Monday, January 13

கஞ்சா வைச்ச கண்ணு..

நீ அவனை அப்படி பேசிருக்க கூடாதும்மா.. நம்ம பக்கமும் பிழை இருக்கு! என்ன இருந்தாலும்  அந்த இடத்துல அவளோ பேருக்கு முன்னால நீ அவனை..

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தனது உள்ளங்கையை விரித்து, அம்மாவின் முன் நீட்டினாள் திவ்யா.

அப்பாகிட்ட நான் பேசிக்குறேன்!

-என்றவள், இனி பேச எதுவுமில்லை என்பது போல எழுந்து போய் தன் அறையினை தாழிட்டு கட்டில் மேல் தொப்பென்று வீழ்ந்தாள்.


கதையை படிக்க தொடங்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு, இந்தக் கதையில்(லும்) நீங்கள் எதிர்ப்பார்க்கும் டுவிஸ்ட்டோ  அதை சார்ந்த எந்தவொரு சமாச்சாரமுமோ கிடையாது என்பதை தெளிவாக சொல்லிவைக்க கடமைப்பட்டுள்ளேன். அதையும் தாண்டி நீங்கள் , வேறு ஒன்றை தேடி வந்திருந்தால் கதையை தொடருங்கள்! தேடல் ஜெயிக்கட்டும்!

********************************************************************************
அவள் வீழ்ந்து கிடக்கும் கோலத்தில் இருந்து எழும்பி நிலை பெறுவதற்குள் அடுத்த கதாபாத்திரத்தை பார்த்துவிடலாம்.

திவ்யாவின்  தோஸ்த், விஜய். இருவரது அப்பாக்களும் தொழில்முறை நண்பர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே நட்பு நிலைத்துவிட்டது. வளர்ந்து ஆளாகி இப்போது படிப்பது வேறு வேறு துறை என்றாலும் இருவருக்கும் பொதுவான நண்பர்களே அதிகம். இப்படி ஒரு நட்பு நமக்கும் அமைந்துவிடாத என்கிற எண்ணம், அடிக்கடி வரும் அளவுக்கு திவ்யாவும் விஜயும் நெருக்கமான நண்பர்கள். மேலும் இந்த இருவரின் நட்பை பற்றியும் நீட்டி முழக்கி விளக்கம் சொல்லி.. ஷ்ஷ்ஷப்பா...! சினிமாவில் நீங்கள் பார்த்த நல்ல நண்பர்களை பற்றின டெம்ப்ளேட் ஏதேனும் ஞாபகம் வந்தால் நினைவிருத்திக்கொளுங்கள். அப்படியே கதைக்குள் போகலாம்.

படுக்கையில் கிடந்தவள் திடீரென எழுந்தாள். கண்கள் சிவந்திருப்பதை கண்ணாடியில் முகம் பார்த்து மையை கொண்டு கண்களை கூரிட்டாள். நேரத்தை பார்த்தாள். மாலை 4 மணியளவு இருக்கும். தாழ் திறந்தாள். யாரோடும் பேச விருப்பமில்லாதவள் போல தனிமைக்குள் நுழைந்துகொண்டாள். அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருக்கவேண்டியவன் ஒரே ஒருவன் தான். ஆனாலும் அவனைத்தான் எடுத்தெறிந்துவிட்டு வந்திருக்கிறாள். காரணம்...? சில மணித்தியாலத்திற்கு முன்னர்.. என்று எழுதி பிளாஷ்பேக் போடவேண்டி இருப்பதால்.. அடுத்தவரிக்கு தாவி அந்த காட்சியை காணவும்.

கார்த்திக் நான் வந்துட்டேன்.. எங்க இருக்குற..? 

திவ்யா.. விஜய் என்கூட தான் இருக்கான்.. வந்துகிட்டு இருக்கோம்.. இன்னும் பத்தே நிமிஷம்..!

ஓகே.. நான் ரெண்டாவது மாடியில இருக்கேன்..! 

-அடுத்த பதினைந்து நிமிடத்தில், குளுகுளு ஏசியோடு சூடான தேநீரும் பரிமாறப்பட, அந்த ரெஸ்டாரன்ட்டின் ஒரே மேசையில் மூவரும். 

நான் வேணும்னா வெளிய நிக்குறேன்!

- மௌனத்தை கலைத்துவிட்டு கார்த்திக் எழுந்தான்.

பரவாயில்லை நீ இரு!

-இது விஜய்.

எந்த பெண்ணை தான் ஒரு ஆணுக்கு பிடிக்காது. அதிலும், ஓராயிரம் வார்த்தைகளை ஒன்று திரட்டி ஒருசோடி கண்களின் வழியே பேசிகொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அமர்ந்திருந்தாள் திவ்யா. 

நான் தான் பேசணும்னு கூப்பிட்டேன். ஆனால் எனக்கு எப்பிடி இதை சொல்லுறதுன்னு தெரியல. அதேசமயம் இதை சொல்லுறதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைக்குறேன்.

ஹ்ம்ம்... யெஸ்!!

நான் உன்னை லவ் பண்றேன்!..

ஹ்ம்ம்..

நம்மளோட நட்பு, அன்பு, ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சுருக்குற அக்கறையெல்லாம் கண்டிப்பா இன்னொருத்தர் மேல இனிமேல் வராது. இதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற. உனக்கு இதுல ஏதாச்சும் தப்பா தெரியுதா கார்த்திக்?


அரண்ட பிள்ளையை அதட்ட கூடாது என்பார்கள். அப்படித்தான் அமர்ந்திருந்தான் கார்த்திக்.

ஒரு வாரமா உன்கிட்ட இருந்து கால் இல்லை. நீ டெய்லி எனக்கு சொல்லுற குட் மோர்னிங் மெசேஜ் எதுவுமே இல்லை. சாப்பிட்டியா? காலேஜ் போயிட்டியா?ன்னு கேட்குற அக்கறை எதுவுமே இல்லை. என் வீட்டுக்கு கூட வந்துட்டு போக முடியலையா?

எதிரில் இருந்து எந்த வார்த்தையும் வருவதாய் இல்லை. 

இங்க பாரு!! கான்ட் யூ ஈவன் சே,யெஸ் ஓர் நோ! டூ யூ தின்க் ஐம் அன் இடியட்..! யூ ஃபூல்!!!

எல்லோருக்கும் கேட்கும்படி இருக்கையில் இருந்து எழுந்தாள் திவ்யா. தன் காதலுக்காக இவ்வளவு போராடியும் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பவனை சுட்டெரிப்பதை போல பார்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினாள் கோபமாக. அனலாகி சுட்ட போதும் அவள் கண்களை பார்க்காமல் தலை தாழ்த்தியபடி அமர்ந்திருந்தான் விஜய். 

நேராக வீட்டில் வந்து அம்மாவிடம் அழுதாள். ஏன் என்று கேட்டதற்கு, விஜய் மீது கோபம் கொண்டு பொது இடத்தில் வைத்து சத்தமாய் திட்டிவிட்டேன் என்றாள். மீண்டும் கதையின் ஆரம்ப உரையாடலை படித்துவிட்டு வாருங்கள்.

...........

துக்கம் தொண்டையை அடைத்தபடி காதலும் ஆத்திரமுமாய் அமர்ந்திருந்தாள் திவ்யா. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கண்களின் கட்டுப்பாட்டிற்குள் அணை போட்டு விட்டு, அவசரமாய் அமைதியானாள். கைகளில் தேனீர் கோப்பையோடு பின்னால் நிற்றுகொண்டிருந்தவன் விஜய் என்பது தெரிந்தபோது தக்கன பிழைத்தாள். 

உன் கண்ணை பார்த்து பேசுற தைரியம் எனக்கில்லை திவ்யா. அதுல ஏதோ இருக்கு.. உன் கண்ணை பார்த்தாலே என்னால.. எதுவுமே பேச முடியல. பேசனும்'ன்னு நினைக்குறதை எல்லாம் மறந்துடுறேன்.

...........

ஆனால் இப்போ தைரியம் இருக்கு. நான் பேசணும்னு வந்துருக்கேன். பேசிடுறேன்.

ஹ்ம்ம்... பட், அதுக்கு முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நீ என்னை லவ் பண்ணுறியா இல்லியா? 

-திரும்பிப் பார்க்காமலேயே கேட்டாள் திவ்யா. 

...........

-நிசப்தம்.

ஓகே. எனக்கு தோணுன மாதிரியே உனக்கும் தோணுறதுக்கு கொஞ்சம் காலம் ஆகலாம். நான் அதுவரைக்கும் வெயிட் பண்ண தான் போறேன். நீ இப்போ என்ன சொன்னாலும் நான் கேட்க தயாரா இல்லை.

...........

- மீண்டும் நிசப்தம்.

சரி விடு. நீ போகலாம். ஆனா போறதுக்கு முதல்ல எனக்கு ஒரு சத்தியம் பண்ணிட்டு போ!

என்ன சத்தியம்?

- விஜயிடம் இருந்து ஆச்சர்யமான ஒரு குரல்.

வேற எந்த பொண்ணையும் நீ லவ் பண்ண கூடாது. சத்தியம் பண்ணு.

முடியாது.

ஏன்டா.. என்னை தவிர  வேற ஒரு பொண்ணை  லவ் பண்ணிருவியா டா?

- திவ்யா கலக்கமான குரலில் எதிரொலித்தாள்.

ஆமா! அவள் பார்க்க உன்னை மாதிரியே இருப்பாள், இதே கஞ்சா கண்ணழகியாட்டம். ஆனால் அவளுக்கு உன்னை விட வயசு ரொம்ப கம்மி. உன்னை அவள் அம்மா'ன்னு கூப்பிடும் போது அவளையும் நான் காதலிச்சுட்டு தாண்டா இருப்பேன்.

- முத்த முத்தமாய் சத்தம் கேட்டதில், நிசப்தமே குழம்பிப்போனது!

Post Comment

No comments: