Friday, April 12

...யோசிக்கிறேன்!

...தொடர்ந்து மனவேதனைக்கு உள்ளாகி வெறுப்போடும், விரக்தியோடும் காலத்தை கழிக்கின்ற, ஒரு நண்பனுக்கோ அல்லது நண்பிக்கோ ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்து வரும் போது, நமக்கு ஆறுதல் சொல்ல யாரோ ஒருவரை தேட வேண்டி இருக்கிறது! ...யோசிக்கிறேன்!


...எத்தினையோ சந்தர்பங்களில் அறிமுகமில்லாத புதியவர்களை வாழ்கையில் சந்திக்கிறோம், உரையாடுகிறோம், கடந்துவருகிறோம். ஒருசிலரிடம் எதையோ ரசிக்கமுடிகிறது. ஒரு சில நேரத்தில் சில புதியவர்களிடம் எந்த ஈடுபாடும் வருவதே இல்லை. ஒருவரை நேசிக்கவும், வெறுக்கவும் காரணம் தேவைப்படுகிறது. அடையாளங்களையும், தகுதிகளையும் வைத்து ஒருவரை நிர்ணயிக்குற மனதை ஏன் படைத்தான் ஆண்டவன்? ...யோசிக்கிறேன்!






...நான் ஜனாதிபதியானால், என்கிற தலைப்பில் சிறு வயதில் பாடசாலையில் கட்டுரை எழுதிய ஞாபகம். இப்போதெல்லாம் அப்படி தலைப்பு கொடுக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் எனக்கு. மாணவர்கள் என்ன எழுதுவார்கள்? ...யோசிக்கிறேன்!

...புள்ளிகள் குறித்து ஒரு கோலத்தை வரைந்து விடுவதை போலத்தான் சில பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆசைகளை தோ(தூ)ண்டி முழுமையாக காதலை வரைந்து விடுகிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு, தான் வரைந்த கோலத்தை தானே அழிக்காமல் இருக்க முடிகிறது? நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை எண்ணி பார்த்தால் பாவமாய் இருக்கிறது. இது தலைகீழாய் இருப்பது போன்றும் நிகழ்கிறது என்கிற அச்சம் எனக்கு! ...யோசிக்கிறேன்!


...காரணங்களால் தான் உறவுகள் இடத்தில் ஒரு செயற்கைத் தனமான நேசம்  இயங்கிக் கொண்டிருக்கின்றதோ என்கிற கேள்வி பலசமயம் வந்ததுண்டு. நண்பனிடத்திலோ அல்லது காதலியிடத்திலோ கூட மனிதனுக்கு நேசம் கொள்ள காரணம் தேவைப்படுகிறது. பிறகெப்படி இயற்கையிடம் அன்பு வைப்பான் மனிதன். இயற்கை சமநிலை பாதிக்கப்படுவது கடந்த நூற்றாண்டை விடவும் பல மடங்கு அதிகமாகிக்கொண்டே இருப்பதாக சொல்கிறது புள்ளிவிபரம். சதாரணமாய் தூக்கி எறியும் குப்பைகளை குறைத்துக் கொண்டாலே போதும். இன்னும் பல நூற்றாண்டுகள் இயற்கை வாழும்! மனதை நோகடிக்கும் உறவுகளை போலத்தானே இயற்கையும் மனிதனால் காயப்படுகிறது. காயப்பட்ட இதயம் திருப்பி காயப்படுத்துவது இயல்புதானே? இயற்கையின் கோபம் மனிதனை விடவும் கொடியது! ...யோசிக்கிறேன்!
...யோசிக்கிற எத்தினையோ  சங்கதிகளை இங்கே பகிர்ந்து கொள்ளத்தான் ஆசை. வாசிப்பவர்களின் கண்களில் சிக்கி, என்னையும் என் வாழ்கையை பற்றிய அபிப்ராயத்தையும் அவர்களிடம் பகிர்ந்து விட்டு, என்னோடு சேர்த்து அவர்களையும் யோசிக்கவைத்துவிட்டு நகர்ந்துபோவதால் மட்டும் என்ன நடக்கும்? எது மாறும்? ...யோசிக்கிறேன்!

Post Comment

No comments: