Thursday, October 23

கத்தி - படம் பார்த்த அனுபவம்


ஜெயா டீவில “ஐ” ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி பார்த்துட்டு இருந்தோம். சீயான் விக்ரம் பற்றிய ஏவியில் ஒரு குறிப்பு வந்தது. “இவரது கதாப்பாத்திரங்களின் உருவங்களை வைத்தே, இவரது படத்தின் பெயரை சொல்லிவிடலாம்”, என்றதுமே நானும் நண்பரும் “அப்போ விஜய் நடிச்ச படத்தை, எந்த படம்ன்னு எப்படி கண்டுபிடிக்குறது?” என்கிற கேள்வி எழும்ப.. இருவருமே சிரித்துவிட்டோம்.
 
கத்தி படத்துக்கு எதுக்கு ரெண்டு விஜய்? படத்துல சமந்தாவுக்கு ஏன் முக்கியமில்லாத பாத்திரம்? சதீஸ்க்கு கவுன்ட்டர் ஜோக்ஸ் ஏன் குறைவு? முதல்பாதி ஏன் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கு? ரெண்டாவது பாதியில லாஜிக் ஓட்டைகள் நிறைய இருக்கே!? சம்பந்தமே இல்லாமல், திடீருன்னு பாட்டு வைக்குற தேவை என்ன?


ஒரு விஜய்க்கு நடிக்குற வாய்ப்பு! விஜய் கடைசியாக இப்படி அழுதது, துள்ளாத மனமும் துள்ளும் படத்துல. அம்மா இறந்துட்டாங்கன்னு செய்தி வந்ததும், பாத்ரூம்குள்ள உட்கார்ந்து அழுவாரே ஒரு அழுகை, அதை நான் கத்தி படத்தில நேத்து பார்த்தேன். அடுத்தவருக்கு, எல்லா வில்லன்களையும், ரெண்டு வில்லிகளையும் அடிக்குற வாய்ப்பு! பஞ்ச் வசனங்களுக்கும் டான்ஸ்க்காகவும் விஜய்யை பாராட்டுவது, இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி ஆகிவிடும்.

சமந்தா, ஹை-ஹீல்ஸ் போட்டுகிட்டு செம்ம டான்ஸ் ஆடுறாங்க. அஞ்சான் படத்துல எதுவுமே இல்லாமல் ஆடினாங்க (காலுக்கு). இதுக்கு தான் சொல்லுவாங்க, co-star’s height matters! அதை விட முக்கியம், படத்துல கடைசி பாட்டை தவிர மீதமுள்ள எல்லா பாடல்களும் சம்மு சம்பந்தப்பட்டது. செல்ஃபி புள்ள பாட்டுல காஸ்டியும் செட் ஆகலை என்பது பர்சனல் வருத்தம்.

சதீஸ், படத்துக்கு தேவை தான். ஆனால் அவரை ரசிக்குற இடங்கள் குறைவு. அவரோட காட்சியில விஜய்க்கு தான் ஸ்கோர். கடைசியில, ஒரு நீளமான வசனம் பேசுற இடத்துல மனசுல நிப்பாருன்னு பார்த்தேன், அதையும் விஜய் “கை” வரிசை காட்டி பறிச்சுட்டார். ஏன்னு படம் பார்த்து தெரிஞ்சுகோங்க.

படம் தொடங்கி ரெண்டு பாட்டு முடிஞ்சாப்பிறகுதான் கதை எங்க போகப்போகுதுன்னு ஒரு க்ளு கிடைக்குது. விஜய் ஒரு நல்ல நடிகர்ன்னு பேர் வாங்குற இடம் முதல் பாதி. அதுக்காகவே அந்த கிராமத்து விஜய் கதாபாத்திரம் படத்துல வைச்சதுக்கு டைரக்டர்க்கு பாராட்டு..

இண்டர்வல் பிளாக் சூப்பர். விஜய்க்கு இருக்குற மாஸ் எப்படி பட்டது என்பதை நிரூபிக்கும் இடம். ஒரு சீன்ல 50 வில்லன்களை ஒரே இடத்தில சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவுக்கு. பக்கத்துல படம் பார்த்துட்டிருந்த நண்பர், “50 பேரையும் சும்மா அடிச்சா வேலை இல்லை பாஸ்” என்றார். 30 பேரை தான் அடிச்சாரு ஹீரோ, அதுவும் ஒரு சூப்பர் ஐடியா பண்ணி தான். மிச்சம் 20 பேரும் அவங்களாவே ஓடிப்போனாங்க. நண்பரின் எதிர்பார்ப்பை விஜய் காப்பாற்றினார்.

மத்த நடிகர்கள் எடுக்குற ரிஸ்க் எல்லாம் ஏன் விஜய் எடுக்க மாட்டேங்குறாரு என்பது அவருக்கே வெளிச்சம். மாஸ் ஹீரோ படங்களுக்கு தேவையான அம்சங்களோடு இருக்கும் கதைக்குள் சமூக அக்கறைக்கும் இடம் கொடுத்த இயக்குனர், “ரமணா”வை நினைவு படுத்தினார். விஜய் படங்களுக்கு இருக்குற எதிர்ப்பார்ப்பு என்பது எப்படிப்பட்டது என்கிற தெளிவோடு படம் பார்த்தாலே போதுமானது.
இன்னும் இந்த படத்தை வேற மாதிரி எல்லாம் எடுத்திருக்கலாம் தான். சமீபத்துல வந்த விஜய் படங்கள் கொடுத்த தலைவலி இந்த படத்தில் இல்லை என்பது பெரும் வெற்றி. பாவம் பார்மசி வியாபாரிகள் தான்.

படத்தை பார்குறப்போ அந்த படம் மனசில ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்காக கலைப்படம் தான் பார்ப்பேன் என்கிற பேர்வழி இல்லை. உலக சினிமா வெறியனும் இல்லை. எந்தப் படமானாலும் அதன் குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த கதையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கிறார்கள் என்பதும், ரசனையாளனான என்னை எப்படி கவர்கிறது என்பதும்தான் முக்கியம். 

எனக்கு படம் பிடித்திருந்தது.

Post Comment

No comments: