Wednesday, February 25

அலைபாயுதே..

தேச்சையாய் அவனை பார்த்துட்டேன்...

இவன், இங்க என்ன செய்யுறான்? இல்லையே, நான் தானே இங்க வந்திருக்கேன்! இது, இவனோட இடமாச்சே! பத்துவருசம் இருக்குமா நான் இவனை நேர்ல பார்த்து. அதெப்படி எனக்கு அந்த நாள், அந்த காட்சி அப்படியே ஞாபகமிருக்கு. மறந்தே போய்டுச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன். மறக்கலை. ஞாபகம் வருது.. தெளிவா வருது!

~பிளாஷ்பாக்~

ஹாய் மயூரி! உங்ககூட பேசனும்!

ஆஹ்! என்ன சொல்லுங்க?

ஹ்ம்ம்.. அன்னைக்கி நீங்க பஸ்ல என்னை பார்த்து சிரிச்சிங்க..!

என்னைக்கி? ஓ....!! பஸ்ல லூசுத்தனமா கத்திட்டு இருந்திங்க. அதான்! சிரிப்பு வந்துது! சிரிச்சுட்டேன்!

“.............” 

சரி விடுங்க! உங்களோட போன் நம்பர் கொடுங்க! முக்கியமான ஒரு விஷயம் பேசனும்!

என்ன விசயம்? போன் எங்க வீட்டுல அவுட் ஓப் ஆர்டர்.

ஓகோ..! அப்போ இந்தாங்க, இந்த டைரியை பிடிங்க. இதுல சில கவிதைகள் இருக்கும். இந்த மூணுமாசமா நானே எழுதினது. வாசிங்க. வாசிச்சுட்டு.....

வாசிச்சுட்டு?

பிடிச்சுருந்தா.. நீங்களே வச்சுகோங்க! இல்லேன்னா..... திருப்பி தந்திடுங்க!

ம்.. தாங்க! 

-அதுதான் அவன் என்கூட பேசின முதல்நாள்.

இப்போ ஏன் நான் இப்படி நின்னுட்டுருக்கேன்? என்னை சுத்தி இவ்வளோபேர் இருந்தும் ஆள்அரவமே இல்லாத ஒரு தெருவுல இறங்கி நடக்குற மாதிரி இருக்கு! ஏன் இப்படி இருக்கு? அவன் என்னை பார்த்துட்டானா..? என்ன நடந்தாலும் நாம கெத்தா இருக்கணும். வழிஞ்சுட கூடாது..! அவனே பேசட்டும். நான் சிரிக்கலாமா கூடாதா? 

..அவனே தான்! அதே நடை! அதே வேகம்! தோள் ஒரு பக்கம் லேசா உயர்த்தி, காத்துல கைவீசி நடக்குற அதே நடை. இப்போவும் அதே மாதிரி ஒரு பரபரப்பு. இன்னுமா இவன் இப்படியே இருக்கான்? என்னை ஞாபகமிருக்குமா? அவ்வளோ ரசனையோட என்னை வர்ணிச்சு கவிதை எல்லாம் எழுதிருந்தானே? எப்பிடி மறந்திருப்பான்? ஆனால், இப்போவும் அப்படியேதான், லூசுத்தனமா இருப்பானா? மாறியிருப்பான்! நிச்சயமா பழைய ஆள் இல்லை இவன்! எனக்கு காதெல்லாம் சூடேருதே! கால்விரல் கூட கூசுதே! அய்யோ...

மயூரி! சிரிச்சு, நீயே உன்னை கவிழ்த்துடாதேடி! அவனை ஞபகமிருக்குற மாதிரி நடி..! குறுக்க பேசிடாதே..! அவனே கேள்விகேட்பான். நீ பதில் மட்டும் சொல்லு. முந்திப்போய் மூக்குடைஞ்சு நிக்காதே! வந்துட்டான்.. அவன்.. தான்... அவனே தான்! சிரிக்குறான்..!

ஹாய்... கிஷோர்!

(அடச்சே! முந்திட்டேனே..! மயூரி.. கண்...ட்...ரோல்ல்ல் டீ!)

ஏய்! நீ எங்க இங்க? எப்பிடி இருக்க? ர-ம்-யா... ரைட்?

கிஷோர்? நான் மயூரி, லெவன்த் ஸ்டாண்டர்ட்..? வாணி அகாடமி?

யாயா! ஐ ரிமெம்பர்! ....சும்மா!! ...கலாய்ச்சேன்!
 
(அடப்பாவி!)

ஏய்.. உனக்கு ஞாபகமா? அந்த லைப்ரரி கேட்? நான் கொடுத்த டைரி?

(போதும்ம்ம்ம்...வழியாதடி!)

நீ? நான்? அந்த பஸ் ஹால்ட்? 

(அப்பாடா!! இவன் எதையுமே மறக்கல!)

~பிளாஷ்பாக்~

இந்தாங்க..!

என்ன மயூரி? புடிச்சுருந்தா வச்சுக்கலாம்னு சொல்லித்தானே தந்தேன்!

புடிச்சுருந்தா தானே? 

“.............” 

பரவாயில்லை தாங்க! அடுத்து எங்க போறீங்க?

வீட்டுக்கு!

ஏன்? சையின்ஸ் க்ளாஸ்?

ஒஹ்.. அதெல்லாம் கூட தெரியுமா?

தெரியும்! உங்க க்ளாஸ் கார்டு நம்பர் கூட தெரியும்! டூ-த்ரீ-நைன்-த்ரீ! இதுலர்ந்து என்ன தெரியுது..?

வெட்டியா இருக்கிங்கன்னு தெரியுது!

“.............” 

இன்னைக்கு க்ளாஸ் இல்லையா?

இருந்துச்சு! சார் மோர்னிங் தான் கேன்சல் பண்ணினாரு.

வீட்டுக்கு தெரியுமா?

என்னது?

க்ளாஸ் இல்லைன்னு..?

தெரியாது..! நான் தான் வீட்டுக்கு போறேனே! அப்போ சொல்லிக்கலாம்!

சரி..! நீங்க கிளம்புங்க! பஸ் வந்துடுச்சு! 

இல்லை. இதுல போகலை. கூட்டம் அதிகமா இருக்கு!

“.............”

நிரம்பி வழியும் பேருந்து கூட வெறுமையாய் தெரிகிறது எனக்கு... உள்ளே நீ இல்லாததால்!
 
ஹ்ம்.. வாசிச்சேன்! நைஸ்!!

நைஸ் மட்டும்தானா?

“வெரி” நைஸ்..! இப்போ ஓகேயா?

..ம்!

-இவன் எதையுமே மறந்திருக்க மாட்டான்னு தெரியுது! அப்படின்னா, இப்போவும் என்னை பிடிக்குமா இவனுக்கு..! இத்தனை வருசத்துல இன்னொருத்தி வந்திருக்கமாட்டாள்ன்னு என்ன நிச்சயம்! இவனை பார்த்து நானேன் இப்படி ஆகிட்டேன்! ஏதேதோ பாட்டு வரியெல்லாம் ஞாபகம் வருதே! எனக்கு கூட பிளாஷ்பேக் வரும்னு நினைக்கவேயில்லை! 

நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? மயூரி.. உன்னத்தான்!

நான்!.. நான்.. இங்க என்னோட அத்தைவீட்டுக்கு வந்தேன்!

ஒஹ்! மேரேஜ் ஆயிடுச்சா? எத்தனை பசங்க!

நக்கலா? நான் சிங்கிள்! அத்தை மீன்ஸ் அக்காவோட அத்தை!

அட! ஆமால்ல? உன் அக்கா. கல்யாணி?

(பெயரெல்லாம் ஞாபகம் இருக்கே!)

நீ என்ன பண்ணுற கிஷோர்?

நான் மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ்!

(அதை கேட்கலடா! கேர்ள்ஃபிரன்ட் இருக்கா இல்லையா? அதை சொல்லு!)

உன் மொபைல் நம்பர் கொடு! வாட்ஸ்எப் இருக்கா? இல்லை இப்போவும் அவுட் ஓப் ஆர்டர் தானா?

(பாவி! என்னை ஒரு வழி பண்ணாம விடமாட்டான் போலருக்கே!)

நீ உன் நம்பர் கொடு! நான் எட் பண்ணிட்டு கூப்பிடுறேன்!

-நம்பரை கொடுத்துவிட்டு விலகிநடந்தவனை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே நின்றாள்! தோள் ஒரு பக்கம் லேசா உயர்த்தி, காத்துல கைவீசி நடக்குற அதே நடை. 


அவள் (அவனுக்கு) மேசேஜ் பண்ணட்டும் மிச்ச கதையை சொல்லுறேன்!

Post Comment

No comments: