள் என அனைவரையும், விடாமல் வாசித்து வந்திருக்கிறேன். 

இந்த வாசிப்பனுபவம் தந்த தைரியம் தான் "ஆறாவது சக்கரம்". ஒரு வருடமாகவிட்டது. தினமும் புதிய ஏதோ ஒரு விடயத்தை புதிதாக தெரிந்து கொள்ளவும் அதை என் பதிவில் பகிரவும் எனக்கான ஒரு களமாக இந்த வலைப்பதிவு தளத்தை வளர்த்து வந்திருக்கிறேன். என் கனவுகள் தாறுமாறானவை. அதை எழுத்தில் தருவது எனக்கு பிடித்துருக்கிறது. உங்களுக்கும் பிடித்திருக்கிறது என நம்புகிறேன்.

Post Comment

No comments: