Monday, May 5

எதையாச்சும் எழுதுவோம்

நமக்கென்ன கருவாச்சி காவியமா வரப்போகுது? நம்மளைத்தான் ப்ளாக் ரைட்டர்ன்னு ஒத்துக்குட்டாங்களே.. இனி மாசத்துக்கு நாலு பதிவை எழுதிபோட்டு ஒரு கொஞ்ச காலத்துக்கு எதையாச்சும் ஒப்பேத்துவோம்'னு பார்த்தால் எதையுமே உருப்படியா யோசிக்கவும் முடியலை, இந்த சோம்பெறித்தனமும் போய் சேருதில்லை! (கடைசி பதிவெழுதி நாலு மாசம் ஆச்சு!)



ஆனாலும், பழைய வீட்டுக்கு புதுசா பெயிண்ட் அடிச்சு, புதுப்பொழிவை ஏற்படுத்த ஆசை! பெயிண்ட்டுக்கு எங்க போவேன் நான்? என் சின்ன வீட்டுல (facebook) அடிச்ச பெயிண்ட் கொஞ்சம் இருக்கு.. இதோ கொஞ்சம் பூசிக்குறேன்..!


Mar 08th 2014 (women's day)
 
....அவர்களின் உலகம் உணர்வுபூர்வமானது!

தரமறுக்கும் அன்பிலும்.. திமிரில்லாத அதிகாரத்திலும்.. கலப்படமில்லாத கண்ணீரிலும்.. கொஞ்சம் வெட்கங்களாலும், அதிரிபுதிரி அழகினாலும், அர்த்தமில்லா கோபங்களாலும், புதுப்புது புன்னகையிலும், புரிந்துகொள்ளவே முடியாமல் தவித்திருக்கிறேன் அவர்களை.

துணிவான பேச்சு, வம்பிழுக்கும் பார்வை, கூந்தல் காடு, அந்தரங்க அழகு, இடையின் வளைவு, இதழோர கனிவு, இம்சிக்கும் விழிகள், புடவை வாசனை, இப்படியாய்.. வர்ணித்து கவிஎழுத எனை தேற்றும் அவர்களின் அத்தனை அம்சங்களையும் இரசித்திருக்கிறேன்.

தாய்மாராய், தமக்கையராய், தோழிகளாய், காதலியாய், கன்னியராய், குழந்தைகளாய்..

அதிசயமாய் விரிந்து கொண்டே இருக்கிறது அவர்களின் உலகம் என்னைச்சுற்றி,

அன்பால்(ள்).... அறிவால்(ள்).... அழகால்(ள்)..!
 

feb 06th 2014 
  
எல்லாம்_கடந்து_போஉம்

விட்ட பெருமூச்சு இந்நேரம் கடல் தாண்டி என் தாயகம் சென்றுக்கொண்டிருக்கும்.

இருப்பதெல்லாம், மரணம் என்கிற வரையில் ஒரு வாழ்க்கை. அதற்குத்தான் இத்தனை ஆரவாரம் கூச்சல் கூப்பாடு எல்லாம் என்கிற சிந்தனையை நெற்றிப்பொட்டில் அழுத்திச்சொன்னது நண்பனின் அதிகாலை கைபேசி அழைப்பு.

கலங்கிய அவன் குரலை அலைபேசியில் கேட்டபோது, கைகள் கால்கள் எல்லாம் இருக்கும் இடம் மறந்து போயின. தேடிக்கொண்டு காரியாலய உடை மாற்றி கேசம் கலைந்தும் சரிசெய்ய மனமில்லாமல் வேகம் வேகமாய் அவனை சந்திக்க அவன் அறைக்கு சென்றேன்.

தகப்பனின் மரணம் சொல்லி அழுத தாயை கைபேசியில் தைரியப்படுத்திவிட்டு என் தோள் சாய்ந்து அழுதான் தோழன்.

சம்பாத்தியம் என்கிற பொறுப்பும் ஆண்மகன் என்கிற அடையாளமும் இணைந்து துரத்த, ஆறு மாதங்களின் முன், தென்னிந்திய தேசத்தின் ஊரொன்றில் இருந்து அப்பா பூசிவிட்ட விபூதித் துளி நெற்றியில் சுமந்து பாசப் புன்முறுவலுடன் கனவுகளோடு கையசைத்து விட்டு வந்தவன் அவன். கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் எப்படியான சூழலிலும் மறுகணமே சிரிப்போடு கலகலக்க வைக்கும் அவனுக்கு இன்று அப்பாவின் மரணத்திற்காய் ஊருக்கு கிளம்புகையில் வார்த்தைகளை விட வேகமாய் கண்ணீர் சுரக்கிறது.

அந்த கண்ணீர்தான், தயாராய் இரு என என்னையும் எச்சரிக்கிறது. இதை எழுதி இங்கே பகிர்வதில் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை.

என்றாலும்.. என் நண்பனின் இத்தருணம், ஞாபகமாய் இருக்கும்! 

Jan 27th 2014

தூர தேசமொன்றில் இருக்கும் தோழி சாட்டிங்கில் வந்தாள்.


பலமாதங்களின் பின்னரான சம்பாஷனை என்பதால் வேலை, குடும்பம், எதிர்காலம், திருமண கதைகளை பேசிக்கொண்டே வந்து கல்லூரி நாட்களின் கதைகளுக்குள் தாவி நின்றது நம் வெட்டி முறிப்புகள்.

உன்கிட்ட ஒன்னு கேட்கனும். சுத்தி வளைக்காம உண்மையை சொல்லு.. -என்றாள்.

நான் உண்மையை தவிர.. -என்று டைப்பிங்கில் இருக்கும் போதே அவளது கேள்வி வந்துவிட்டது.

எங்ககூட டியூசன் படிக்க வர்ற பசங்க எல்லாருமே என்னை தப்பான பொண்ணுன்னு ஒரு மாதிரி பேசினிங்கன்னு எனக்கு தெரியும். நான் ரொம்ப ஹர்ட் ஆகியிருந்துருக்கேன். ஆனா யாருக்கிட்டேயும் காட்டிக்கிட்டதே இல்லை.

அந்த மெசேஜ்ஜை முழுமையாய் வாசித்து முடிப்பதற்குள் அடுத்த வரி வந்து சேர்ந்தது!

என்னோட கேரக்டர் அப்படி தான். வேகமா நடப்பேன். வேகமா பேசுவேன். மாடர்னா டிரஸ் பண்ணிப்பேன். அதிகம் சிரிக்கமாட்டேன். ஆனால் என்னை பத்தி எனக்கே தெரியாம தப்பான விதமா கேள்விப்பட்டப்போ ரொம்ப கஷ்டமா போச்சு!

நீ என்ன கேட்க வர்றன்னு புரியுதுடா! முதல்ல அதுக்காக சாரி சொல்லிக்குறேன். உனக்குள்ள இவ்வளோ வருசத்துக்கு பிறகும் இந்த ஞாபகங்கள் இருக்குறதை கேட்குறப்போ ரொம்ப பாவமா இருக்கு!

ஹ்ம்ம்...

காலேஜ் டைம்ல நானும் நீயும் பேசிக்கிட்டதே கிடையாது. தெரியும் தானே!

தெரியும். அந்த பசங்க கூட்டத்துல தானே நீயும் இருந்த?

ஆனால், அதுக்கு பிறகு நிஜமாவே உன்கிட்ட பேசின அந்த முதல் நாள், உன்னை ரொம்ப மரியாதையா தான் பார்த்தேன். எத்தினையோ வருஷம் கழிச்சு உன்னை கண்டேன். வேலைக்கு போறதுக்கு பஸ்'ல ஏறினப்போ நீ இருந்த. ரெண்டு பேரும் ஒரே ஸ்டாப்ல இறங்கி நடந்தப்போ நீயே தான் சிரிச்சு, கிட்ட வந்து, ஹாய் சொன்ன. உன் பேச்சும் நீ நடந்துக்கிட்ட விதமும் உன்னை யாருன்னு எனக்கு அடையாளம் காட்டிடுச்சு. மத்தவங்க என்ன சொன்னாங்கன்னு எனக்கு அவசியமே இருக்கல.

அதெல்லாம் ஞாபகம் இருக்கா உனக்கு?

ஏன் இல்லாம?.. ஆனால், எப்போதுமே உன்னை இந்த மாதிரி மனசு உடைஞ்சுப்போய் பார்த்ததே இல்லையே! ரொம்ப ஸ்ட்ராங்கான கேர்ள் தானே நீ! இப்போ ஏன் பழசெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணுற?

என்னோட கவலைகளாலேயோ என் வருத்தங்கள் மூலமாகவோ நான் எல்லாரையும் திருப்திப்படுத்தணும்ன்னு தலையில கையை வைச்சுகிட்டு உட்காந்திருந்தேன்னா, இன்னைக்கும் அங்கேயே தான் இருந்துருப்பேன்! என்னால என் வாழ்க்கையில.. இவ்ளோ தூரம்.. இப்போ இருக்குற இந்த நிலைமைக்கு வந்துருக்கவே முடியாது. ஆனாலும் சில வருத்தங்கள் எனக்கும் உண்டு, அதை நான் காட்டிகிட்டதே இல்லை.

அதிர்ச்சியுடன் அவளது வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். மனது கனத்து போனது. அந்த சாட்டிங் சிறிது நீண்டு, ஆளுக்கொரு ஆறுதல் பேசி, கலகலவென காட்சி மாறி, சுமூகமாய் "சி யூ வெரி சூன்' ஸ்மைலியுடன் விடைபெற்றது!

சந்தர்ப்பங்களை சூழ்நிலைகளை கொண்டு ஒருவரின் குணம் இன்னதென, அவரது வாழக்கை இன்னதென தவறான அடையாளமிடும் மனிதரின் முன் அவள் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை கண்டு கர்வமுற்றேன் அவளது நிஜத் தோழனாய் (மூன்று புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி).

Post Comment

No comments: