Friday, June 21

பாடும் நிலா..! evergreen..! (02)

பாடும் நிலா என்கிற பெயரில் இருக்கின்ற கலைநயம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு அந்த பெயரை கேட்கும் போதெல்லாம் முழுநிலவாய் மனம் நிரம்புவதும்! 
 S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு! பதிவின் தொடர்ச்சி இது...


மனதின் சந்துகளில் இசை நுழைந்து ஞாபகப்பள்ளங்களில் "S.P.B." என்கிற பெயர் பாயும்போதெல்லாம் எத்தினையோ சுகமான பாடல்கள் இதயசுரங்கத்துள் ஒலித்துகொண்டே இருக்கிறது.


சமீபத்தில் ஒரு மேடை நிகழ்வில் "100, 200 பாடல்கள் பாடியிருந்தால் நீங்கள் கேட்கும் பாடலெல்லாம் என்னால் உடனே ஞாபகப்படுத்தி பாடி விட முடியும், 36000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தொலைத்துவிட்டேன், எப்படி ஞாபகத்தில் இருத்திக்கொள்வது!" என்று SPB அவர்கள் தாழ்மையோடு தன்னிலை விளக்கம் கொடுத்தார். இதே நிலையில் தான் அவரது ரசிகர்களும் இருகின்றோம்.எந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்? என்று கேட்டால், எத்தனை எத்தனையோ பாடல்கள் ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கின்றன. 

பாடும் நிலாவின் பாடல்கள் எப்போது எங்கே கேட்டாலும் இதயத்தை கவ்விக்கொள்கிறது. ஆயிரக்கணக்கில் குவிந்துகிடக்கும் என் விருப்பத்தெரிவுகளை பட்டியல் இட்டு சொல்லிவிட்டு, தவறவிட்ட பாடல்களில் ஒன்று பின்னொரு நாளில் சட்டென ஞாபகம் வரும்வேளையில், "அட! இதை எப்படிடா சொல்லாமல் விட்டோம்" என்று வருந்தும் விருப்பமில்லை எனக்கு. ஆனால் இந்த பாடல் இல்லாமல் என் பட்டியல் அமையாது என்று சொல்லும் பாடல் இது..


பாலு அவர்கள் தான் பாடிய சினிமா பாடல்களை மேடை நிகழ்வுகளில், கலை நிகழ்ச்சியின் போது பாடுவதை கேட்பது என்பது அவரது ஒவ்வொரு ரசிகருக்கும் வார்தைகொண்டு வர்ணிக்க முடியாத அனுபவம். எனக்கு அந்த வரம் இன்று வரையில் கிட்டவே இல்லை. எத்தினையோ தடவை கொழும்பில் அவரது நிகழ்வுகள் நடக்கும் தருவாயில், நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் இருந்தும் இறுதி நேர நெருக்கடிகளில் அதை தவற விட்டு விடுவேன்! ஒரே ஒரு தடவையாவது அதை அனுபவிக்கும் வாய்ப்பினை பெறத் துடிக்கின்றேன்..

"பாடலை பாடி இருப்பவர்  S.P.பாலசுப்ரமணியம்" என தாங்கிவரும்  பாடல்கள் இன்றும் எந்த வானலை அலைவரிசைகளில் ஒலித்தாலும் எவ்வளவு பரபரப்பிலும் நிதானமாக பாடலின் சில வரிகளை சரி கேட்டு விட்டு நகருவதும்,இன்று வெளிவரும் புதிய திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம்பெறுமா எனத் எதிர்பார்த்து தவிப்பதும், அவரை வெறித்தனமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு வாய்க்கும் அனுபவம்.

எப்படிப்பட்ட பாடல்களையும் மிக அனாயஷ்யமாக பாடிவிடும் பாலு அவர்கள், இன்றும் தனது இசை ஞானம் பற்றி எந்த பேட்டியிலும் கர்வத்துடனோ, அல்லது தலைகனத்தோடோ பேசியது கிடையாது என்பது ஒரு தன்னடக்கம் கொண்ட கலைஞனாய் அவரை அதிகம் நேசிக்க வைக்கிறது. 

காலம் காலமாக முறியடிக்கபடாமல் இருக்கும் அவரது மாபெரும் சாதனைகளுக்கு அவர் என்றுமே நிரந்தர சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆனால் அவரது ஆரம்ப காலம்......

மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில் பாட, SPB அறியாமலே, அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க, SPB அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார். ஆனால் பரிசு கிடைக்கவில்லை. எனினும் ஒரு சுவையான அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற ஓர் இசையமைப்பாளர் அந்தப் போட்டியின்போது இருந்தார். இளைஞர் SPBயிடம் 'உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்' என்று உற்சாகமூட்டி, பாலுவைப் பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார். எப்படி முதல் பாட்டுப் போட்டியில் SPBக்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல், முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. SPB யும் சரி, அவரை அழைத்துச் சென்ற கோதண்டபாணியும் சரி, மனம் தளரவில்லை.

அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் SPBயின் பாடல்கள். தனக்கு முதன்முதலில் வாய்ப்பிற்காக அழைத்துச் சென்ற இசையமைப்பாளரை இன்றளவும் SPB மறக்கவில்லை. பாட ஆரம்பித்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு 'கோதண்டபாணி ஆடியோ ரிக்கார்டிங் தியேட்டர்' என்று குருவின் பெயரையே சூட்டி, தன் நன்றிக் கடனைச் செலுத்தினார். SPBயின் குரல் மட்டும் வித்தியாசமானதன்று அவரின் மனமும் மற்ற கலைஞர்களிடமிருந்து மாறுபட்டது என்பதை உணர வைக்கும் சம்பவம் தான் இது.

முதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால், அதைவிடச் சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார். ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகாளக பரிசு வாங்கிக் கொண்டிருந்தார் SPB. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால், பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும். இந்நிலையில் மூன்றாவது ஆண்டுப் போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் SPB-ஐ இரண்டாவது பரிசுக்குத் தள்ளி விட்டார்கள். நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார். போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணிப் பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலைப் பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற SPB தன் பாடலைப் பாடி முடித்தார். பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏகக்கோபம். அவரே மைக் முன்னால் வந்து "இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை" என்று கூறி, SPB க்கு முதல் பரிசையும், அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கித் தந்தார். திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் SPB. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கிறார் SPB. இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு SPBக்கு பரிசு வாங்கிக் கொடுத்த, அந்தப் பாடகி யார் தெரியுமா?

பாலுவின் திறமைக்காகப் போராடி முதல்பரிசை வாங்கித்தந்த அந்த பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி. S. ஜானகி அவர்கள் தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி. S. ஜானகி அவர்களைப் பெரிதும் மதித்து வருகிறார் பாலு அவர்கள்.

உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும் உண்மையான திறமையிருந்தால்தான், உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்குப் படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் "இயற்கையென்னும் இளைய கன்னி" என்ற டூயட். இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை, தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு. அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல், ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் SPB ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் ஆயிரம் நிலவே வா என்று அடிமை பெண்ணில் ஒலித்த பாடல்தான்.

'ஆயிரம் நிலவே வா' பாடலை SPB பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் அவர்கள்தான். பாலு அந்தப்பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல ஜுரத்தில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார். பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்து கொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கைக் கான்சல் செய்துவிட்டார். இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை. தன்னைப் போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு ஸ்தாபனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.

பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம், "தம்பி! என் படத்திலே பாட்டுப்பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க, உங்க நண்பர்கள் இந்தப்படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க. உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து, உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது." என்று கூறி வழியனுப்பினார்.


ஊதா நிறத்தில் மேலிருக்கும் பத்திகள் சிலவேளை நீங்கள் முன்னமே வாசித்திருப்பீர்கள். முழுக்கவும் ஒரு வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதை வசிக்கும் போதே உள்ளத்தில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றால், SPB அவர்களின் குரல் மட்டுமல்ல அவரது வாழ்கையும் உற்சாகமூட்டும் சங்கதி தான்!

40 ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு கலைஞன் சாதனை செய்துகொண்டு கம்பீரமாய் அந்த துறையில் இருக்கிறான் என்றால் அதற்கான உழைப்பும், திறமையையும் மீறி நிச்சயமாக ஒரு அற்புதமான ஷக்தி அந்த கலைஞனிடம் வாய்த்திருக்கத் தானே வேண்டும். இன்று இருக்கும் இளைய தலைமுறை இசை அமைப்பாளர்களுக்கும் இவரை தன் இசையில் ஒரு பாடலையாவது பாட வைக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். இளையராஜாவுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் மட்டும் தான் SPB அவர்களை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அநேகமாக ARR இசையில் இவர் பாடிய எல்லா பாடல்களுக்குமே நான் அடிமை. வேகப்பாடலானும் சரி.. மெல்லிய மெலொடி என்றாலும் சரி.. கர்நாடக இசை சார்ந்த பாடல் என்றாலும் எல்லா நேரமும் ARR-SPB கூட்டணி ஜெயித்து இருக்கின்றது! இந்த பாடல் என்றுமே தவிக்கமுடியாத ஒரு பாடல்..


தனியாக பாடினாலும், டூயட் பாடினாலும் எப்போதுமே இவரின் குரல் தனி முத்திரை தான்! சங்கதிகளில், ஸ்வரங்களில், பாடல் வரிகளில், மெட்டுக்களில் என்று ஒரு பாடலின் எப்படிப்பட்ட தனித்துவத்திலும் பாடும் நிலாவின் குரலால் இன்னொரு தனி வடிவம் கிடைத்துவிடுகிறது. இந்த குரல் அவரது கோடி கோடி ரசிகர்களின் பொக்கிஷம். இந்திய திரை இசை உலகின் மாபெரும் அடையாளம். எந்தன் இசை மயக்கத்தின் முன்னோடி.

இந்த பதிவில் நான் எழுத நினைத்தவை இன்னமும் நிறைய இருக்கின்றது. மீண்டும் ஒரு பதிவில் SPB அவர்களின் மீதான மரியாதையை, மயக்கத்தை வேறோர் கோணத்தில் பதிவு செய்யக் காத்திருக்கின்றேன். இசையை நேசிக்கும் எல்லோருடைய பிரார்த்தனைகளிலும் பாடும் நிலா S.P. பாலசுப்ரமணியம் அவர்களது ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திட்குமான வேண்டுதல்கள் நிச்சயம் கலந்திருக்கும். LONG LIVE SPB Sir!

Post Comment

No comments: