Tuesday, December 10

மானுடம் மாயம்! காதல் அமரம்!!..

கடந்த மாத இறுதியில் என் முகப்புத்தகத்தில் பகிர்ந்த ஒரு பதிவு இது!

சரி! எங்க இருந்து ஆராம்பிக்குறது? எவ்வளவோ எழுதணும் போல இருக்குது! 




(எழுத்து மூலம் இதை பதிவு செய்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும், ஏதோ என்னளவில் என்னை சுற்றி இருப்பவர்களின் உணர்வினை கொஞ்சம் பதிவுசெய்ய வேண்டும் போல தோன்றியது. யாருடைய மனதையும் புண்படுத்த எனக்கு நோக்கமில்லை..!)


..........

காலையிலேயே ஒரு நண்பன் சாட்டில் வந்தான். "என்னடா வாழ்க்கை இது?" என்று சலித்து கொண்டவனின் கதையை கேட்டேன். காதலித்தவள் தன்னை விட்டு வேறு ஒருவனை மணந்து கொண்டாளாம். அவள் மணம் முடித்தது இன்னொருத்தியின் காதலனை. அந்த காதலனின் காதலி இவளது தோழி! (புரியலைனா திரும்பவும் வாசிங்க.)

இன்னொரு கதை சொல்லுறேன் கேளுங்க. என் தோழி ஒருத்தி இருந்தாள். இன்னமும் இருக்கிறாள். அவங்க காதல் ரொம்ப காலம் இழுத்துகிட்டே இருந்துச்சு. சரி நம்ம நம்ம தானே.. எப்போவாச்சும் வீட்டுல ஒத்துக்குவாங்கன்னு, இருந்த காசெல்லாம் அவனுக்கு கொடுத்து, அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி, படிச்சுட்டு வாடா'ன்னு வெயிட் பண்ணிட்டே இருந்தாள். கடைசியில அந்த மைனரு, போன ஊருல ஒரு மைனாவை கட்டிக்கிட்டு செட்டில் ஆகிட்டாரு.

ஹ்ம்ம்...! 

இன்னொரு நண்பன். 8 வருஷ காதல். மச்சி அவ உன்னை தாண்டா பார்க்குறான்னு ஆசையை சோறுட்டி வளர்த்ததெல்லாம் நாம தான். சொல்லி சொல்லியே அந்த காதல் பத்திகிச்சு. அப்புறம் பல வருசத்துக்கு பிறகு வீட்டுல தெரிஞ்சு, பொண்ணு வீட்டுகாரங்க தகராறு பண்ணி, கடைசில அது வேறமாதிரி முடிஞ்சு போச்சு. பொண்ணு வடக்குதிசையில வண்டிகட்டிகிட்டு போய் சேர்ந்துருச்சு!

இப்படியே சுத்தி இருக்குற எல்லா பசங்களுக்கும் பொண்ணுக்கும் ஒரு கதை இருக்கு. மறக்க முடியாம, மறக்க தெரியாம.. மனசுக்குள்ளையே அழுறவங்க பல பேர் இருக்காங்க.

"அதெல்லாம் பேசி என்னடா ஆகப்போகுது விடுடா!'ன்னு கதையை சொல்ல ஆரம்பிச்சவனே sign off பண்ணிட்டு போயிட்டான். கண்டிப்பா அவனை அவளோட நினைவுகள் இன்னைக்கும் கொஞ்சம் கொஞ்சமா சாவடிச்சுக்கிட்டே தான் இருக்கும். என் தோழி கண்டிப்பா வேற ஒருத்தனை கல்யாணம் கட்டிக்கிட்டு நல்லா தான் இருப்பாள். ஆனாலும் அவளால பழசை எல்லாம் மறக்கமுடியுமா? 8 வருசத்து காதலை மறந்துட்டு வீட்டுல சொல்லுற பொண்ணை கல்யாணம் கட்டிகிட்டு என் நண்பனுக்கும் வாழ தெரியும்! ஆனால், வரப்போற பொண்ணுக்கு இவனால உண்மையா இருக்க முடியுமா?..

..........

ந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் மட்டுமே காரணம் சொல்லி விட்டு அடுத்த நிமிடத்துக்குள் போய்விட எத்தினை பேருக்கு இங்கே தைரியம் இருக்கிறது? கூடவே இருந்து ரத்தமும் சதையுமா பார்த்து பழகுன ஒரு உயிர், தன்னோட உணர்வுகளை நோகடிச்சுட்டு இன்னொரு வாழ்க்கைக்குள்ள போறதை தாங்கிக்க முடியாம தானே இங்க பலபேர் தற்கொலை முடிவுக்கே வர்றாங்க!

கொஞ்சம் மாசத்துக்கு முதல்ல என் முகப்புத்தக நண்பிகளின், தோழி ஒருத்தி தற்கொலை செய்துகொண்டதை பற்றி பகிர்ந்திருந்தேன். காதலனோட ஏதோ தகறாரு. மனசுடைஞ்சு ரொம்பவே கலங்கி போய் இருந்துருக்குறாள். முதல் நாள் எல்லா தோழிகளையும் சந்திச்சுட்டு வீட்டுக்கு போன பொண்ணு அடுத்தநாள் காலையில தன்னையே தீமூட்டி தற்கொலை செய்துகிட்டாள். இவ்வளோதுக்கும் அந்த பொண்ணோட அப்பா அம்மா ரெண்டு பேருமே டாக்டர். இந்த பொண்ணு வெளிநாட்டுல போயிட்டு படிச்சுட்டு வந்த பொண்ணு! 

இது ஒன்னு தான். ஆனால் சொல்லனும்னு ஆரம்பிச்சால் அவ்வளோ இருக்கு..!

..........

ந்த வலியையும் வேதனையையும் சொல்ல முடியாது. காதலிக்குற வயசுல அது எவ்வளோ சுகமா இருக்குதோ அதே அளவுக்கு வலியையும் அனுபவிக்க வைக்குது. இதை சொல்லி நான் யாரையும் அட்வைஸ் பண்ண வரலை. அது என் வேலையும் இல்லை.

playboy'யா திரியுற பல பசங்களுக்கு முதல் காதல் தோல்வி! பார்க்குற பசங்களை எல்லாம் நம்ப முடியாம ஓரமா ஒதுங்கி போய் தனியா வாழுற, பொண்ணுங்க பலருக்கு தன் மனசுல ஒரு ஆணின் வஞ்சனை!

எனக்கே தெரியுது.. நான் என்னை மாத்திக்கனும்னு! ஆனால் என்னால முடியலையே.. திரும்பவும் நான் தோத்துபோயிடுவனோன்னு பயமா இருக்கு! யாரோடையும் அன்பா பழக முடியல! எல்லார் மேலயும் வெறுப்பாவே இருக்கு! எதையுமே செய்ய பிடிக்கலை. எனக்கே தெரியலை நான் என்ன பண்ணுறேன்னு.. என்னை எனக்கே பிடிக்கலை! எனக்கு வாழ பிடிக்கலை! -(உங்களில் ஒருவன்/ஒருத்தி)

..........

escapism அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு. 

சின்ன வயசுல இருந்தே எங்க அப்பா அம்மா அதை தான் சொல்லி கொடுத்துருக்காங்க.. தவழுற குழந்தை கீழ விழுந்துருச்சுன்னா உடனே அது அழுறதை நிப்பாட்டுறதுக்காக, அது விழுந்த இடத்துல ஒரு அடி போட்டு.. சரிமா! சரிமா! அழாத.. உன்னை இது தானே அடிச்சுச்சு.. சரி நான் அதை அடிச்சுட்டேன்!! சரி சரி.. சரியாய் போச்சு'ன்னு சொல்லியே... நம்மளை வளர்த்துட்டாங்க! அதை தான் இவளோ வளர்ந்த பிறகும் இந்த மனசு நம்பிக்கிட்டு இருக்கு!

பொதுவாகவே இந்த மனசு எப்படின்னா.. தன்னை பிழை சொன்னால் அதுக்கு பிடிக்கவே பிடிக்காது! தனக்குள்ள இருக்குற எதையுமே திறந்து பார்க்காது! அதை பார்க்கத் தயாரா இருக்குறவங்களால தான் தன்னை மாத்திக்கவும் முடியும்! 

..........

வாழ்கையை தெம்பூட்டுற எத்தினையோ ஆச்சர்யங்கள் நம்மளை சுத்தி நிறைய இருக்கு. கண்ணை திறந்து பார்க்குறது தான் இல்லை. நீங்க கடவுளை நம்புங்க நம்பாதிங்க. miracles மேல நம்பிக்கை வைங்க வைக்காதிங்க. ஆனா.. உங்களை நம்புங்க! நீங்க தானே உங்களோட முதல் ரோல் மாடல்! அதை நம்புங்க!

சரி நீ என்ன சாதிச்சு கிழிச்சுட்டு இப்பிடி பேசிகிட்டு இருக்குற?'ன்னு கேட்குறவங்க என்னை திட்டுறதுக்கு எடுக்குற நேரத்துல.. உங்க குடும்பம் உங்க மேல வைச்சுருகுற நம்பிக்கை பத்தி யோசிக்க டைம் எடுங்க!! 

யாராலயும் கடந்து போனதை எல்லாம் சரி செய்ய முடியாது! கண்டிப்பா காஞ்சுபோன மரத்துல எங்கேயாவது துளிர் விடும்!

மானுடம் மாயம்! காதல் அமரம்!!..

Post Comment

No comments: