Sunday, June 16

S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு!

வாசகர்களுக்கு (நம்பி வாசிக்கலாம்னு வந்தவங்களுக்கு ):
இந்த இசை இமயத்தின் குரலுக்கு காதல் கொண்டு மயங்கிக்கிடக்கும் உங்களைப்போல, நானும் ஒரு ரசிகன்.. இல்லையில்லை வெறியன்! கடந்த 4ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு ஒரு சிறு வாழ்த்து செய்தியை நானும் சொல்லி வைக்க ஆசை பட்டேன். என் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து SPB என்கிற எழுத்துக்கள் மூன்றுமே என்னை கட்டிப்போடுகிற மந்திரச் சொல்! இந்த குரலின்பால் உள்ள காதலால் இந்த பதிவு சற்று முத்திப் போகலாம். முடிந்தவரை இயல்பான முறையில் (சுருக்கமாகவும்) எழுத முயற்சிக்குறேன். இது முழுக்க முழுக்க என் அனுபவமும் என் கருத்துக்களும் மட்டுமே.....
   ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....


 நேர்ல கண்டால் கட்டிப்பிடிச்சு கொஞ்சுவேன், காலுல விழுந்து கும்பிடுவேன்..  யார் கண்டது, பேச்சு மூச்சு இல்லாமல், கண்கள் கலங்கி என்ன செய்றதுன்னு தெரியாமல் ஸ்தம்பித்து போனாலும் போகலாம். இசைக்கான பிரியம் எவ்வளவு என்று என்கிட்டே யாராச்சும் கேட்டால் என்ன பதில் சொல்லுவேனோ.. அதே பதில் தான் SPB மீதான பிரியமும்.

சையமைப்பளர்களுக்கு "நல்ல இசை" அடையாளம் என்றால்,  இனிமையான பாடலுக்கு அடையாளம் அதை பாடும்  பாடகர்கள். எனக்கு திரைப்படம் பார்க்க ரொம்ப பிடிக்கும். தமிழ்சினிமா மீதும் அதன் கலைஞர்கள் மீதும் நிறைய காதல் உண்டு. இதையே இதற்கு முன்னால எழுதின பதிவுகளிலும் சொல்லி இருப்பேன். படம் பார்க்க பைத்தியமா மாறினதுக்கு முதல் காரணம் சூப்பர் ஸ்டார் என்றால் தமிழ் இசைக்கு எனக்கு SPB  தான்! இசைக்கு மயங்காதவர்  எவருமே இல்லை. நாம் பயணிக்கும் இதே உலகின் இன்னோர் மூலையில் ஒரு மாபெரும் ஜீனியஸ் வாழ்நாள் சாதனை செய்துகொண்டு இருக்கிறார் என்பதும், அவரை நேசிக்கிறோம் என்பதும் நிஜமாகவே பெருமைக்குரியது தானே?

ஒருத்தரை ரொம்ப பிடிச்சுப்போச்சுனா அவங்களை பற்றி நிறைய தேட ஆரம்பிப்போம். அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவங்கள் மேல ரொம்ப நெருக்கமான அன்பை உருவாக்கும். SPB'யை, அவரோட பாடும் அழகை ரசிக்குறவங்க எல்லாருக்கும், அவரது ஆரம்ப கால பாடல்களும் அந்த பாட்டை இப்போ கேட்கும் போதும் கூட அந்த பழைய ஞாபகங்களும் நிச்சயமா வந்து போகும். அப்பிடி என்னோட கதையை சொல்லுறேன் கேளுங்க..

ஜெயலிங்கம் மாமா. என் அம்மாவுக்கு தம்பி. ஜெயா அங்கிள்'ன்னு தான் கூப்பிடுவோம்.  என் குடும்பத்தின் மீதும், என் மீதும் நிறை பாசம் அவருக்கு. சின்னவயசா இருக்கும் போது... (நான் சொல்லுறது எனக்கு சின்ன வயசா இருக்கும் போது) ஊருக்கு போனாலோ, இல்லேன்னா அவரு எங்க வீட்டுக்கு வரும்போதோ நான் அவரு கூடத்தான் அதிகமா நேரம் செலவழிப்பேன். அப்பிடி ரொம்ப சின்ன பையனா இருந்தப்போ ஊருல எங்களோட அம்மாயி (பாட்டி) வீட்டுக்கு எப்போ போனாலும் என்னை தூக்கி வைச்சுக்கிட்டு படம் பிடிப்பாரு. என்னை வீடியோ எடுப்பாரு. ஊருல அழகான மலை பிரதேசங்கள், ஆறு அருவியெல்லாம் இருக்கு. அங்க எல்லாம் கூட்டிகிட்டு போவாரு. கடைக்கு கூட்டிட்டு போயிட்டு எனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி கொடுப்பாரு. அவரோட வீடியோ கேசட் எல்லாம் போட்டு காட்டுவாறு. வீடியோ காட்சிகளோட பின்னால ஒலிக்குற பாடல்கள் எல்லாம் இப்போ நாங்க கேட்குற இடைக்கால பாடல்களின் தொகுப்பு தான். 
தலைவரோட 
மில்லியன் டாலர்  ஸ்டைல் நடை'க்கு
 SPB அவர்களின் குரல் செய்யும் மந்திரம்...

(இதேமாதிரி கையை பாக்கெட்ல போட்டுகிட்டு நான் நடந்ததை என் மாமா வீடியோ எடுத்து வைச்சுருந்தாரு. அதை உங்களுக்கு காட்டுற நல்ல எண்ணம் எனக்கு இல்லை. நீ காட்டினாலும் அதைப்பார்க்குற எண்ணம் எங்களுக்கு இல்லை'ன்னு  சொல்லுறிங்களா.. அதுவும் கரெக்ட் தான்!)
 
அந்த பாடல்களின் வழியாக தான் SPB யின் குரல் என்னை ஆட்டுவிக்க தொடங்கியது. இசை அமைப்பாளர், பாட்டை எழுதினவங்க யாருன்னு எல்லாம் தேடிப்பார்த்து அதை தெரிஞ்சுக்கனும்னு  அந்த வயசில எனக்கு தெரியல.அந்த குரல் மட்டும் தான் என்னை முழுக்க முழுக்க இழுத்துக்கொண்டது. இதெல்லாம் நடந்தது 80-90களில். அப்போவே SPB அவர்கள் 30,000 பாடல்களை நெருங்கிக்கொண்டிருந்த காலகட்டம். எனவே அவர் பாடிய நிறைய பாடல்களை அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருக்கும்  வாய்ப்பு கிடைத்தது.

ஆன்மாவோடு பேசும் இசைக்கு நாங்கள் எல்லோருமே அடிமை. அந்த இசை எப்போ எங்க நிகழும்னு தெரியாது. ஸ்வரங்கள், ஸ்ருதி அசைவு, தாளக் கட்டுப்பாடு இப்படி சில உள்ளீடுகளோடு தான் ஒரு இசை அமைகிறது. இதெல்லாம் இப்போ தெரியுது. ஆனா இது எதுவுமே தெரியாத, அடிப்படை இசை ஞானமே இல்லாத சிறுவனாக இருக்கும் போது என்னை ஈர்த்தது தான் SPBயின் குரல். அம்மாவின் தாலாட்டு போல தான் இந்த குரல். ஒரு குரல்.. ஒரே குரல்.. என் ஆன்மாவோடு பேசுவதாக உணர்ந்தேன்.. 

பால்யகாலம் கடந்து வாலிப வயதில் நுழையும் போது, சினிமாவும், சினிமா சார்ந்த விடயங்களும் என் வாழ்வில் நிறைய தாக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தன. வானொலிக்கு அதில் மிக முக்கிய பங்கு இருந்தது. மெல்ல மெல்ல காலம் தன்னை என்னுள் அழுத்தி நகர்ந்து போக தொடங்கியது. அந்த அழுத்தத்தை இறக்கி வைக்க எனக்கு இசை தேவைப்பட்டது. என் இசை தெரிவுகளில் மிகப்பெரிய இடத்தை "பாடும்-நிலா" தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இன்னமும் வைத்திருக்கிறார்..

என்னமோ எனக்கு மட்டுமே SPB யின் குரல் இப்படி பிடித்திருப்பதை போல எழுதிகொண்டுருக்கிறேன். இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களில் பலருக்கு இதே உணர்வுதான் இருக்கும். என் அனுபவத்தை இந்தமாதிரி  உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆசையில் எழுத தொடங்கிய பதிவு ரொம்ப நீண்டுகிட்டே போகுது... சொல்லுறதுக்கும் பகிர்ந்துகிறதுக்கும் இன்னமும் நிறைய இருக்கு... வாசிக்குற உங்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தும் என்றதுக்காக.. மற்றைய அனுபவங்களை இன்னொரு பதிவாக எழுதலாம்னு இருக்குறேன்...


(இதுக்கு நான் என்னத்தை எழுத?)

யாராச்சும் பாடிட்டு இருந்தால், மனசுல உனக்கென்ன SPB'ன்னு நினைப்பா'ன்னு கேட்பாங்க. இந்த குரலுக்கு இருக்குற அடையாளம் காரணமாத்தான் அப்பிடி கேட்பாங்க. முறைப்படி சங்கீதம் கத்துக்காமல் பாடுறதுக்கு ஆர்வம் காட்டுற எல்லாருக்குமே SPB தான் காக்கும் கடவுள்! எனக்கும் தான்! 

பகுதி -2 விரைவில்......

Post Comment

No comments: