Thursday, September 12

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! தொடர் - 2

டார்ன்னு ஒரு பிளாஷ் பேக்..

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். என் அக்காவின் சக வயது தோழி, சமந்தி அக்கா. நாங்க இருந்த வீட்டு பக்கம் தான் இருந்தாங்க. அவங்க வீட்டுல இருந்து என் அக்கா கொண்டு வந்த கவிதை புத்தகம் ரொம்ப நாளாக வீட்டில் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் இருந்த பெயர் என்னை ஈர்க்க எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.   

மு.மேத்தா. நான் வாசித்த முதல் கவிஞர். புத்தகத்தில் முதல் சில பக்கங்களை திறந்ததுமே மனச் சிறகு முளைக்க ஆரம்பித்தது எனக்கு. கவிதையில் இருக்கிற இலகுவான வர்ணனைகளை, வார்த்தை ஜாலங்களை எல்லாம் ரசிக்க தொடங்கியிருந்தேன். கவிதை எழுதும் ஆர்வமும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கவிதை எழுதும்  பழக்கம் என் பதின்ம பருவத்தில் ஆரம்பித்தது.



...ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் தமிழ் மிஸ் ஒரு ஹோம் வோர்க் கொடுத்தாங்க, நிலாவை பத்தி ஏதாச்சும் கதை இல்லேன்னா கவிதை எழுதனும்னு. எனக்கு அப்போ கதை எழுத வராது (இப்ப மட்டும் வருதோ?'ன்னு எல்லாம் கேட்க கூடாது). சரி, கவிதை எழுதலாம்னு வீட்டுல போயிட்டு நைட் எல்லாம் கிடந்து யோசிச்சுட்டு ஒரு பத்து வரி கவிதை எழுதினேன். எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஹோம் வொர்க் செய்த ஒரே பாடம் அதுவா தான் இருக்கும்.

மறுநாள் அதை கிளாஸ் பசங்களுக்கெல்லாம் காட்டி முடிச்சுட்டு, டீச்சர் வந்ததும் பெருமையா கொண்டு போய் நீட்டினேன். வைச்சுட்டு போ பார்க்குறேன்னு சொன்னாங்க. இடது பக்கம் இருந்த என் பல்லெல்லாம் நறுக் நறுக்ன்னு சத்தம் போட்டது டீச்சர்'க்கு கேட்டுருக்க சான்சே இல்லை. வீட்டு பாடம் செய்துட்டு வந்த புள்ளைக்கு மரியாதை இல்லாத சமூகத்து மேல கோபம் கோபமா வந்துச்சு. நோட்டு புத்தகத்தை மேசையில் வைச்சுட்டு திரும்பும் போது நம்ம கோபம் காணாமல் போயிடுச்சு..!

அந்த கவிதை எழுதி அடுத்த வாரம், என் கிளாஸ்க்கு சீனியர்ஸ் சிலர் வந்து, ஒரு தமிழ் தின போட்டி நடக்க இருக்குது யாராச்சும் பெயர் கொடுக்க விருப்பமான்னு கேட்டு பெயர் வாங்கிட்டு போனாங்க. போட்டியில கலந்துக்குறதுக்கு இருந்த ஆர்வம்., கவிதைக்காக பெயர் கொடுத்துட்டு விட்டுட்டேன். 

இரண்டு வாரம் கழிச்சு, மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழி தினப்போட்டி. கொழும்பு-13, புனித அன்னம்மாள் பாடசாலை வளாகம். போய் நின்னா ஒரு திருவிழா கூட்டம்.  கவிதைக்காக தேர்ந்தெடுக்கபட்ட எல்லாருக்கும் ஒரு வகுப்பு அறையில் இடம் கொடுத்தாங்க. கொடுத்த மூன்று தலைப்பில் ஒன்று நிலா பற்றியது. கேட்கவா வேணும், தமிழ் டீச்சர்'க்கு எழுதின அதே கவிதையை வரி பிழை இல்லாமல்., எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன்! பரிசு கிடைக்கலை.

இப்படி ஆரம்பிச்சது தான் எனக்கு கவிதை கிறுக்கும் பழக்கம். அடுத்து அப்படியே, எல்லா வருசமும், தமிழ் தின போட்டிகள் எங்க நடந்தாலும், யாரு ஏற்பாட்டில் நடந்தாலும் பெயர் கொடுத்து கலந்துக்கிறது தான் வேலை. ஒரு சில இடங்களில் கவிதை எழுதினதுக்கு பரிசும் கிடைச்சது.

வைரமுத்து என்னை பைத்தியமாக்கினார். தபூ ஷங்கர் என்னை காதலிக்க தூண்டினார். பா.விஜய் எனக்கு மொழிவளம் பழக்கினார். வாலி என் தமிழை சந்தமாக்கினார். இன்னபிற கவிஞர்கள் என்னை உசுப்பேற்றியதை என்னால் மறுக்க முடியாது. கையில் கிடைத்த  புத்தகங்களை எல்லாம் வாசிக்கவும் செய்தேன். தமிழக மாத இதழ் , வார இதழ்கள் எல்லாம் எனக்கு டாஸ்க்மார்க் ஆனது. மொத்தத்தில் என்னை கவிதை எனும் ஆட்கொல்லி நோய் வாட்டியது!

இன்னொரு பிளாஷ் பேக் சொல்லுறேன்..

நான் பிறந்தது இறக்குவானை, இரத்தினபுரி மாவட்டம். என் அம்மாவோட ஊரு. ஆனாலும் படிச்சது வளர்ந்ததெல்லாம் கொழும்பு தான். என் அம்மா வழி சொந்தங்களில் ஊருல எனக்கு ஒரு சித்தி இருக்காங்க. மல்லிகா சித்தி. அவங்களோட மூத்த மகன், தர்சன். 
நீர்வீழ்ச்சி- இறக்குவானை 

அதே பதின்ம வயதில், ஒரு முறை ஊருக்கு போயிருந்த சமயம், தர்சன் அண்ணா எனக்கு அவருடைய ஒரு பழைய டயரி காட்டினாரு. கவிதை எழுதி அதுக்கு அவரே நல்ல படமும் வரைந்து வைச்சுருந்தாரு. எனக்கு அப்போ அது ஏதோ பெரிய விஷயம் மாதிரி இருந்துச்சு. டயரில எல்லாரும் தன்னோட தினசரி வாழ்கை பத்தி எழுதுவாங்க. ஆனால் அவரு அதையே அழகான கவிதை புத்தகமா மாற்றி இருந்தாரு.

நம்ம சும்மா இருப்போமா? தேடி புடிச்சு ஒரு பழைய டயரியை எடுத்து தோணுறதெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டேன். பக்கவாட்டுல படிக்கட்டா எழுதினதெல்லாம் கவிதைன்னு ஆகிடுச்சு. ஆனாலும்  வரைய தெரியல, எங்கயாச்சும் பேப்பர்'ல பார்க்குற அழகான படங்களை வெட்டி ஒட்ட தொடங்கிட்டேன். இந்த பழக்கமும் கவிதை கிறுக்குறதுக்கு காரணம் ஆகிடுச்சு. இன்னைக்கு தர்சன் அண்ணா இலங்கை சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரம். தர்சன் தர்மராஜ் என்கிற பெயரில் வலம் வரும் நடிகர்.

இதெல்லாம் இங்கே சொல்ல காரணம், இன்னைக்கு என் கவிதைகளுக்கு என்று சில ஆயிரம் ரசிகர்கள் (நான் கொஞ்சம் கணக்குல வீக்கு...) இருப்பதை பார்க்கிற பொழுது, என் ப்ளாக்'க்கு வருகிற வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்கும் பொழுது... ஒரு கவிதை நூல் வெளியிட சொல்லி வருகிற வாசகர் கடிதங்களை பார்க்கிற பொழுது (நம்புங்க!).. நானும் எதையோ சாதிக்குற மாதிரியான ஒரு மனப் பிரம்மை.

அது பிரம்மையானாலும், பிஸ்கோத்து ஆனாலும்.. எனக்கு கவிதை என்பது என்னை குஷிப்படுத்துகிற சமாச்சாரம் தான். ஒரு எண்ணத்தை கவிதையாக்கும் நிகழ்வு என்னை அந்த நிமிசத்தில் வாழ வைக்கிறது. நண்பர்களின் ரசனைக்கு என் கிறுக்கல்களும் தீனி போடுகிறது. என்னை கிறுக்கனாக்கிய அத்தகைய உறவுகளுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு.

கொஞ்சம் காலம் முன்னால, நான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் பொழுது, கவிதை மட்டும் எழுதவே கூடாது, வேற எது வேணும்னாலும் எழுதி பதிவு போடுவோம்னு தான் ஆரம்பிச்சேன். அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல.. எனக்கு கவிதை எழுதுறதுக்கு மட்டுமே இந்த ப்ளாக் ஆரம்பிசுட்டமோன்னு ஒரு நிலை வந்துரும் போல இருக்கு.. நல்ல கவிதைகளை கிறுக்கித்தள்ள வாய்ப்பு கொடுக்கும் எல்லாருக்குமே இந்த மனநிலையை காணிக்கையாக தாறேன். என் முகபுத்தக நண்பர்கள் தான் பொறுத்துக்கனும்..

அன்னைக்கு என் தமிழ் டீச்சர் கொடுத்த பத்துக்கு எட்டு மதிப்பெண் தான், இன்னைக்கு வரைக்கும் என் கவிதைக்கான உயர்ந்த அங்கீகாரம்'ன்னு நினைக்குறேன். 

....நினைவுகள் ஊறும்!

Post Comment

No comments: