Tuesday, September 24

சஹானா - ஒரு சாதாரண கதை

ந்த நேரத்துல யாரா இருந்தாலும் அப்படித்தான் முடிவு எடுத்திருப்பாங்க. கண்டிப்பா நான் செய்தது சரி தான் ராகுல். உன் அட்வைஸ் கேட்டுக்கணும்னு எனக்கு எந்த தேவையும் இல்லை. உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி. தயவு செய்து போனை வை. நான் பிறகு பேசுறேன். குட் பை ராகுல். 

-சடார் என்று போனை வைத்து விட்டு தனது அறைக்கு திரும்பினாள் சஹானா. 

மறுமுனையில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ராகுல் உடனே சஹானாவின் கைபேசிக்கு அழைத்தான். அழைப்பை துண்டித்தாள். மீண்டும் அழைத்தான். மீண்டும் துண்டித்தாள். பொறுமை இழந்த ராகுல் நேரே அவளை பார்க்க அவள் வீட்டுக்கு கிளம்பினான்.
 
சஹானா. ஒரு அட்வேர்டைசிங் கம்பெனியில் வேலை செய்கிறாள். ரொம்ப தைரியமான பெண். பேச்சிலேயே கவர்பவள். அவள் பேசாமல் விட்டாலும் எதிரில் இருப்பவரை கவரும் அழகு. எந்த காரியத்தையும் முடிவெடுத்து விட்டால் அவளை யாராலும் நிறுத்த முடியாது. தன் கருத்தை எவர் ஏற்காமல் விட்டாலும் தனது முடிவை மாற்றிக்கொள்ளவே மாட்டாள். அம்மாவோடு பந்தயமே பிடிப்பாள். ஜெயிப்பது சஹானா தான்.

மனதில் இருப்பதை பேசிவிடும் அவளது இயல்பினை கண்டு, அதை சகிக்காமல் நட்பு முறித்தவர்கள் தான் அதிகம். ஆனாலும் சஹானாவை முழுமையாக உணர்ந்தவன் ராகுல் மட்டும் தான். அவளது நீண்ட கால தோழன். ஐ.டி. கம்பனி பையன். ஒரு பொது நிகழ்வில் ஏற்பட்ட அறிமுக வாயிலான நட்பு. சஹானாவின் வீட்டில் கடந்த 5 வருடங்களில் தொடர்ந்து வந்து போகும் ஒரே ஜீவன் ராகுல் மட்டுமே. மீதி எல்லோருமே சஹானாவை கொஞ்ச காலத்திலேயே வெறுத்து விடுவார்கள். எப்போதாவது ஏதாவது சிக்கல் என்றால் ராகுல் தான் அவளை சமாதானம் செய்வான். இப்போது ஒரு புது சிக்கல்.  

சஹானாவின் அம்மாவை அலைபேசினான்.

ஹலோ! ஆன்ட்டி.. நான் ராகுல் பேசுறேன். சஹானா வீட்டுல தானே இருக்குறா?
நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் ஆன்ட்டி.. அவள் கேட்க மாட்டேங்குறாள். ஓகே. நான் அங்கதான் வந்துகிட்டு இருக்கேன் ஆன்ட்டி. இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன். தேங்க்ஸ் ஆன்ட்டி!...

பேசிக்கொண்டிருந்தவன், கைபேசியை இடது தோளுக்கும் காதிற்கும் இடையில் வைத்து அழுத்தியபடியே பர்சை வெளியே எடுத்து, ஆட்டோவிற்கு காசு இருக்கிறதா என்பதை சரிபார்த்தான்! மறுமுனையில் அழைப்பை துண்டிக்க முதலில்..

ஹ்ம்ம்!... ஹலோ!! ஆன்ட்டி... ஆன்ட்டி.. இருக்கிங்களா? ஆங்..! நான் வாரேன்னு அவகிட்ட சொல்லிடாதிங்க. அவளை எங்கேயும் வெளியில போக விடாம பார்த்துக்கோங்க. உடனே வந்துடுறேன். ஓகே ஆன்ட்டி தேங்க்ஸ்! சரி ஆன்ட்டி வைச்சுடுறேன்!   

- அலைபேசியதை அணைத்தான். ஆட்டோ பிடித்தான்.

சஹானாவின் வீடு குறுகலான ஒரு தெருவில் இருக்கிறது. ஆட்டோவை விட்டு இறங்கி நடந்தாலும் உள்ளே செல்ல 10 நிமிடம் ஆகும். சஹானா வீட்டை விட்டு கிளம்பிவிட்டால் அவளை மீண்டும் சந்திக்க நேரமாகும் என்பதை நினைத்து பதட்டத்தோடு ஆட்டோவை அவசரப்படுத்தினான். ஐந்தே நிமிடத்தில் தெரு வாசலில் வந்து நின்றது ஆட்டோ. இறங்கியதுமே கையில் இருந்த காசை ஆட்டோவிற்கு  கொடுத்துவிட்டு வேகமாக ஓடினான் சஹானா வீடு நோக்கி.

அம்மா தான் கதவை திறந்தார். தயக்கத்தோடு ராகுல் முகத்தை பார்த்தார். புருவத்தை உயர்த்தினான், சஹானா எங்கே என்பது அந்த கேள்வி.

உள்ள தான் தம்பி இருக்குறா. வெளிய எங்கேயோ போகணும்னு சொல்லிட்டு இருந்தாள். நீங்க தான் தம்பி அவகிட்ட சொல்லி இதை நிறுத்தனும். நானோ அங்கிளோ எவ்வளவோ சொல்லி பார்த்துட்டோம்.

-நொந்து போனவனை கெஞ்சினார் அம்மா. களைத்துப்போய் உள்ளே நுழைந்தான். மாடிப்படி ஏறி அவளது அறை கதவை தட்டினான். பதில் இல்லை.

சஹானா கதவை திற. நான் பேசணும் உன்கூட.

மீண்டும் தட்டினான். கூவினான். பதில் இல்லை. பதினைந்து நிமிடம் கழித்து முழுவதுமாக ஒரு மாடல் அழகி போல் உடை அணிந்து வெளியே வந்தாள் சஹானா. விலை உயர்ந்த பெர்ப்யூம் என்பது வாசனையிலேயே தெரிந்து.

எதுவும் பேசவில்லை அவள். ராகுல் தான் ஆரம்பித்தான்.

என்ன சஹானா இது.?

டொம்மி கேர்ள். உனக்கு அது வேணாம். நீ வேற ஏதாச்சும் ஜென்ட்ஸ் பிராண்ட் ட்ரை பண்ணு. 

சஹானாவின் பதில் புரியாது முழித்தான். சற்றே நொடியில் புரிந்தது. 

விளையாடாத சஹானா. உங்க கம்பனிக்கு எவ்வளவோ மாடல் கிடைப்பாங்க. நீ ஏன் இந்த விளம்பரத்துல நடிக்கப்போற?

சஹானா பரவசமானாள்.

நெறைய பணம் கிடைக்கும்டா. நானே  கம்பெனி பிடிச்சு, அவங்களுக்கு ஐடியாவும் கொடுத்து கடைசில அவங்க என்னையே நடிக்க சொல்லிட்டாங்க. ஐ ஆம் லக்கி யூ நொவ்?

அறிவு இருக்கா உனக்கு? சிகரேட் குடிக்குறதை பத்தி நடிக்கணும். அதுவும் கான்செர் பத்தின விழிப்புணர்வு. உன் வாழ்கையை பத்தி நினைச்சு பார்த்தியா? ஸ்மோக் பண்ணுறதை மாதிரி நடிச்சா உனக்கு யாராச்சும் உண்மையிலேயே அந்த பழக்கம் இருக்குதுன்னு நினைப்பாங்க இல்லையா?

- ராகுல் பதறினான்.

இங்க பாரு ராகுல். இந்த அட்வேர்டிஸ்மென்ட் முழுக்க முழுக்க என்னோட ஐடியா. நான் தான் "யாராச்சும் ஒரு பொண்ணு நடிக்கட்டும், அப்போ தான் நல்லா ரீச் ஆகும்'ன்னு சொன்னேன். கடைசி நேரத்துல இந்த கான்செப்ட் எனக்கே கிடைச்சுருக்கு. இதெல்லாத்தையும் விட, நான் செய்யப்போறது ஒரு நல்ல சேவையை தான். மத்தவங்க என்னை பற்றி என்ன நினைப்பாங்கன்னுறது எனக்கு கவலை இல்லை. இன்னும் அரை மணித்தியாலத்துல நான் ஸ்டுடியோ'ல நிக்கனும். வா என்னை ட்ராப் பண்ணு. வண்டியை நீ ஒட்டு. இந்தா சாவி!

சஹானா ஒரே மூச்சில் தீர்மானமாக பேசி முடித்தாள். ராகுல் என்ன சொல்ல போகிறான் என்பதை எல்லாம் பற்றி எதிர்பார்த்துக்கொண்டு நிக்காமல், அவளது அறையினை  தாழிட்டாள். ராகுல் அவளை தடுத்து கையை பிடித்து இழுத்து திருப்பினான்.

நீ பண்ணுறது முட்டாள்தனம். உன் வாழ்க்கை கெட்டு போயிடும்ன்னு தெரிஞ்சுகிட்டே நீ இப்படி பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை. சொல்லுறதை கேளு சஹானா.

கையை எடு... எடு கையை..!

-ரௌத்திர பார்வையோடு  சஹானா.

அப்போ நீ பண்ணுறதுக்கு பேரு என்ன இண்டேலிஜன்சியா? 5 வருசமா நான் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன். நீ சிகரேட் குடிக்குறதை நிறுத்துனியா? இல்லை தானே. கான்செர் வரும்னு தெரிஞ்சுகிட்டே தானே குடிக்குற?

அது வேற இது வேற சஹானா.

- சங்கடமாய் மாறியது ராகுலின் முகமும் குரலும்.

அப்பிடின்னா இதுவும் வேற தான்!

சஹானாவின் கர்வமான குரலை தொடர்ந்து மேல் மாடியில் திடீரென்று அமைதி பேசிக்கொண்டது. இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு கீழ் மாடியில் சஹானாவின் அம்மா இருப்பதை அப்போது தான் ராகுல் அவதானித்தான்.

ஓகே. நீ நிறுத்தனும்னா நான் நிறுத்தனும். அதுதானே வேணும் உனக்கு. சஹானா. ரைட் ஓகே. இன்னையில இருந்து இந்த நிமிசத்துல இருந்து நான் ஸ்மோக்கிங் பண்ணுறதை நிறுத்திக்குறேன். நீ இனிமே இந்த மாதிரி எல்லாம் பண்ணாத சஹானா. ஓகே யா? இதை உனக்காக மட்டும் இல்லை. உன் பேரன்ட்ஸ் ரெண்டு பேருக்காகவும் சேர்த்தே தான் சொல்லுறேன். நீ எடுத்த முடிவுனால அவங்க தான் ரொம்ப தவிச்சு போயிட்டாங்க.

ராகுல் நிஜமாகத்தான் அதை சொல்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. கையை நீட்டினாள். சத்தியம் கேட்டு ஜாடை செய்தாள்.

இதெல்லாம் தேவை இல்லை. நான் விட்டுட்டேன். நம்பு. உன் ஏஜென்ட் கிட்ட கால் பண்ணி சொல்லு. என்ன சொல்லுவாங்க? யாராச்சும் வேற ஒரு மாடல் புடிச்சு செய்துக்கலாமா? ஹ்ம்ம்..!

ராகுல் வெள்ளந்தியாய் கேட்டான்.

அதை நான் பார்த்துக்குறேன். நீ நிஜமாவே நிறுந்துறதுக்கு ரெடினா நான் அதை எல்லாம் பார்த்துக்குறேன். சொல்லு நிஜமா விட்டுடுவியா?

நான் விட்டுட்டேன். நீ உள்ள போ. நான் என் வேலை விஷயமா வெளிய போறேன்னு சொல்லிட்டு வந்தேன். ஆபீஸ் போயிட்டு கால் பண்ணுறேன். ஐ வில் சி யூ லேட்டர். பை.

சஹானாவிடம் விடை பெற்று, வீட்டை விட்டு வெளியேறியவனை வாசலிலே நின்றபடி ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டு நின்றாள் சஹானா அம்மா.

எடு ஆயிரம் ரூபா! என்னை யாருன்னு நினைச்ச? என்று தோளை தட்டி பின்னால் நின்றபடி சிரித்தாள் சஹானா, டொம்மி கேர்ள் வாசனையாய்.

Post Comment

No comments: