Tuesday, December 11

ரஜினி ரசிகனாகிய நான்!

ரு பதிவு எழுதனும்னு யோசிக்கும் போது மனசுல பல விசயங்கள் தோணும். இதுதான் கரு அப்பிடின்னு தெளிவா தெரிஞ்சுகிட்டுதான் எழுத ஆரம்பிப்பேன். ஆனால், "ரஜினிகாந்த்" என்கிற ஒரு பெயரை மனசு சொல்லும் போது, அதுக்கு துணையாக மனசுல பலவிதமான எண்ணங்கள் சுத்த ஆரம்பிக்குது. என்னன்ன விதமாக இந்த பதிவை எழுதலாம்னு நினைச்சுகிட்டே எழுத ஆரம்பிக்குறேன்.

தமிழ்சினிமா மீது இருக்குற மோகம் எனக்கு ரொம்ப அலாதியானது."கலை"  ஆர்வம் வர இந்த தமிழ்சினிமா மிகப்பெரும் காரணம். அதனாலதான் என்னோட இந்த வலைமனையில பதிவுகள் மூலமா நான் ரசிக்குற கலைஞர்கள் பற்றியும் பதிவு எழுத ஆரம்பிச்சுருக்கேன்! இசைஞானி பற்றிய பதிவு தான் முதல்! இப்போ ரஜினி என்கிற சூப்பர் ஹீரோ பற்றி என் எண்ணங்கள்..


"Rajinikanth was named by Forbes India as the most influential Indian of 2010. He was also named one of the most influential people in Asia by Asiaweek."


எப்போ ரசிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கும் சரியாய் ஞாபகம் இல்லை. சின்ன வயசுல, T-shirt மேல shirt போட்டுகிட்டு ரஜினிகாந்த் போல நடிச்சு பார்த்து சந்தோசபட்ட இலட்சக்கணக்கான ரசிகமணிகள்'ல நானும் அடங்கிடுவேன்! ஸ்கூல்'ல மூணாம் வகுப்பு படிக்கும் போது கள்ளத்தனமா கருப்பு கண்ணாடி கொண்டு போயிட்டு நண்பர்கள் கிட்ட ரஜினி ஸ்டைல் செய்து காட்டி ஹீரோவாக முயற்சி பண்ணிருக்கேன். எழுதாத Reynolds பேனாவை பாதி உடைச்சு அதை கையில இருந்து வாய்குள்ள தூக்கி போட்டு பிடிக்க முயற்சி பண்ணி அப்பாக்கிட்ட அடியும் வாங்கிருக்கேன்!இப்போ இருக்குற சின்ன பசங்களுக்கு எத்தினை ஹீரோக்கள் வந்தாலும் ரஜினி என்கிற Universal ஸ்டார் தான் godfather! 

இளம்வயது கடந்து இன்னைக்கு உழைக்குற பொறுப்பும், குடும்ப சுமைகளும் நிறைஞ்ச ஒரு ஆண்மகனாக வளர்ந்த பிறகும் ரஜினி என்கிற அந்த சூப்பர் ஹீரோக்கு முன்னால இன்னும் அந்த மூணாவது கிளாஸ் படிச்ச மனநிலை தான் எனக்கு. அறிவையும் முதிர்வையும் ஓரம் கட்டி என்னுள் இருந்து ஒரு ரஜினி ரசிகன் வெளிப்படுவதை என்னால் தடுக்க முடியவில்லை. எனவே இந்த பதிவை தொடரும் நீங்களும் உங்கள் மெச்சுரிட்டியோடு எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் வாசிக்கக் கடவதாக!

"திரைப்படங்களில் வருகின்ற கதாநாயகர்களை நிஜ உலகில் ஒப்பிட்டு பார்ப்பது அறிவீனம்" என்கிற ஞானம் இல்லாத நிலையில் ரஜினியை ரசிக்க தொடங்கிய போது,சிறுவயது கனவுகள் முழுக்க அந்த கதாநாயகன் தான்! என் நடை முதல்கொண்டு உடையும் தாண்டி பேச்சு, உடல்மொழி என்று அனைத்திலும் ரஜினி தான்! ஸ்டைல் என்பதையும் தாண்டி அதை நான் ரசித்த விதம் இன்று என் உடலில் இருக்கும் ஒர்மோன்களில் அப்பிடியே பதிந்து விட்டிருக்கின்றது! கருப்பாய் பிறந்ததில் பெருமைக்கொள்ள வைத்த என் நாயகனின் உருவம் முதல் காதலியின் நினைவுக்கு நிகரானது!


சின்ன வயசுல டிவியில எப்பவாச்சும் ரஜினி படம் போட்டால் அன்னைக்கு எனக்கு திருவிழா தான்! பீரோவில இருந்து உடனே ஒரு t-shirt, ஒரு shirt வெளிய வரும்! படத்துல பாட்டு வரும் போது நான் multiple-disorder ஆகிருப்பேன்! அது இன்னைக்கும் தொடருது.ஆனால் வீட்டுக்கு பதிலாய் சினிமா தியேட்டர். தலைவனை வெள்ளித்திரையில பார்த்தால் வரும் பாருங்க ஒரு energy! Popey - the sailorக்கு Spinach எல்லாம் எதுக்கு?.. படிச்சவன் மாதிரி அமைதியா இருக்க சொல்லி எவன் சொன்னாலும் அவன் கதை "கதம் கதம்!" இந்த சுகமான நினைவுகள் இன்னும் 20வருஷம் கழிச்சு பார்க்கும் போது கூட நிச்சயமா எனக்கு அறிவீனமாக தெரியாது! ஞானம் பிறந்த வாழ்கையில கடந்தகாலத்தை பற்றிய குற்ற உணர்வு இருக்கும்னு சொல்லுவாங்க. அதெல்லாம் இந்த ரஜினி ரசிகனுக்கு அப்பாற்ப்பட்ட சமாச்சாரம்! 

சரி இப்போ இந்த இடத்துல இன்னொரு விஷயம் சொல்லனும்னு நினைக்குறேன். ஒரு சினிமா நட்சத்திரத்தை ஏன் இவ்ளோ தூக்கி வைச்சு கொண்டாடனும்னு கேட்கிறவங்க இருக்காங்க. பால் அபிஷேகம், பட்டாசு வெடிச்சத்தம், ரசிகர் மன்ற கொண்டாட்டம் எல்லாம் வேலை இல்லாதவங்களுக்கு சொந்தம்னு சொல்லுறதை கேட்டுருக்கேன். உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் அவன் என்ன செய்தான்? ஏன் இப்பிடி முட்டாள்தனம் பண்ணுற? அப்பிடின்னு அலட்சியம் செய்றவங்களும் இருக்காங்க. உலக நாடுகளில் அதிகமாக சினிமா தயாரிக்கபடுவது இந்தியாவில் தான்! சினிமா ரசிகர்களை தனது மொத்த சனத்தொகையில் ஒப்பீட்டளவில் அதிகம் சம்பாதித்து வைத்திருக்கும் இந்தியாவில் தான் இந்த ரசிக மன்ற கொண்டாட்டங்கள் எல்லாம்! இதை முழுமனதோடு ஆதரிக்க நானும் தயாரில்லை! எதை பற்றியுமே கவலை இல்லாத இளசுகளின் இந்த வகையான காரியங்களால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கபடுவது என்னவோ உண்மைதான்! 


பகுத்தறிவுவாதிகளின் அடிப்படை சித்தாந்தம் இந்த கொண்டாட்டங்களை முரண் செய்யும்! இப்படியான ரசிகர்களை புறந்தள்ளும். எதையும் கேள்வி கேட்கும்! வெறித்தனமான இரசிகனின் செயல்களை எள்ளி நகையாடும்! பண்பாடு கலாச்சாரத்தை கெடுப்பதாக குற்றம் சாட்டும். மொத்ததுல இப்பிடி பட்ட ரசிகனை கழ்வீஈஈஈ... கழ்வீ... ஊத்தும்.

இந்த அளவுக்கு, ஒரு தனிமனிதனை மற்றும் மிகப்பெரும் ரசிகர் வட்டாரத்தை தன்பால் ஈர்க்கும் வகையில் ஏதோ ஒன்று அந்த சினிமா நட்சத்திரத்திடம் இருப்பதை மறுக்க முடியாது! ஆனால் ரஜினிகாந்த் என்கிற என் ஹீரோ மீது எனக்கிருப்பது "ஏதோ ஒன்று" இல்லை. வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை எனக்களித்த ரோல் மாடல். இன்னைக்கு எத்தினையோ பேர் என் கண் முன்னால ரோல் மாடல்களா இருக்காங்க. 

ஆனால் மீசை முளைக்கும் முன்னமே.. ஏன்.. குறும்புத்தனங்கள் நிறைந்த குழந்தை பருவம் முதல் கொண்டே என்னை ஈர்த்த நாயகன் தான் ரஜினி! அவரோட படத்தை பார்த்து வாழ்க்கையில பல விசயங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். அவரோட நிஜவாழ்க்கையும் எனக்கு ஒரு லைப்ரரி தான்! இன்றைக்கும் ரஜினி பற்றிய செய்திகள் எங்கு கேள்விப்பட்டாலும் தேடிப்படிப்பதை நிறுத்தாமல் தொடர்கிறேன்!

சிவாஜி ராவ் கேக்வோட் என்கிற ஒரு சாதாரண போலீஸ்காரனின்-மகன்  இன்னைக்கு இவ்ளோ பெரிய ஸ்டார் அந்தஸ்த்து பெறுவதற்கு அவரோட திரைப்பட இயக்குனர்கள், அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் அவருக்காக கதை எழுதியவர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் பெரும் பங்கு இருக்கு!ஆனால் அத்துனையும் மீறி ரஜினியை எல்லாருக்கும் பிடிக்கணும்னா அதுக்கு ரஜினியின் உழைப்பு ஒரு unique point! வாழ்க்கை மீது அவருக்கு இருந்த தெளிவு தான் தன் தொழில் பற்றிய தெளிவையும் ஏற்படுத்திருக்கும்! வெற்றியையும் தோல்வியையும் தன் மீதான விமர்சனங்களையும் ரஜினி கையாண்ட, கையாள்கின்ற விதமே ஒரு ஸ்டைல் தான்! இந்த விமர்சனங்கள் ரஜினி என்கிற மாமனிதனை (கட்டை விரல் ஆட்டிகிட்டே வாசிங்க) எதுவுமே செய்து விட முடியாது!

ரஜினி பற்றி பேசும் போது ரஜினி படப்பாடல்கள் பற்றியும் ஒரு வரி சொல்லணும். ரஜினிக்கான அறிமுகப்பாடல் தான் தமிழ் சினிமாவின் கதாநாயக அறிமுகப்பாடல்களின் Mass of the Mass! இன்னைக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சினிமாவில் எவ்வளவோ தரமான காட்சிகளை கொண்டு படம் பிடித்து காணும் கண்களை ரசிக்க வைக்க முடியும். ஆனால் ரஜினிக்கு......?  


திரையில் ரஜினியை பார்க்க காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் Visual Treat இந்த அறிமுகப்பாடல்! கால்'ல தொடங்கி அப்பிடியே கேமரா, Top-angleக்கு  வரும் போது, ச்சும்மா வந்து நின்னு ஒரு வணக்கம் வைப்பாரு பாருங்க.... தலைவாஆஆஆஆஆ!!!! 

இந்த பதிவில நான் இன்னும் தொடர்ந்து எழுத பலபல விடயங்கள் இருக்கிறது. ரஜினியின் நல்ல பண்புகள், குடும்பம் மீதான அவரது பார்வை, தனது ரசிகர்களின் மீது ரஜினிக்கு இருக்கும் அன்பு, குருநாதர் மீதான மரியாதை, சமூகத்தின் மீதுள்ள அக்கறை, ஆன்மீக ஆர்வம், அவரது நகைச்சுவை உணர்வு, எல்லோராலும் வியக்கபடுகின்ற அவரது எளிமை  என்று ரஜினியின் வாழ்க்கையோடு  தொடர்புபட்டிருக்கும் எத்துணையோ நிகழ்வுகளை நான் ரசிக்கும் விதத்தில் எழுதலாம்.இவை அனைவரும் அதிகமாக அறிந்தவை தான்!

ரஜினி தனது  திரைப்படங்கள் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பதை பார்த்து வியப்பில் இருக்கும் திரை உலகினர், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருப்பதாய் தான் சொல்கிறார்கள்.ரஜினியை பற்றி அவரோடு பணிபுரிந்த மற்றைய கலைஞர்கள் பேட்டிகள் மூலமாக பகிரும், youtube விடியோக்களை பார்க்கக் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளுங்கள். விஜய் டிவியில் கடந்த வருடம் ரஜினி பிறந்தநாளில் ஒளிப்பரப்பிய வீடியோக்களை பார்க்க கிடைத்தால் ரஜினி ரசிகனாய் நீங்கள் பெருமை கொள்ள அதிகம் தகவல்கள் கிடைக்கும்!இறுதியாக,உங்கள் நேரசிக்கனத்தை கருத்தில்கொண்டு (ஆமா!இவ்ளோ பெரிய பதிவை எழுதிட்டு இப்போ தான் நேர சிக்கனத்தை பத்தி பேசுறாரு!) இங்கே இந்த வீடியோவினை பகிர்கிறேன்.

இந்த காட்சியை நிச்சயமா நீங்க யாருமே பார்க்காமல் இருந்திருக்க முடியாது.ரஜினி ரசிகனாய் இருந்தால் இந்த sceneக்கு விசில் அடிச்சு, கைதட்டி, நரம்பு புடைக்க தலைவா'ன்னு கத்தியிருக்கணும்! 
அவ்ளோ பெரிஈஈஈஈஈஈய 
M-a-s-s  S-c-e-n-e. 

 

தலைவரோட Style'லா இருக்கட்டும் நடிப்பா இருக்கட்டும், உடல் மொழியா இருக்கட்டும், டயலாக் டெலிவரியா இருக்கட்டும், இன்னும் என்னென்ன பிஸ்தா, பருப்பு எல்லாம் இருக்குமோ அது அத்தனைக்கும் இந்த scene தான் Reference. 

முக்கியமா இந்த வீடியோவில் 1:59க்கு கவனிங்க.கேமரா, சரத்பாபு பின்னால இருந்து ராதாரவி பக்கத்தால முன்னுக்கு போயிட்டு, ரஜினிக்கு Right சைட்ல  க்ளோஸ்-அப்'ல வந்து நிற்கும். few செக்கண்ட்ஸ்'ல திரும்ப கேமரா left சைட்ல பின்னாடி ட்ராவல் ஆகி நிழல்கள் ரவிக்கும் சரத்பாபுவுக்கும் இடையால வந்து அவங்க நாலு பேரையும் frame'ல capture பண்ணுற angel'ல  ஸ்டாப் ஆகும். இது முழுக்க ஒரே டேக் தான்! இந்த sceneக்கு, தலைவர் ஸ்டைலேயே ஒரு "Hats off!"

இன்னும் எவ்வளவோ காட்சிகள் பத்தி எண்ணி பார்க்கும் போது எழுதனும்னு என் keyboard துடிக்குது! ஆனா அதை எழுதி,என் சோகம் உங்களை தாக்கிரும்னு நினைக்கும் போது ( நீங்க எல்லாத்தையும் படிப்பிங்களான்னு நினைக்கும் போது) mouse முட்டுது!

12-12-12 என்பது எப்படி ஒரு தனித்துவமான திகதியோ அப்படிதான் ரஜினியும்!மனசு முழுக்கவும் ரஜினிக்கான பிறந்தநாள் பிரார்த்தனைகளோடு.., அவரை வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்குகிறேன்! ரஜினியும் ரஜினி ரசிகர்களும் என்னைக்குமே அந்த ஆண்டவன் புண்ணியத்துல ஷந்தோஷ்ஷமா இருக்கணும்! 

"கண்ணா... ப்படி ச்சூடு!!! இந்த பதிவு பிட்ச்சுருந்தா உன் vote'ஐ போட்டு விடு!இல்லேன்னாலும் பரவாயில்லை.. ஆண்டவனே நம்ம பக்கம்! ஹஹஹஹஹஹஹா......! வர்ட்டுமா??"

Post Comment

No comments: