Thursday, May 9

நீ கோரினால் வானம்...

உங்களுக்கு காதல் என்பது முட்டாள்தனம் என்று தோன்றினால் இதை வாசிக்க வேண்டாம். இதை வாசிப்பதால் என்ன வந்துவிடும் என்று எதிர்வினை புரிபவராய் இருந்தால் கண்டிப்பாக இதை வாசிக்கவே  வேண்டாம். காரணம் இது உங்களது வாழ்கையை மாற்றப்போகும் கேள்விகளோடும், கோடிகளோடும் வரப்போகும் பதிவு இல்லை.. இதை வாசிப்பதால் உங்கள் நிகழ்கால வாழ்வின் எந்த பிரச்சினையும் மாற்றத்திற்கு உள்ளாகப்போவதும் இல்லை. அதனையும் மீறி வாசிக்க நினைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இதை உங்கள் ஆபீசிலோ.. இல்லை பொது இடத்திலோ வாசிக்காதீர்கள். (ஒரு கதை சொல்ல முதல்ல எவ்வளோ பில்ட் அப் பண்ணவேண்டி இருக்கு! ...ஷ்ஷ்ஷப்பா!!)
************************************************************************************************************

"நீ... கோரினால் வானம் 
மாறாதா..
தினம் தீராமலே மேகம்
தூறாதா.."

இது சினிமா பாட்டுன்னு உங்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு, என்னோட தேவதை என்னை அழைக்கும் பாட்டு. அவளோட அழைப்பு வரும் போதெல்லாம் இது தான் என் ரிங்டோன்! எடுத்து பேசினேன்...

......ன்னைக்கு தான் அவளை முதல் தடவையா சினிமாவுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன். லவ் பண்ண ஆரம்பிச்சு, போன மாசத்தோட ஒன்னேமுக்கால் வருஷம் ஆச்சு. ஏன்டா இவ்வளோ நாளா நீ அவளை சினிமா கூட்டிட்டு போகவே இல்லையா? என்னடா பண்ணிட்டு இருந்த? அப்பிடின்னு நீங்க கேட்குறது எனக்கு விளங்குது. நிஜமாவே சொல்லுறேன். அன்னைக்கு தான் முதல் தடவை.

நாங்க லவ் பண்ணுன இத்தனை மாசத்துல அவளை நான் சந்திக்குறது ரொம்ப குறைவு தான். போன்ல தான் நிறைய பேசிப்போம். அவளை முதல்ல மீட் பண்ணினது என் நண்பனோட அப்பா இறந்த சமயம்தான். சொந்தக்காரங்க எல்லாம் வந்துசேரும் வரைக்கும் பாடியை மூணுநாள் அவங்க வீட்டுலேயே வைச்சுருந்தாங்க. என் நண்பனுக்கு ஒரு தங்கை. அவளோட கிளாஸ்மேட்தான் நம்ம ஆளு. மூணு நாளும் அதே எழவு வீட்டுல கடைசிவரைக்கும் அவனோட தங்கச்சிக்கு துணையா இருந்தவளை, நான் கடைசிநாள் தான் பார்த்தேன். இந்த இடத்துல ஒன்னு சொல்லனும்னு ஆசைப்படுறேன். லவ்வுன்னு ஒன்னு வரணும்னா அதுக்கு எழவு வீடுன்னும் பார்க்காது. அட ஆமாங்க! பார்த்த உடனே காதல் பத்திகிச்சு.

அப்பறோம் ஒரு சுபயோக சுபதினத்துல லவ் ப்ரபோஸ் பண்ணி அவங்களை ஓகே பண்ணிட்டேன். எப்பிடி என்னன்னு எல்லாம் கேட்காதிங்க. நான் எப்படி அவங்களை சம்மதிக்க வைச்சேன்னு சொல்றதுக்காக இங்க வரலை. அன்னைக்கு படம் பார்க்க போனோம் தானே. அதை தான் முக்கியமா சொல்லணும். ஆங்.. அப்போறோம் இன்னொரு விஷயம். நான் அவங்களை கடைசிநாள் தான் பார்த்தேன்னு சொன்னேன் இல்லையா? ஆனா  அவங்க என்னை மூணு நாளா வாட்ச் பண்ணிடே இருந்துருக்காங்க. போன மாசம் தான் எனக்கே தெரியும். அவங்களே சொன்னாங்க. சிட்டில ஒரு முக்கியமான ஸ்கூல்ல, பிரைமரி கிளாஸ்டீச்சரா இருக்காங்க.

இப்போ மேட்டர்க்கு வாரேன். அன்னைக்கு வியாழக்கிழமை. படம் பகல்காட்சி. நான் வேலைக்கு லீவு போட்டுட்டு காலையிலேயே வீட்டுல இருந்து கிளம்பிட்டேன். பிரெண்டு வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டேன். லீவு போட்டுட்டு வீட்டுல இருந்தா அம்மாகிட்ட தப்பவே முடியாது. ஏதாவது வேலை சொல்லி நாள்பூராவும் என்னை அலைய விட்டுருவாங்க. அதனாலேயே நான் அன்னைக்கு வீட்டுல இருக்க கூடாதுன்னு நினைச்சுட்டேன்.

அவளுக்கும் எனக்கும் வீக் எண்ட்ல எங்கயுமே போக முடியாது. அதுலயும்  சிட்டியில எங்கேயாச்சும் கூட்டமா இருக்குற இடத்துக்கு போகவே முடியாது. எல்லா இடத்துலேயும் அவளோட ஸ்டுடன்ட்ஸ். இல்லேன்னா அவங்க பேரண்ட்ஸ். பார்க், பீச்சு, அட ஏன்? கோவிலுக்கு கூட கூட்டிட்டு போனது இல்லை. பார்த்தே ஆகணும்னு தோணுனா எங்கயாச்சும் கூட்டம் குறைவா இருக்குற ஒரு காபி ஷாப். அதுவும் இல்லேன்னா, காலியா இருக்குற ஒரு பஸ். அதுவும் ஒரு பத்து டூ பதினைஞ்சு நிமிஷம். யாராச்சும் ஒரு ப்ரெண்ட் வீட்டுல மீட் பண்ணிக்கலாமேன்னு கேட்குறிங்களா? சான்சே இல்லை. ஏன்னா, நாங்க லவ் பண்ணுறது எங்க பிரெண்ட்ஸ்க்கு யாருக்குமே தெரியாது. சொல்லப்போனா எங்க காதலுக்கு காரணமா இருந்த, அப்பா இறந்து போன என் நண்பனுக்கு கூட தெரியாது. நம்புற மாதிரி இல்லையேன்னு தானே பார்குறீங்க. அவங்களோட கண்டிஷன் அப்படி. தன்னோட பெயர் கெட்டுட கூடாது. மத்தவங்க முன்னால தேவை இல்லாம தலைகுனிய கூடாதுன்னு ரொம்ப கட்டுப்பாட்டோட தான் இருப்பாங்க.  இப்போ மட்டும் எப்பிடி என்கூட சினிமாவுக்கு வர சம்மதிச்சாங்கனு கேட்குறிங்களா? அது என் சாமர்த்தியம். சம்மதிக்க வைச்சுட்டேன். அவளுக்கும் அன்னைக்கு ஸ்கூல் லீவு.

முதல்நாள் ராத்திரியில இருந்து எப்பிடியும் 100 தடவை, போன்ல அப்பிடியும் இல்லேன்னா சாட்டிங்ல  கேட்டிருப்பாள்.. "கண்டிப்பா நாங்க படம் பாரக்க  போகனுமா? டேய்.. யாராச்சும் கண்டால் பெரிய சிக்கல் ஆகிடும்டா! நல்லா சாமி கும்பிட்டுகோடா.. யாரு கண்ணுலயும் பட்டுட கூடாது!". இதே புராணம் தான். காலையிலேயும் அதையே ஆரம்பிச்சுட்டாள். என்ன படம்? அவளும் கேட்கலை.. நானும் சொல்லலை! அதை யாரு சார் பார்க்குறது. எனக்கு அவகூட தனியா இருக்கணும். அவ்வளோ தான். 

பகல் 1.30 மணிக்கு தான் படம் ஆரம்பிக்கும். டிக்கெட் முதல் நாளே எடுத்துட்டேன். நேரம் 1 மணி ஆகிடுச்சு. பன்னிரெண்டரை மணிக்கு வரச்சொல்லி இருந்தேன். அவகிட்ட இருந்து கால் வரவேயில்லை. ஆளையும்  காணோம். நான் கால் பண்ணினால் ரிங் போகுது. நோ ஆன்ஸ்வர்.  மெசேஜ் பண்ணினால் ரிப்ளை இல்லை. தியேட்டர் பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாண்ட்ல மீட்-பண்ணுறதா தான் பிளான். பஸ் எல்லாம் கூட்டம் கூட்டமா வருது ஆனா எனக்கு அவள் இல்லாத பஸ் எல்லாம் வெறுமையா தான் தெரிஞ்சுது(எழவு!.. கவிதை வேற!).

நேரம் ஒன்றரை. ஆளை காணோம். வீட்டுல இருந்து கிளம்பும்போது  கால் பண்ணுறேன்னு சொல்லி கடைசியா மெசேஜ் பண்ணி இருந்தாள். ஆனால் இப்போ வரைக்கும் காலும் இல்லை மெசேஜ்ஜும் இல்லை. என்னால அதுக்கு மேல அங்க இருக்க முடியல. என்னைக்காவது உங்க உடம்புல கடுமையான சூடும் கடும்குளிர்ச்சியும் ஒரே நேரத்துல இருக்குறதை உணர்ந்திருக்கிங்களா நீங்க? எனக்கு அப்போ அப்பிடிதான் இருந்தது. அவ வீட்டுக்கு கால் பண்ணி பார்க்கணும்னு தோணுச்சு. ஆனால், நான் கால் பண்ணி வேற யாராச்சும் போன் எடுத்தால் என்னான்னு கேட்பேன்? அலைபாயுதே படத்துல மாதவனுக்கு எப்பிடி இருந்துச்சோ அப்பிடி தான் இருந்துச்சு எனக்கும். அவளோட வீட்டுக்கு போயிட்டு பார்க்கலாம்னு நினைச்சேன். ஒரு பைக் இல்லாத குறை எனக்கு இவ்வளோ நாள் விளங்கினதேயில்லை. இப்போ தான் முதல்தடவை அதை உணர்ந்தேன். மனசு முழுக்கவும் ஒரு விதமான பாரம் இருக்குற மாதிரி உணர்ந்தேன். தலைக்குள்ள ஏதோ ஒரு சத்தம். எதையுமே தெளிவா யோசிக்க முடியலை. ஒரு வேளை அவளுக்கு எதுவும் ஆகி இருந்தா!!.. நிஜமா சொல்லுறேன்.. அப்பிடி ஏதும் நடந்துருந்தா நான் செத்துடுவேன். எனக்கு அப்போ அதுதான் தோணுச்சு. ஆனால் மனசுல ஒரு தைரியம். அவளுக்கு எதுவுமே நடந்திருக்காது. 

ஆனால் அவ ஏன் இன்னமும் எனக்கு மெசேஜ் பண்ணலை? ஏன் எனக்கு இன்னும் கால் பண்ணலை? என்னோட மொபைல் போனை பார்த்துகிட்டே இருந்தேன். எனக்கு அப்போ உலகத்துலேயே மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு அது தான் தோணுச்சு. மனசுக்குள்ள சொல்லிகிட்டேன்... "கால் பண்ணிடு.. கால் பண்ணிடு... என்னை தவிக்க விடாத கால் பண்ணிடு.." சொல்லிகிட்டே இருக்கும் போது நான் இருக்குற திசைக்கு எதிர் திசையில ஒரு ஆம்புலன்ஸ் வண்டி சைரன் சத்ததோட கடந்து போச்சு...

"......."

"......."

"......."

"நீ... கோரினால் வானம்
மாறாதா..
தினம் தீராமலே மேகம்
தூறாதா.."


"ஹலோ... டேய்...  சாரி டா...  என்னடா?... கோவமா?... இங்க கேளேன்... இன்னைக்கு படத்துக்கு வேண்டாம்டா!... நாம கல்யாணத்துக்கு அப்பறம் எங்க வேணும்னாலும் போகலாம்டா! டேய்..  நான் இன்னைக்கு வரலடா!.. யாராச்சும் பார்த்துட்டு எங்க வீட்டுல சொல்லிட்டா போச்சு.. இங்க கேளேன்... என்னடா?... கோவமா?..."

"......."

Post Comment

No comments: