Tuesday, December 31

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! தொடர் - 4

பிடித்த பாடல் கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது சிலருக்கு பிடிக்கும். அதே மனநிலை தான் இப்போது எனக்கும். எண்ணங்களை எழுத்து வடிவில் பதிகிற போது, தட்டச்சு செய்ய விரல் தேடும் ஒவ்வொரு key'லும் சொல்ல நினைக்கும் வார்த்தை சரியாக வந்து விழவேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.

..2001'ல் இதே மாதிரியான ஒரு டிசம்பரில் க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சை எழுதி முடித்த பிறகு, நண்பர்களோடு கலந்து கூத்தாடி மகிழ்ந்து, (uniform) சட்டையெல்லாம் கையொப்பம் இட்டு, கட்டி பிடித்து அன்பு பொழிந்து வீடு வந்த சேர்ந்த போது, வாழ்க்கை பற்றிய கனவும் எதிர்காலம் மீதான நம்பிக்கையும் மனச் சுவர்களில் ஆரவாரம் செய்து எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அந்தக் காலமும், அதன் நினைவுகளும் இன்னமும் மன இடுக்குகளில் கரையாமல் இருக்கின்றன.

A/L முடித்த உடனேயே கொழும்பில் 2004'ல் ஒரு விளம்பர நிறுவனமொன்றில் கிடைத்தது முதல் வேலை. முதல் மாதம், நான் வேலை செய்த சொற்ப நாட்களுக்கான சம்பளம், 1378 ருபாய். முதன் முதலாக நான் வாங்கிய சம்பளம். அதை என் கைக்கு கொடுத்த லசந்த என்கிற ஒரு சிங்கள சகோதரர் அப்போது உதவி கணக்காளர். இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அதன் பின்னர் 2 வருடங்களில், மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் வேலை. 2006ல் தான் ஒரு நிரந்தர தொழில் கிடைத்தது. HAYLEYS AIG கம்பனி. இரண்டு ஆண்டுகள் ஹட்டன் (Hatton) கிளையில் வேலைக்கமர்த்தப்பட்டு மீண்டும் 2009ன் ஆரம்பத்தில் கொழும்பு தலைமையிடத்திற்கு இடம் மாற்றப்பட்டேன். சில சந்தர்ப்பவாத மனிதர்களால் வேலை இழந்தேன்.

பாடசாலை காலத்து ஊடகவியல் காய்ச்சல் விடாமல் தொடர்ந்த படியினால், சூரியன் fm'ல் வேலை செய்தேன். சிலகாலம் கழித்து நண்பர் Prasath Hari Devarajaஉதவியில் அவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே வேலை கிடைத்தது. அங்கு வேலை செய்த காலத்தில் night shift என்னும் அனுபவமெல்லாம் அத்துப்படி. இரவுமுழுவதும் அமெரிக்க கம்பனிகளின் முதலாளிகளுக்கு சலாம் போட்டு விட்டு, விடிந்ததும் வீட்டில் ஒரு மணிநேரம் ஓய்வின் பின் மீண்டும் சூரியனில் காலை நிகழ்ச்சி. தொடர் வேலை, ஓய்வின்மை கொடுத்த மனச்சோர்வு காரணமாய் இடையிலேயே சுய விருப்புடன் அந்த வேலையை விட்டுவிட்டு அமெரிக்க கம்பனியிடம் முழுமையாக சரணடைந்தேன்.

அந்த வேலைக்கும் என்னால் ஈடுகட்ட முடியாமல், இறுதியாக Ceylinco Healthcare Centre'ல் வேலை செய்துவிட்டு, 2012 july மாதம் வெளிநாட்டில் வேலை கிடைத்து, இப்போது ஒரு உருப்படியான தொழிலோடு, என் ஆரம்ப சம்பளத்தின் பத்தின் பல மடங்கில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இதுவரையான காலத்தில் கடந்து வந்து மனிதர்களையும், கிடைக்கப்பெற்ற அனுபவங்களையும் இங்கே முழுமையாக சொல்லி விடவே முடியாது. இதுவரையிலான "நான்" என்பதெல்லாம் தவறுகளும் பாடங்களும் தான்.

சகோதரர் Karthik Muthuvali'யின் ஒரு கவிதையை என் துணைக்கு அழைக்கிறேன்.

என் நண்பன் எழுதிய
என்னைப் பற்றிய அவனுடைய கதையில்
'அவனுக்கான நான்' இருக்கிறேன்
நான் எழுதிய
என்னைப் பற்றிய என்னுடைய கதையில்
'எல்லோருக்குமான நான்' இருக்கிறேன்
ஒரு வெற்றுக் காகிதத்தின்
மூலையில் கருப்பு மை
தூக்கி எறிந்த
ஒற்றைப் புள்ளியின் மேல்
ஆழ ஊன்றி நின்றபடி
நகர மறுக்கும் பேனா சகிதமாக
வெகு நாட்களாய் நான்
எழுத எத்தனிக்கும்
'எனக்கான நான்' என்ற கதையில் மட்டும்
யாருமில்லை
நான் கூட...
அந்த சுவாரஸ்யமான தேடல் தான் இன்றும் எதிர்காலத்தை புருவம் உயர்த்தி ரசித்தபடி முன்னோக்கி இழுக்கிறது என்னை.

இன்று 2013ன் இறுதியில் இந்த நிமிடத்தில், வாழ்க்கை பற்றிய கனவும், எதிர்காலம் மீதான நம்பிக்கையும் (2001'ன் வருட இறுதி போல) மனச்சுவர்களில் ஆரவாரம் செய்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோருக்கும் என் மனநிலை போலவே இருக்குமா என்பது தெரியாது. ஆனாலும் அந்த உணர்வில் தான் இதை எழுதி இருக்கிறேன்.

இண்டு இடுக்குகளில்., சந்து பொந்துகளில் எல்லாம் சுவாரஷ்யங்களை நிரப்பி வைத்திருக்கிறது வாழ்க்கை! இரண்டாயிரத்து பதினான்காம் வருட ஆட்டதிற்கு தயார்..!!

Post Comment

No comments: