Saturday, April 20

சொன்னா புரியாது!

வசரமவசரமாய் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்.

(என்னைக்குன்னு எல்லாம் சரியாய் ஞாபகம் இல்லை.போன வாரமோ.. இல்லேன்னா அதுக்கு முதல் வாரமோ.. அதுவா முக்கியம்!, விஷயத்தை படிங்க!)




நான் தங்கி இருக்குற அப்பார்ட்மென்ட்ல இருந்து நடந்தால் 10 நிமிஷம் கூட பிடிக்காது என் ஆபீஸ்க்கு. 9 மணிக்கு தான் வேலை ஆரம்பிக்குற நேரம். 08.45க்கு வீட்டுல இருந்து கிளம்பிடுவேன்.வெளிநாட்டுல வேலை செய்யுறதால, கூடவே சில வேறு நிறுவனத்தின் நண்பர்கள் தங்கி இருக்காங்க. அவங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முதல்ல நான் கிளம்பிடுறது வழக்கம். மொத்தம் 5 பேர். அதில் நான் மட்டும் வேறொரு நிறுவனத்தில் வேலை.

ஆனால் அன்றைக்கு ரொம்ப நேரமாகிடுச்சு. கைப்பேசி நேரம் 08.55 am. என் வீட்டு சாவி, ஆபிஸ் சாவி எல்லாம் எடுத்துகிட்டு வேகமா கிளம்பிக்கிட்டு இருந்தேன். நான் இருக்குற 9வது மாடியில இருந்து லிப்ட் வழியா கீழ இறங்கனும். லிப்ட் வேலை செய்யல. எனக்கு வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வந்துச்சு! வாழ்வின் பெரும் சங்கடங்கள் தொடங்கி, அடுத்தவரை சங்கடமில்லாமல் கடந்து வருவது வரைக்கும் , "வடிவேலன் வசனம்" தான் துணை! அது தான் வசதியாவும் இருக்கு.

லிப்ட் வேலை செய்யுதில்லைன்னு தெரிஞ்சுகிட்டே திரும்ப திரும்ப பட்டனை அழுத்தினேன். என் மனசுக்கு விளங்கினது, மரமண்டைக்கு விளங்கிதொலைக்கும் போது  நிமிசத்தின் பாதி கடந்து விட்டது. மாடி படிக்கு  வெளியாகுற கதவை திறக்கும் போது ஒரு வயசானவர் எனக்கு மேல் மாடியில இருந்து மெல்ல மெல்ல இறங்கிக்கிட்டு இருந்தாரு. முகத்தை கூட சரியாய் பார்க்கலை. அவரோட அரைக்காற்சட்டையும்,போட்டிருந்த Shoeவும்  சொல்லிடுச்சு நடைபயிற்சிக்கு  கிளம்புராருன்னு. எனக்கிருந்த பரபரப்பில எதையுமே கண்டுக்காம வேகமா கீழ இறங்கி ஓடினேன். வாசலுக்கு வந்து, என் கோபத்தையெல்லாம் செக்யூரிட்டிகிட்ட காட்டறதுக்கு கூட நேரமில்லை. அது நியாயமே இல்லைனாலும், நேரம் போன கடுப்புல, அவனை ஒரு முறைப்பு முறைச்சுட்டு என் ஆபீஸ் போகுற வழியில திரும்பி நடந்தேன். வந்து சேர்ந்துட்டேன்! எண்ணி ஏழே நிமிஷம். ஆனா வந்து சேரும் வரைக்கும்... அப்பப்பப்பப்பபா......!!!!

இனிமே எதுனாலும் சரி, உலகமே இடிஞ்சு விழுந்தாலும் நேரத்துக்கு வேலைக்கு வரணும்னு நினைச்சுகிட்டேன். லிப்ட்ன்னு ஒன்னு இல்லாம போகும் போது தான் இந்த ஞானம் எல்லாம் உதிக்குது. யோசிச்சுகிட்டே என் பாக்கெட்ல கையை நுழைக்கும் போது தான் கவனிச்சேன், என் மொபைல் போன் என் பாக்கெட்ல இல்லை. சுழலும் உலகின் நொடியொன்று என் காலின் கீழே நழுவிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்! செய்ய நெனைச்சது செய்ய வந்தது எல்லாமே அப்பிடியே மறந்து போயிருச்சு! சரியாய் சொல்லனும்னா "நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்" பாட்டு Scene தான்! ..cell இன்றி ஓர் அணுவும் அசையாது! 

யாரெல்லாம் call பண்ணுவாங்க., boss என்னை தேடி  call  பண்ணிருப்பரோ, போன் எங்க வைச்சேன், என்கூட வீட்டுல தங்கி இருக்குற மத்த நண்பர்களுக்கு call பண்ணுவமா, அவங்க போன் நம்பர்க்கு நான் எங்க போவேன். எடுத்து வந்து தருவாங்களா? அட ச்சே! எப்பிடி மறந்தேன்! அடுத்து  என்ன பண்ணுறதுன்னு  நெனைச்சு முடிக்குற  நேரம் நான் என் வீட்டுக்கு நடந்துகிட்டு இருந்தேன். அப்பார்ட்மெண்ட் கிட்ட வந்த பிறகு தான் லிப்ட் வேலை செய்யாதுன்னு ஞாபகம் வந்துச்சு! வாசலை கடந்து படி ஏறும் வழிக்கு திரும்பும் போது என்னை கடந்து போனார் அந்த முதியவர். அவரே தான்! நான் இறங்கும் போது எனக்கு மேல் மாடியில இருந்து இறங்கிய அந்த வயசான தாத்தா! எப்பிடி 9ஆவது மாடிக்கு ஏறினேன். வீட்டு கேட்'ஐயும் கதவையும் எப்பிடி திறந்தேன். அதெல்லாம் ஞாபகம் இல்லை. என் டேபிள் மேலே இருந்த என் மொபைல் போன்'ஐ  கைக்கு எடுத்த போது தான் என்னை சுற்றி ஒரு உலகம் இயங்குவது புரிந்தது! நேசம் கொண்ட கைப்பேசி ஸ்பரிசம் பட்டதும் தான் என் சுவாசம் உணர்ந்தேன்..! திரும்பி வந்து என் வேலை தளம் சேர்ந்து, என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். நவதுவாரங்களிலும் என் உடல், உயிர் உணர்த்திக்கொண்டு இருந்தது. என் மேசையில கைபேசியை வைச்சுட்டு, மெல்ல யோசிக்க தொடங்கினேன்..


ஏன் இந்த படபடப்பு? எதுக்காக இந்த ஓட்டம்? இந்த கைபேசியை நான் என் தேவைக்காக பயன்படுத்துறதுக்கு வாங்கினேன். ஆனால், இது இல்லாமல் வாழ்கையே இல்லைன்னு சொல்லுற அளவுக்கு நான் என்னை இழந்து தவிக்குறேன். எப்பிடி, இதுக்கு முன் தலைமுறை எல்லாம், இதெல்லம் இல்லாமல் வாழ்ந்தாங்க? ஒரு கடிதம் எழுதி, தொலைவுல இருக்குற நண்பருக்கோ, காதலிக்கோ, உறவினருக்கோ பரிமாறிகிட்டு, அந்த கடிதத்திற்கு மறு கடிதம் வரும் வரைக்கும் எப்பிடி நிதானமா வாழ்ந்துருப்பாங்க. என்ன ஒரு வாழ்க்கை நாங்க இப்போ வாழ்ந்துகிட்டு இருக்கோம்? இந்த பதிவின் ஆரம்பத்தில், போட்டுருக்குற படத்தை போலத்தான் வாழ்கை. இருக்குறதை விட்டு இன்னொரு வாழ்க்கைக்குள்ள தாவி போனாலும், அதுவும் சிறை தான்! 


எனக்கு ஒரு நிமிஷம் அந்த வயசான தாத்தாவோட வாழ்க்கை கண்ணுக்கு முன்னால வந்துட்டு போச்சு! சரி.. இதை பத்தி ஒரு நல்ல status போடணும்னு அவசர அவசரமா போன்ல facebook log in ஆனேன்... (தலைப்பை வாசிங்க!)

Post Comment

No comments: