Saturday, April 13

முன்னபின்ன கொஞ்சம் பக்கத்தை காணோம்..

...இன்று/ நேரம்: இரவு 10.35

இன்னும் கொஞ்சம் நேரம் தான் இந்த வலி. அப்பிடியே கண்ணை மூடிக்கோ. உலகமே மறந்துரும். எதையும் உணர முடியாது. உடம்புல எதுவுமே இல்லாத மாதிரியும் காத்துல பறக்குற மாதிரியும் இருக்கும். யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு உன்னை கூட்டிகிட்டு போயிடும். சரியா இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு. ராஜ்.. ராஜ்.. நான் பேசுறது கேட்குதா.. ராஜ்.....


...இன்று/ நேரம்: காலை 10.30


ஏன்டா! இன்னுமா தூங்கிகிட்டு இருக்குற? எழும்பி பாரு, நேரம் என்னான்னு. டேய் ராஜ்! எழும்புடா. நைட் ரொம்ப நேரம் அந்த கம்ப்யூட்டர்க்குள்ள தலையை விட்டுகிட்டு அப்பிடி என்னதான் பண்ணுவியோ? நீ எல்லாம் எப்பிடிதான் உருப்பட போறியோ? இதுவரைக்கும் எங்களுக்கு பெருமை தேடித்தாற மாதிரி ஏதாச்சும் பண்ணிருக்கியா? எல்லாத்துக்கும் மேல உன் ரூம்குள்ள வரவே அருவறுப்பா இருக்கு. பாரு எப்பிடி இருக்குன்னு. டேய் எழும்புடா.. தூங்குனது போதும்!.....



...இன்று/ நேரம்: மதியம் 12.35

நேத்து நைட் பேசினது மாதிரியே இன்னைக்கு எல்லா ப்ளானும் சரியா நேரத்துக்கு நடக்கணும். நாம யாருன்னு அவங்களுக்கு காட்டணும். ராஜ்., நீ ரெடியா இரு. நான், நீ, குரு.., நம்ம மூணு பேரையும் தவிர எங்க வீட்டுல வேற யாருக்குமே தெரிய கூடாது. போட்ட பிளான் எதையுமே மாத்திக்க வேணாம். சின்ன பிழை விட்டாலும் நம்ம மூணு பேரோட வாழ்க்கையும் வீணாப்போயிடும். உன்னைதான் நம்பி இருக்கோம்.. டேய் ராஜ்..கவுத்துடாதடா! புரியுதாடா.. ஒன்லைன்ல இருக்கியாடா? டேய் ராஜ்!..... 

...நேற்று/ நேரம்: மதியம் 01.55

சார்.. இவன்தான் ராஜ். இவனை இன்னைக்கு உங்ககிட்ட கூட்டிகிட்டு வாறதா, போன வாரம் சொல்லி இருந்தேன். இவனால தான் இந்த விசயத்துல நம்பி இறங்கி இருக்கோம். நீங்களும் ஒருதடவை இவனை டெஸ்ட் பண்ணி பார்த்துடிங்கன்னா, எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துடும். தைரியமா இருக்கும். சார்.. ராஜ் மட்டும் எங்களுக்கு ஓகே சொல்லி இருக்கலாட்டி இந்த சான்சே கிடைச்சுருக்காது சார். டேய் உனக்கு எப்பிடி நன்றி சொல்லுறதுன்னே தெரியலடா! ராஜ்... தேங்க்ஸ்டா! .....

...இன்று/ நேரம்: மாலை  06.15

யாரை எப்போ எங்க பார்த்தாலும் காலுல விழுந்துடனும் மச்சான். இந்த உலகத்துல சீக்கிரமே பெரிய ஆளா வரணும்னா இது தான் ஈஸியான வழி. எல்லாரும் வீட்டுக்கு போவோம். நைட் திரும்ப மீட்பண்ணலாம். ராஜ் நேரத்துக்கு வந்துருடா! நைட்  10 மணிக்கெல்லாம் அங்க இருக்கணும். குரு வண்டி எடுத்துகிட்டு வந்துருவான். நீ அவன்கூட வந்துடு. நீதான் எங்களுக்கு எல்லாமே. ராஜ்! காலத்துக்கும் உன்னை மறக்க மாட்டோம்டா. சரிடா!.. ராஜ் மறந்துடாதடா!.. இதை நாங்க செய்து முடிக்குற வரைக்கும் உங்க வீட்டுல யாருக்கும் சொல்லிடாதடா! ப்ளீஸ்டா!.....

...நேற்று/ நேரம்: இரவு  11.55

ஓகே பாய்ஸ்! நான் சொல்லபோறதை தெளிவா கேட்டுக்குங்க. யாருக்காகவும் இதை  நாங்க செய்யல. எங்களுக்காக செய்றோம். டேய் ராஜ்! சாட்டிங் ஹிஸ்டரியில எதையுமே வைக்காதடா. டிலீட் பண்ணிட்டு படு. நாளைக்கு எப்போவாச்சும், உங்க அக்கா சும்மா சரி இதை பார்த்துட்டா எல்லாமே வீணா போயிடும். எங்க மானமே போயிடும். இப்போ வரைக்கும் யாருக்கும் எங்க மேல சந்தேகம் வரல. யாருக்குமே இல்லாத நம்பிக்கையை நீதான்டா எங்க மேல வைச்சுருக்குற. உன்னை எங்களோட நண்பன்னு சொல்லிக்குறதுல ரொம்ப  பெருமையா இருக்குடா. நாங்க வேறொரு உலகத்துக்கு போக போறோம்..... 

...இன்று/ நேரம்: இரவு 10.24

டேய் சிரிச்சு மானத்த வாங்கிடாதடா.  உன்னை இத்தனை நாள் நம்பினதுக்கு இப்பிடியாடா பண்ணுவ? சார்.. சார்.. இப்போ சரியா பண்ணிடுவான் சார்.!. லாஸ்ட் சான்ஸ் சார்!.. டேய் ராஜ்.. படுத்துகிட்டு மட்டும் இருடா. வசனத்தை குரு பேசிடுவான். ஒழுங்கா நடிடா... அஞ்சாவது டேக் டா!.....
 

Post Comment

No comments: