Wednesday, February 13

தலைப்பு தேடினேன்.. கிடைக்கல!

திடீருன்னு நாலு நாள் லீவுல இருந்துட்டு நாளைக்கு திரும்பவும் வேலைக்கு போக போறேன்.
 
இந்த நாலு நாளும் சொல்லிக்கும் படியா எதையும் செய்ய கிடைக்கல. என் கூட தங்கியிருக்குற நண்பர்கள் அவங்கவங்க  ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க.இவ்வளோ பெரிய அப்பார்ட்மென்ட்ல நானும் நான் சார்ந்த இயக்கமும் மட்டும் தான் இயங்கிகிட்டு இருக்கு. அதிகமாக எந்த சலனமும் இல்லாத ஒரு வீட்டுக்குள்ள அடங்கிப்போய் வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஆனாலும் என் தனிமைக்கு இருந்தது என் கணணியும் அதன் இணையத் தொடர்பும் தான்.

உரையாடலுக்கு யாரும்மில்லாத ஒரு ரூம்ல இருக்குறப்போது கிடைக்குற தனிமையும், நேரமும் நிறைய யோசிக்க வைக்குது. எரிச்சல், மனஉளைச்சல் எல்லாம் இந்த காலத்துல எல்லாருக்கும் சாதாரணமானது தான்! அதிகமா வேலை செய்தாலும் அது இருக்கும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தாலும் இருக்கும். இந்த மாதிரி மன உணர்வை பாதிக்கும் தனிமைக்குள் இருக்கும் போது என்னோட எண்ணங்களை திசை திருப்புறதுக்கு இசையும், திரைப்படங்களும், வாசிப்பும், அப்பறம் கொஞ்சம் பிரார்த்தனையும் துணையா இருந்தது.


பதிவின் இந்த வரியை எழுதும் போதும் என் மேசைல ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைச்சுக்கிட்டு இசைஞானி இசையை கேட்டுகிட்டே இயங்கிகிட்டு இருக்கேன். சாப்பிட மட்டும் தான் வீட்டுல இருந்து வெளியில இறங்கி போறேன் (ஏன்னா எனக்கு சமையல் கை வராது). என்னை மாதிரியே வெளிநாட்டில் உழைக்கும் எத்தினையோ பேருக்கு கடை சாப்பாடு தான் வாழ்வளிக்கிறது! உழைப்பின் ஒரு பகுதி "உணவுக்கு"  என்பதற்கு பதிலா "சாப்பாட்டு கடைக்கு"  என்ற வார்த்தையை நிரப்பி படிங்க. 

என் நாட்டுல நான் தனிமையில இருந்து பழக்கம் இல்லை. படிக்குற காலகட்டத்துல , பொறுப்பு அப்பிடின்னு எதுவுமே பெருசா இல்லாதனால படிக்குறோம்ன்ற பேருல நேரத்தை எப்பிடியோ கடத்திட்டு போயிடுவோம். அப்போவும் நண்பர்கள் கூடதான் அதிகமாக நேரம் கடந்தது. அதுக்கு பிறகு ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சதுமே வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு. (யூனிவேர்சிட்டி எல்லாம் போற அளவுக்கு படிச்சு பாஸ் பண்ணலை,எனக்கு பிடிச்ச ஒருசில துறை சார்ந்த விசயங்களை மட்டும் படிச்சுகிட்டு இருந்துட்டேன்). உள்நாட்டுலையே வேலையும், பொழுது போறதுக்கு நண்பர்களும் இருந்ததனால எனக்கு காலம் போனது தெரியலை. அனுபவக்கல்வின்னு சொல்லுவாங்களே அது நிறைய கிடைச்சது. மனித உறவுகள்கிட்டயும், சமூகத்துலயிருந்தும் படிக்குறதுக்கு எவ்வளவோ இருக்குன்னு நம்புறவன் நான். அன்பால் உருவாக்கப்படும் எந்த இணைப்பையும் நான் ரொம்பவும் மதிப்பவன். அதனால அதிகமான நேரம் நான் விரும்பும், என்னை விரும்பும் சூழலில் என்னை இருத்திக்கொள்ள பார்ப்பேன்.

குடும்பத்துக்காகவும் எனக்காகவும் உழைக்கணும்னு சொந்தநாட்டுல இருந்து  வந்து 7 மாசம் ஆச்சு. அங்க இருக்கும்போது வெளிநாட்டில் இருக்கும்  நண்பர்கள், உறவினர்கள்  கூட பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போ அவங்களோட பேச்சுல இருக்குற ஒரு வெறுமை கலந்த உணர்வை இப்போ நானும் உணர்ந்து பார்க்குறேன். உள்  உணர்வினை கையாளத்தெரிந்த பக்குவம் கொஞ்சமாவது இருக்குனு எனக்கு நானே சொல்லிக்கிட்டு என்ன பயன்? அலுப்பு ஏற்படும்போது இயல்பான நிலைக்கு திரும்பணும்னா ஏதாச்சும் பிடிச்ச விசயங்களை செய்யலாம். ஆனால்,அப்படி பிடிச்ச விஷயங்களை செய்றதுக்கும் அலுப்பு தான் வருது. இதுதான் வாழ்கையில் ஏற்படும் சூன்ய வெளி என்பதா?

வயசுனால வந்த மனநிலையா இல்லேன்னா இது எந்த அனுபவத்தினால் இருக்கும் மனநிலை அப்படின்னு குழப்பமா இருக்கு. காரணம், இதுக்கு முதல்ல நான் இப்படி இருந்ததில்லை. திரைப்படம் பார்க்கும் ஆர்வம், கதை படிக்கும் ஆர்வம், கவிதை எழுதும் ஆர்வம் எல்லாம் இந்த தனிமைக்குள் ஓரளவுக்கு மேல் துணை வருவதாக இல்லை. வாழ்க்கை பத்தின புரிதல் என்பதும் இப்படிபட்ட ஒரு சூன்ய வெளிக்குள் சிக்கிக் கொள்ளும் போது அடித்து துரத்தப்பட்டு விடுகிறது. அவ்வளவு தூரம் இந்த நான்கு நாட்களும் தனிமைக்குள் வைத்திருக்கிறது என்னை


எந்தவிதமான விட்டுகொடுத்தல்களையும் செய்யாமல் என் தனிமைக்கு  என்னோடு இருக்கும் உறவினை நீடித்துக்கொண்டே இருக்குறேன். மீண்டும் நாளை வேலைக்கு திரும்பியதும் என் மனநிலை மாறும். மற்ற உறவுகளை கண்டதும் இயல்பு நிலை என்ற ஒன்று தானாகவே வந்துவிடும். இந்த தனிமைக்குள் நான் கற்றவை எல்லாம் எனக்கு எந்தவிதத்தில் தேவைப்படும் என்ற கேள்விகளால் நிரம்பி இருக்கிறது என் வெறுமை!

Post Comment

No comments: