Thursday, March 28

One நிமிட் for 5 மினிட்ஸ் (27-03-2013)

இந்த தலைப்பின் விளக்கம் மற்றும் முதல் பதிவு  இங்கே.

*************************************************************************************

மிக சிலரோடு பேசும்போது மட்டும் தான் மனதை இறுக்கமாக்கி கொள்ளாமல் பேசமுடிகிறது.மனதில் எது தோன்றுகிறதோ அதை பேசிவிடக்கூடிய தன்மை அந்த சில உறவுகளிடம் மட்டும் தான் வாய்க்கின்றது. அந்த உறவுகளை தான், எவ்வளவு காலம் கழித்தும் மீண்டும் சந்திக்கும்போது உரிமையோடு இறுக்கி அணைத்து கொள்ள முடிகிறது. அப்பிடியான உறவுகளை ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னர் புதிதாய் ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.


யோசித்து பார்த்தால், ஆழமாக ஒன்று புரிகிறது. வயதின் ஏற்றமும், அனுபவங்களின் முதிர்வும், மனத்தின் வாசல் படிகளை அடைத்துக்கொண்டே வருகிறது. அதனால் தான் புதிய உறவுகளிடம் அன்யோன்யம் மற்றும் நம்பகத்தன்மை அற்றுப்போகிறது.

ஆனால் இதையும் மீறி ஒரு புதிய உறவிடம் மனதை இழந்து விடும் போது அதை "ஆசீர்வாதம்" என்கிறோம். கடவுள் இருக்கிறார்.

*************************************************************************************
இருவாரங்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமை பொழுதொன்றில், நண்பர் ஒருவரோடு உரையாடிக்கொண்டு இருந்தேன். இடைக்கால பாடல்கள் பற்றிய பேச்சு தொடங்கியபோது, சில இசையமைப்பாளர்கள் குறித்து விவாதித்துக்கொண்டோம். அதில் ஒருவர் தேனிசை தென்றல் தேவா. அவரது பெரும் பாடல்கள் இன்றும் என் favourites பட்டியலில் இருக்கிறது. அதில் ஒன்று..


பாடசாலை காலத்து நினைவுகளை கொண்டு வருகிறது இந்த பாடல். நண்பர்களிடம் பாடிக்காட்டி பெருமை பட்டுகொண்ட ஞாபகங்களில் சிக்கிக் கொள்கிறேன். 

*************************************************************************************

"எல்லா விமர்சனங்களும் கால விரயம், பேப்பர் விரயம் என்று படித்தது ஞாபகம் வருகிறது. சாதரணமாக ஜனங்கள் விமர்சனத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு புத்தகத்தையோ அல்லது சினிமாவையோ தவிர்ப்பதோ தவிர்க்காமல் இருப்பதோ இல்லை என்று நினைக்கிறன். அவர்கள் முன்னாள் தீர்மானித்து விடுகிறார்கள். அவர்கள் சினிமா பார்ப்பதும், படிப்பதும் ஏதோ கலை உணர்ச்சியை பொறுத்து நிகழ்வதில்லை என்று நினைகிறார்கள். அவர்கள் கையில் இருக்கும் பணம், கடன் வாங்கும் திறமை, அவர்கள் நேர நிலைமை இவைகளை பொறுத்ததுதான். சினிமா கதைகள் எல்லாம் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒரு கலை வடிவம் என்று காட்டுவதற்கு நம்மிடம் உதாரணங்களும் இல்லை. இதுதான் இதில் சோகம்."



கணையாழியின் கடைசி பக்கங்களில், எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வரிகள் இவை. நவம்பர் 1972ம் வருடம் எழுதியவை. சமீப காலமாக சினிமாவில் நடக்கும் நிகழ்வுகளையும், பார்வையாளர்களான "ஒரு சில  பொதுமக்களின்" நடவடிக்கைகளும் இதை தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இன்னுமா இப்படியே இருக்கிறோம்.

*************************************************************************************
facebook காய்ச்சல்

ஓரிரு தினங்களுக்கு முன்னால் ஆனந்தவிகடனின் முகப்புத்தகத் தளத்தில் படித்த கவிதை இது.. 

நாற்காலி!

நான் வீடு திரும்பும்போதெல்லாம்
நாற்காலி
என்னோடு பேசுவதற்காகக்
காத்திருப்பதுபோலவே இருக்கும்.

சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு
ஆசுவாசமாக உட்காரும்போது
சந்தோஷம் அதன்
ஐந்தாவது காலாகும்.

என் அலுவலகப் பையோபைக் சாவியோ
துவட்டிக்கொள்ளும் துண்டோ
அதில் அமரும்போது
நான் மட்டும் அறியும்படி
புன்னகைக்கும்.

இரவுப் பொழுதுகளில்
எழுதவோ
படிக்கவோ உட்காரும்போது
என்கூடவே விழித்திருக்கும்
நான் படுக்கப் போகும்போது
பரிதாபப் பார்வை பார்க்கும்.

தரதரவென்று அதனையாராவது
இழுக்கும்போது
எனக்கு வரும் கோபம்தான்
அதற்கு நான் தரும்
கௌரவம்!
 
 -மானா பாஸ்கரன் 

சிலர் எழுதும் கவிதைகளில் எமக்கான வரிகள் இருக்கும்.. இது எனக்கான கவிதை. 
 

Post Comment

No comments: