Tuesday, May 7

ஒரு பாட்டு.. இரண்டு படம்..


♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....
சைக்கும் எனக்குமான உறவு இப்பொழுதெல்லாம் அதிகம் நீடிக்கின்றது. நிறைய தமிழ் திரையிசை பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். பார்க்கவும் நேரம் அமைவதுண்டு. youtube இணையத்தளம் அந்த வாய்ப்பினை இலவசமாகவே வழங்குகிறது. பெரும்பாலும்  பால்ய காலத்தில் வானொலியில், கேசட்களில் மட்டுமே கேட்ட இடைக்கால பாடல்களை ஒளிவடிவில் பார்க்கும்போது அவை படமாக்கப்பட விதம் சிரிப்பை தருகிறது. சகஜமாக இருந்திருக்கலாம் அந்த காலகட்டத்தில் அப்படி படமெடுப்பது. இன்றைய தலைமுறையினரின், ரசனைகளில் வித்யாசம் நிறைய வந்துவிட்டது. செவிக்கு மட்டுமே விருந்தாக அமைந்துவிடும் பாடல்கள் போதும் என்றே தோன்றுகிறது. அமைதியான மெல்லிசை வடிவம் தான் என் சாய்ஸ். இப்பொழுதும் ஏதேனும் ஒரு புதிய திரைப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ந்தவுடன், நான் முதலில் தேடுவது அப்படத்தில் இருக்கும் மெல்லிசை பாடலினை தான். அப்படி தேடிய பாடலின் ஒரு வீடியோ வடிவம் உங்களுக்காக.. காட்சிகள் கண்களை களவாடக் கூடும் , செவியை கூர்மைபடுத்திக்கொண்டால், வரிகளில் இதயமும் களவுபோகலாம்.
காதலை ரசிக்கும், காதலியை ரசிக்கும் அனைவருக்கும் இந்த பாடல் பிடிக்கும். இதே ஜோடி ஒரு மலையாள இசை ஆல்பத்தில் மிகவும் பிரபல்யம். மொழி கடந்து இசையை நாடுபவர்கள் இங்கே க்ளிக்குங்கள்.
♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... 
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, கடந்து வாரத்தில் வெளியான இரண்டு படங்களை திரையரங்கில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். விமர்சனம் எழுதும் எண்ணமெல்லாம் இப்போதைக்கு இல்லை. அதை விமர்சனம் என்ற பெயரில் எழுதவும் விருப்பமில்லை.
அவ்விரு திரைப்படங்கள்  பற்றிய ஒரு சிறு அனுபவ பகிர்வு.
படத்தின் கதாநாயகனை, தனி-பத்தி எழுதி அறிமுகம் செய்யத் தேவையே இல்லை. என்னளவில் சொல்வதென்றால், இவரின் நகைச்சுவை உணர்வை நேசிக்கத்தெரியாத, ரசிக்கதெரியாத மனிதர்களை தேடி கண்டுபிடிப்பது கடினம். விஜய நகர பேரவையின் விகடகவி தென்னாலிராமனுக்கும், விஜய் டிவியின் ஆஸ்தான Video Jockey சிவகார்த்திகேயனுக்கும் நெருங்கிய தொடர்புகள் நிறைய இருக்கின்றன.
சிவகார்த்திகேயன் என்கிற பெயருக்கான அடையாளம் பிரம்மிப்பான ஒன்று. சொந்த முயற்சியில், சின்னத்திரையில் தனது திறமையை நிரூபித்து, வெள்ளித்திரைக்கு வந்து தனது one-line counters மூலம் திரையரங்கையே அதிரச்செய்யும் "வாய்" உள்ள பிள்ளை. கண்டிப்பா தமிழ் சினிமா ரசிகர்கள் வாழவைப்பார்கள். நான் தீவிர கவுன்ட்டர் காமெடி ரசிகன். சிவாவின் ஹிட் அடித்த அநேகமான அனைத்து youtube வீடியோக்களையும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கும் எண்ணற்ற ரசிகர்களில் நானும் அடங்கி விடுவேன். நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவா நடிக்க இருப்பதாக செய்தியறிந்த நாள் தொடங்கி அப்படத்திற்கான எதிர்பார்ப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது என்னவோ உண்மைதான். படத்தை இந்தா ரிலீஸ் அந்தா ரிலீஸ் என்று மேதினம் அன்று வெளியிட்டார்கள். இங்கே நான் இருக்கும் இடத்தின் அருகில் ஒரு திரையரங்கில் பகல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. திரும்பி வந்து, இரவுக் காட்சிக்கு நண்பனோடு சென்றேன். 
சிவகார்த்திகேயன் தன்னை நடிக்கத்தெரிந்தவனாக நிரூபித்துள்ள படம். இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டரில் சொன்னதை போல, சிவாவுக்கு நல்ல உடல்மொழி வாய்த்திருக்கிறது. டைமிங் பற்றி செல்வராகவன் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை, அதில் சிவா கில்லி. அனிருத் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே சூப்பர் ஹிட். படத்தோடு பார்க்கையில் சலிப்பு வரவில்லை. காமெடி என்ற பெயரில் காம நெடி இல்லை வசனத்தில். காட்சிகளின் மெருகேற்றத்தில், ஒளிப்பதிவாளருக்கும் பின்னணி இசைக்கும் நிறையவே பங்கு உண்டு. ப்ரியா ஆனந்தை எனக்கு வாமனன் படத்தின் போதே பிடிக்கும், என்பதால் அவர் வரும் காட்சிகளில் ஒரு பரவசம். படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முடிந்தும் பாதிப்பில் மீளும் வரை, நண்பனிடம் சொல்லி சிரித்த காட்சிகள் நிறையவே இருந்தது.
திரையரங்கில் முதல் வரிசைக்கு பின்னால் நான்காவது வரிசையில் நடுவில் தான் இடம் கிடைத்தது. இங்கேயும் சிவாவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பும், ரசிகர் கூட்டமும் உள்ளது என்று, திரையரங்கில் படம் பார்த்து தெரிந்து கொண்டேன். முதல்பாதி முழுக்க சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை. இரண்டாம்பாதியில் கொஞ்சம் திரைக்கதை தோய்வு. மொத்தத்தில் படம் நல்ல ஒரு டைம் பாஸ்.
 அடுத்தது, 
 
படத்திற்கு போவதற்கு முதல்,  

குறும்படங்களின் காதலன் நான். நெஞ்சுக்குநீதி தான் நான் பார்த்த முதல் குறும்திரைபடம்.பிறகு, வேறு வேறு குறும்படங்களை தேடி பார்க்க ஆரம்பித்து விட்டேன். குறிப்பிட ஒரு சில நிமிடங்களில் ஒரு குட்டி திரைப்படத்தை பார்க்கும் ஆர்வம் அலாதியானது. அதில் பலருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக மனதிலேயே நினைத்துகொண்டேன். எனக்கு பல சிறந்த குறும்திரைபடங்களை அறிமுகம் செய்து வைத்தவர் நண்பர் ஹரி. நானும் ஹரியும் இன்னுமொரு நண்பரும் சேர்ந்து ஒரு குறும்படம் இயக்கும் முடிவை எடுத்தோம். அதெல்லாம் மற்றொரு நாளில் தனி பதிவொன்றில் சொல்ல இருக்கிறேன் (இது வேறயா?).
விஜய் சேதுபதி என்கிற இளைஞர் அவரது சொந்தவாழ்வில்  கடந்து வந்த பாதை பற்றி ஏற்கனவே சில டிவி பேட்டிகளில் பேசக் கேட்டு மற்றும் இணையத்திலும் அவரை பற்றி படித்த பிறகு, மனதுக்கு மிக நெருக்கமாகி விட்டார். அதற்கும் முதல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படங்களை பார்த்து பிரம்மித்து போயிருந்த எனக்கு அவரது இயல்பான அலட்டல் இல்லாத நடிப்பின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் திரை உலகம் மீதுள்ள ஈர்ப்பு என்னை போன்றவர்களுக்கு அதிகம் தான். அதனால் தான் புதிய முயற்சிகளை, திறமையாளர்களை பார்க்கும் போதெல்லம் மனம் தானாகவே ஈர்க்கப்படுகிறது. அப்படியாக சூது கவ்வும் திரைப்படம் பற்றியும், அதில் இணையும் திறமையாளர்கள் பற்றியும் கேள்விப்பட்டபோது,படம் பற்றிய ஆர்வம் பற்றிக்கொண்டது.
இனி படத்தை பற்றி பேசலாம்,
கதை சாதாரண கதை தான். அதை சொல்லிய விதத்தில் தான் சுவாரஸ்யம் இருக்கிறது. நடிகர்களின் தேர்வு என்பது ஒரு இயக்குனருக்கு மிகப்பெரும் சவால். கதைக்கு பொருத்தமானவர்களை திரையில் கொண்டுவந்தாலே படம் நிச்சயம் பாதி வெற்றி தான். தான் இயக்கிய குறும்படங்களில் நடித்தவர்கள், மற்றும் அவரது சமகால நண்பர்களின் பரிந்துரை, மேலும் சில தகுதிவாய்ந்த திறமையான கலைஞர்கள் கூட்டணியோடு களம் இறங்கியவர், திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களின் இரண்டரை மணி நேரத்தின் பெறுமதி அறிந்து தனது திரைக்கதை சொல்லும் உத்தியை கொண்டு  ரசிகர்களின் மனதை கவ்வி இருக்கிறார், இயக்குனர் நலன் குமாரசாமி. 
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்யும் விதமாகட்டும், அந்த கதாபாத்திரங்களை இணைத்த விதமாகட்டும்,காட்சிக்கு காட்சி கதை சொல்லும் விதமாகட்டும். அனைத்திலுமே பெர்பெக்ட் இயக்குனர் என நிரூபிக்கிறார் நலன். ஒரு சம்பவம், அதில் ஒரு குழப்பம், ஒரு திருப்புமுனை, அடுத்த காட்சிக்கான ஆர்வம் என்று விறுவிறுப்பை ஏற்றியதாலும், திரையில் இருப்பவர்களின் நிலை பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவைக்கும் தன்மையை ஏற்படுத்தியதாலும் லாஜிக் மீறல்கலை எல்லாம் கடந்து படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை கொண்டுவந்துவிடுகிறார்கள்  ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இருவரும்.
திரைக்கதை, நடிகர்கள்,வசனங்கள் போலவே படத்தின் பின்னணி இசை படத்திற்கு பிரதான பலம். சின்ன சின்ன இசைக் குறியீடுகள் காட்சிக்கு பெரும் பலம். உதாரணமாக விஜய் சேதுபதி  பேங்க் மேனேஜரிடம் கடத்தல் பணத்தை வசூலித்து விட்டு கம்பீரமாக நடந்துவரும் இடம், கைத்தட்டல் விசில்சத்தம் காதுகிழித்தது. பாடல்களில் கதை சொல்லிய விதமும் ரசிக்க வைக்கிறது என்பதால் பார்ப்பவர்களின் கண்களுக்கு தொய்வில்லை. படம் முடிந்தும் படத்தின் பின்னணி இசை காதுக்குள் ஒலிக்கிறது. அது தான் படத்தின் வெற்றி. ப்ளாக் ஹியூமர் என்னும் இந்த வகையறா கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ஏற்கனவே முழுக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு திரைகதை உத்தி தான் என்றாலும், இந்த படம்தான் அதன் கடமையை திறம்பட செய்திருக்கிறது என்பேன்.
பதிவை எழுத ஆரம்பிக்கும் போதே விமர்சனம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு, என் பதிவு ஒரு விமர்சனம் போலவே எழுத்தபட்டுகொண்டிருக்கிறது. பெரும்பாலான விமர்சகர்களின் பதிவுகளை வாசித்த பாதிப்பு. நான் தவழும் குழந்தை தானே, மன்னிப்பீர்கள். 
இப்படம் இங்கே ஒரு சில திரை அரங்குகளில், அதுவும், குறிப்பிட்ட தினத்தில் ஒரே ஒரு காட்சி தான் ஓடுகிறது. எதிர்நீச்சல் படம் பார்க்கப்போன போது அங்கே அதே திரை அரங்கின் வெளியே படத்திற்கான கட் அவுட் பார்த்த ஞாபகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, வேலை முடிந்ததும் ஒரு நண்பரோடு படம் பார்க்க போனேன். ஆனால் அங்கே திரையரங்கில் சூது கவ்வும் கமிங் சூன். நண்பருக்கும் எனக்கும் சூது கவ்வியது. வேறொரு நண்பருக்கு அழைபேசி, படம் எங்கே திரையிடப்படுகிறது என்று கேட்டறிந்தேன்.
திரையரங்கிலே தான் படம் பார்ப்பேன் என்று திரும்பி வந்து மறுநாள் சனிக்கிழமை மாலை, முன்னந்தி மாலையில் அலைபேசிய நண்பரோடு வேறோரு திரையரங்கில் அந்த விசேடகாட்சிக்கான டிக்கெட் எடுத்து ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.சூது கவ்வும்  2013 ஆண்டில் இது வரை பார்த்த படங்களில் தி பெஸ்ட் அண்ட் பெர்பெக்ட் என்டேர்டைன்மென்ட்!  
♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... 

Post Comment

No comments: