Wednesday, May 22

மற்றபடி நீ கொஞ்சம் கோபக்காரி..




கடற்கரையில் நின்று 
கால் நனைத்தபடி
நீ!
ஓரமாய் அமர்ந்து
உனை ரசித்தபடி 
நான்!
அலையோசையை விடவும் 
அதிகமாய் 
ஆர்ப்பரித்தபடி 
காதல்!

♂.. ♥.. ♀..



வாங்கிக்கொடுத்த சுடிதாரை
பிறந்தநாளன்று அணிந்து வந்து
அதன் அழகை பற்றி கேள்வி எழுப்பியவளிடம்
"உன்னை வைச்சுக்கிட்டு
எப்படி சுடிதார் அழகா இருக்குதுன்னு
பொய் சொல்லுவேன்"
என
பரிசளித்தேன்!


♂.. ♥.. ♀..  

உன்னிடம் பிடிக்காதது 
என்று எதுவுமே இல்லை..
மற்றபடி நீ கொஞ்சம்
கோபக்காரி..

♂.. ♥.. ♀..  

நம் குறுஞ்செய்தி தகவலை எல்லாம்
ஒரு புத்தகமாய் வெளியிட்டால்..
அடுத்த தலைமுறையின்
காதலுக்கு கையேடாய் உதவும்!

♂.. ♥.. ♀.. 


சேர்த்து வைத்த 
காதலை 
எல்லாம் 
அடுத்த சந்திப்பில் 
முத்தமாய் மொழிபெயர்த்தேன்!
"இவ்வளோ தானா!"
என்று போட்டாயே ஒரு போடு!


♂.. ♥.. ♀.. 

நீ வாங்கிகொடுத்த முதல் பரிசு
சட்டென ஞாபகம் வராமல்
முழித்துகொண்டிருந்தேன்..
கோபத்தில்
சிவந்துகொண்டிருந்தாய் நீ!
மெல்ல உன் காதின்
அருகே வந்து சொன்னேன்!
"உன்னோட ஞாபகம் மட்டுமே இருக்குறப்போ 
வேற எதுவுமே ஞாபகம் வருதில்லை எனக்கு!"

உன் கன்னத்தின்
ரோமங்கள் சிலிர்ப்பில்..
உன் கோபம்
வெட்கமானது
தெரிந்தது!


♂.. ♥.. ♀.. 

இரவில் ஒரு நாள் 
தூக்கத்தின்போது 
திடீரென குறுஞ்செய்தி அனுப்பி 
"ஐ லவ் யு சொல்லு"

என்கிற உன் காதலுக்காகவே 
உன் காதலானேன்!

Post Comment

No comments: