Wednesday, August 13

KAய்ஞ்சு POன KAதல் - once upon a time in whatsapp

சாரா பேச ஆரம்பித்தால் அவளுக்கே மூச்சு முட்டி குரல் அடைத்தாலும் சொல்லவந்ததை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் பேச்சை முடிப்பாள். மைக்ரோ செக்கன்களில் அவளுக்கு குப்பென கோபம் முளைக்கும். கோபம் உள்ள இடத்தில்தானே குணமிருக்கும் என்கிற சொல்லின் ஆதர்சநாயகி-யவள். ரசனிக்கும் மனம் (ரசனையை ரசிக்கும் மனம் எனக்கொள்க) கொண்டவள். அந்த மனம் தான்  அவளை லிசாவின் ரசிகை ஆக்கியது. 

இந்தக் கதையின் பிரகாரம் அவன்தான் நாயகன். லிசா என்பது அவனது நிஜப்பெயரல்ல புனைப்பெயர். இந்த பெயருக்கான விளக்கம் சாராவுக்கு இன்னமும் தெரியாது. அவள் அறிமுகம் கிடைத்த நாளில் இருந்துதான் புனைப்பெயர் வைத்துக்கொண்டான். வனுக்கு கவிதை எழுதப்பிடிக்கும். அதை வாசித்து அவள் சிலிர்க்கும் தருணங்களில் பரவசமாய் ஏதோ ஒன்று மனதின் மையத்தில் வந்துபோகும் அந்தநொடி, அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். கவிதையின் பின் லிசா என்று கையொப்பமிடுவான். அதற்கு அவன் வைத்திருக்கும் விளக்கம் என்னவென்றால்.. (வேண்டாமே!! சஸ்பென்ஸ் போயிடும். கடைசியில கண்டிப்பா சொல்லிடுவேன். நீங்க கதையை படிங்க.)

பழகிய சில நாட்களிலேயே காதல் மலர்ந்து அதை இருவருமே மறைக்க முயன்று தோற்றுப்போனதில், ஒரு வாட்ஸ்எப் ஃபோர்வர்ட் மெசேஜ் காதலை பகீரென்று போட்டுடைத்தது. அதன் பின்னர் அவர்களின் அன்றாட சாட்டிங்கில் காதல் கலகலக்கும். அப்படியானதொரு நாளில்..

"சாரு.. கோயிங் டு கோவில் வித் அம்மா"

-சிறுபீப்போலி கேட்டு வாட்ஸ்எப் திறந்தாள் சாரா.

ஆச்சர்ய-முகமிட்டு கேள்விக்குறியோடு மறுமொழிந்தாள். பதிலுக்கு மென்சிரிப்பில் ஒரு முகம் இமோஜி ஆனது.

"போயிட்டு வந்து சொல்லுறேன்"

அதற்கடுத்த வரியில் அவன் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.

அதை முடிப்பதற்குள் அவனுக்கு செல்லிடப்பேச முனைந்தாள். கட் செய்தான். மீண்டும் முயன்று கட் செய்கிறான் என்று தெரிந்தும் மீண்டும் முனைந்தாள்!

"வெயிட்2"

-பளிச்சிட்டது அவனிடமிருந்து மெசேஜ். கடுப்போடு காத்திருந்தாள்.



"பீப்-பீப்" 

-மின்செய்தி வந்திருப்பதை மென்-ஒலி அறிவித்தது.

"வந்து சொல்லுறேன். லெட் தி சஸ்பென்ஸ் ஸ்டார்ட்ஸ்.."என்றுவிட்டு லாஸ்ட் சீன் ஆனான். 

எடுத்து எறிந்தாள் கைப்பேசியை கட்டில் மீது. ஆர்வத்தை கிளப்பிவிட்டதில் கோபம் அவளுக்கு. வாட்ஸ்எப் ஸ்டேடஸ் மாற்றினாள். "ஹேட் யூ அண்ட் யுவர் பிளடி சஸ்பென்ஸ்" என்று டைப்பினாள். இடைவெளி விட்டு வெடுக்கென வாய் சுளித்து கருவிழி கரையொதுங்கும் இமோஜி வைத்தாள். திருப்தியில்லை. பெக்-ஸ்பேசிட்டு அழித்து, சினம்கொண்ட சிவந்தமுகத்தை வைத்து அப்டேட் செய்தாள். டீபி மாற்றிட மனமில்லை காரணம்,  காலையில் தான் உதடு பிதுக்கும் சமந்தாவின் செல்ஃபி ஒன்றை சொருகியிருந்தாள். 

கரைந்து கொண்டிருந்த அரைமணி நேரத்தில் பலமுறை உள்நுழைந்து செக் செய்தாள்., விநாடிகூட நகராமல் விறைத்து நின்றது அதே இடத்தில் அவனது லாஸ்ட் சீன் நேரம். வரிசையாக இருக்கும் பிறர் பெயர்களை எல்லாம் விரல் நுனியால் மேல் தள்ளி பின் கீள் தள்ளி வெறுத்து புறம் தள்ளி தாழிட்டு தூக்கி எறிந்தாள். தள்ளி நடந்து மீண்டும் நெருங்கி விரைந்து தாழ் திறந்து உள்ளங்கைக்குள் வாரியணைத்து வாட்டமானாள். மீண்டும் ஸ்மார்ட்போன் சீண்டலில் கரம் பதித்தாள். இல்லையில்லை! விரல் பதித்தாள் என்பதுதான் சரி! கேள்வி-யனுப்பிய தோழிகளுக்கும் ஸ்டேட்டஸ் பற்றிய விளக்கம் தர மறுத்ததில் "ரொம்ப சீன் போடாதடி"யென்று, இமோஜி துணையோடு அதட்டிக்கொண்டு இருந்தார்கள் தோழிகள். அழைப்பு வந்தால்கூட கட் செய்துவிட்டு அவனது மின்செய்திக்காய் காத்திருந்தாள் சாரா. 

போனவன் கோவிலில் பக்தியோடு வேண்டிக்கொண்டிருப்பான் என்பது அவளுக்கே தெரியும். ஏனென்றால் அவனது பக்தி கூட சாராவுக்கு பழகிப்போனவொன்றுதான். இருவரின் பெற்றோரும் கோவிலில் கண்டதொரு நாளில்தான் அவர்களின் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது. அந்த சந்நிதானத்தின் சந்திப்பிலேயே அவனது பக்தி அவளுக்கு பிடித்துருந்தது என்பதும், அதன் பின்னரான கோவில் நிகழ்வுகளும் அவள் நினைவில் நீண்டநேரம் பிளாஸ்பெக் ஆனது... 

கோவில் மணிச்சத்தம் கேட்டது. பிளாஸ்பெக் கலைத்தது அந்த மணிச்சத்தம். காது வழி கேட்ட-ஒலியை கண் வழி கேட்டு திடுக்கிட்டாள். அது மணியொலி அல்ல மென்-ஒலி என்றறிந்து அவசரமாய் மின்செய்தி திறந்தாள்... அவனே தான்!

"ஐ ஆம் பெக்" 

-பில்லா படம் காட்டினான்.

லிசா டைப்பிங்... 

"வெயிட்...!"

லிசா டைப்பிங்...
 
"யுவர் ஸ்டேட்ஸ்! ஓ..எம்..ஜி!!"

லிசா டைப்பிங்...

 "வூ இஸ் தட் பிளட்டி?"  

மறுமுனையில்., மொழி ஜோதிகாவென மௌனமாய் இருந்தவளை.. கண்ணீர்ப்பூத்து சிரிக்கும் இமோஜிக்களை வாரி இறைத்து, சந்திரமுகி ஜோதிகாவாய் மாற்றிக்கொண்டிருந்தான் பக்திமான்.
 
நொடிகள் கழித்து அவனது பெயர் அருகே வாட்ஸ்எப்பில்., "ரெக்கார்டிங் ஆடியோ.." என்று வந்தது. என்ன சொல்லப்போகிறான் என்று கண்சிமிட்டாமல் தொடுதிரையை முறைத்துக் கொண்டிருந்தாள் சாராவாகிய சந்திரமுகி.


வாய்ஸ் நோட் வந்து சேர்ந்து டவுன்லோடிக்கொண்டிருந்தது. முடிந்த மறுநொடி பிளே பட்டன் தீண்டினாள்..

"ஹே..! என்ன கோவமா? ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.. இன்னைக்கு என்ன நாள்ன்னு உனக்கு சத்தியமா நினைவிருக்காது. நான் ஏன் கோவில் போனேன் தெரியுமா? இட்ஸ் அவர் தேர்ட் மன்த் அன்னிவர்சரி!

.......(அமைதிக்குப் பின்)

புரியல?! நம்ம கோவில் மீட்டிங் இதே பிலேஸ் இதே டேட்'ல தான் நடந்தது! அதனால தான் கோவிலுக்கு போனேன். என்னையும் உன்னையும் சந்திக்க வைச்ச அந்த சாமிக்கு தேங்க்ஸ் பண்ணிட்டு வந்தேன். அம்மாக்கு தெரியாம உனக்கும் எனக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ணினேன்..! ஆஹா..! மேடம் கோவிச்சுடிங்களா? "

முத்தங்கள் பகிர்ந்து ஃபிளவர் பொக்கே, செவ்விதயம் குவித்து.. "மை ஸ்வீட் ராஸ்கல்டா நீ! இந்த சின்ன வயசுல இவளோ பொறுப்பா இருக்கியா நீ! லவ் யூ மோர்! எனக்கு ஒரு குட்டிக்கவிதை சொல்லு ப்ளீஸ்" என்று காதல் கனிந்தாள் சாரா. 

லிசா டைப்பிங்...  

"நீயே ஒரு குட்டிகவிதை -என்ட்டர்-
உனக்கு எதுக்கு இன்ன்னொரு கவிதை -என்ட்டர்-
-என்ட்டர்-
-என்ட்டர்-
-என்ட்டர்-
லி ஃபார் லிட்டில்.. சா ஃபார் சாரா.. -என்ட்டர்-
என்கிற லிசா வித் லவ்"

-சென்ட் பட்டனில் விரல் அழுத்தினான் சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் கோபி.

Post Comment

No comments: